உள்ளூர் செய்திகள்

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்! - என்னை நெளிய வைத்த ஸ்டாலின்!

கட்சியில் கருணாநிதிக்கு அடுத்தபடியான செல்வாக்குடன் இருந்த மு.க.ஸ்டாலினிடம், அவரது கட்சியைச் சேர்ந்த, புதுக்கோட்டையின் உயரிய பொறுப்பாளரை பற்றிய, எங்களது மனக்குறைகளை (புகார்களை) அவரிடமே சொல்லத் துணிந்ததும், அவர் வழியாக தீர்வு பெற வேண்டும் என்பதும், எனக்கு உடன்பாடான விஷயங்கள் அல்ல.இருப்பினும், இந்த மாதிரியாக ஆட்டம் போடும் ஒருவன் கொட்டத்தை அடக்க, ஒரு பத்திரிகையாளனுக்கு இல்லாத உரிமையா என்ற மனக்கேள்வியும், உறவினரின் வற்புறுத்தலும் என் செயலை நியாயப்படுத்திக் கொள்ள துணைபுரிந்தன எனலாம்.உறவினர், பாதிக்கப்பட்டவர் என்பதால், அவர் உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் ஓவராகப் பேசிவிட, 'என் விரலைக் கொண்டு என் கண்ணையே குத்திக் கொள்ள சொல்கிறீர்களா...' என்ற பாணியில் ஸ்டாலின் ஏதேனும் சொல்லிவிட்டால் என்ன செய்வது, நானே மிகப் பக்குவமாக எடுத்துச் சொன்னேன்.கண் கூட சிமிட்டாமல், கூர்மையாக கவனித்துக் கேட்டுக் கொண்ட ஸ்டாலினின் முகப்போக்கு, மாறியதை கண்டேன். அது என் மீதான பிரதிபலிப்பா, கட்சிக்காரர் மீதான கோபமா என, முதலில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.ஓர் அடையாள வார்த்தையைச் சொல்லி, 'அவரா...' என்றாரே பார்க்கலாம்.அவர் உதிர்த்த வார்த்தைகள், பல செய்திகளை எங்களுக்கு புரிய வைத்ததாக, நான் உணர்ந்தேன்.நான் புரிந்து கொண்ட அர்த்தம் ஒன்றை மட்டும் சொல்லட்டுமா?'அந்த ஆள் அப்படித்தான், தெரிந்தது தான்! உங்களிடமும் ஆரம்பித்து விட்டாரா?' என்பதே அது.'என்ன சாப்பிடுறீங்க?''ஒன்றும் வேண்டாம்...''நான் பார்த்துக்கிறேன்...' என்றார்.என் உறவினருக்கு ஒரு வகையில் ஆறுதல் என்றாலும், ஸ்டாலின் உடனே போனை எடுத்து, அந்தத் திருகுதாள மனிதரை லைனில் பிடித்து, ஒரு வாங்கு வாங்கவில்லையே, கையோடு விசாரிக்கவில்லையே என்ற ஏமாற்றம் இருந்தது.விடைபெற்று வெளியே வந்ததும், என் ஊகம் சரியெனும் விதமாக, 'கையோடு நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்தேன்...' என்றார், உறவினர் என்னிடம்.'அப்படி இல்லைங்க. கருணாநிதியே கட்சிக்கு எதிராகவும், தனக்கு எதிராகவும் நடந்தவர்களையும், பொதுவாழ்வில் கறைகளை சேர்த்துக் கொண்டவர்களையும் மிகக் கவனத்துடன் கையாண்டிருக்கிறார்.'ஒரு சம்பவத்திற்காக, கட்சியின் முக்கியப் பிரமுகர்களை ஏனோ தானோ எனக் கையாள முடியாது. நம்மை வைத்துக் கொண்டே விசாரிப்பதும், கண்டிப்பதும் நன்றாக இராது. பக்குவப்பட்ட தலைவர்களின் அணுகுமுறை, நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இராது.'நடந்தவை உண்மை தானா, பொய்யா, புனைந்துரையா, மிகைப்படுத்தலா என, வேறு, 'சோர்ஸ்' மூலம் விசாரிப்பார் போல! மேலும், அவரே போன் போட்டு பேசுமளவு அந்த கட்சிக்காரருக்குத் தரமோ, தகுதியோ இல்லாமல் இருக்கலாம். மாவட்ட அளவில் பெரிய பொறுப்பில் இருப்பவர் வழியே எச்சரிக்கை மணி அடிக்கப்படலாம்.'பொறுமையாக இருங்கள். ஒன்று மட்டும் உறுதி. நாளை முதல் புதுக்கோட்டைக்காரர் அடக்கி வாசிப்பார் அல்லது அவர் அடக்கி வைக்கப்படுவார், பார்த்துக் கொண்டே இருங்கள்...' என்றேன்.சரியான சப்பைக் கட்டு இது என்பது போல், என்னைப் பார்த்த அந்த உறவினர், 'என்னையும் நீங்கள் கொஞ்சம் பேச விட்டிருக்கலாம்...' என்றார்.இதற்கு நான், குரலற்றவனாகிப் போனேன்.வெகுநாள் ஆகியும் என் உறவினர் இந்த விஷயம் பற்றி என்னிடம் பேசாததால், பிரச்னை அடங்கிப் போனதாகவே உணர்ந்தேன்.'என்ன ஆச்சு! ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?' என, உறவினரை நான் கேட்டிருக்க வேண்டும். செய்தேனில்லை!நமது முதல்வரிடம் உள்ள நல்ல பழக்கம், நல்லது, கெட்டதுகளில் எவ்வளவு பரபரப்பிலும் தவறாமல் கலந்து கொள்வது. இதில் அவர் அளவு கடந்த நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் என்பதாகவே, நான் உணர்ந்திருக்கிறேன்.இதில் தரக்கூடிய மகிழ்ச்சியை, மனநிறைவை, ஆறுதலை வேறு எதிலும் தந்துவிட முடியாது என்பது, என் கருத்து. இந்த அவரது பண்பு, பாராட்டப்பட வேண்டியது.எவ்வளவு பரபரப்பிலும், பணிச்சுமையிலும் மின்னல் வேகத்தில் நுழைவார். மூன்றே நிமிடங்கள் தான். அதற்கு மேல் தங்க மாட்டார். புறப்பட்டு விடுவார். முன்வரிசை அமரல், உணவு உண்ணல் என, எவையும் கிடையாது.விசேஷ வீடுகளுக்கு செல்லும் போது, அவர் கொடுக்கும் பூங்கொத்து, ரோஜாக்களால் ஆனதாகவே இருக்கும். வேறு பூக்கள் இரா. இலை குழையெல்லாம் அதில் இராது. 2,000, 3,000 ரூபாய் மதிப்பு உடையதாக அப்பூங்கொத்து இருக்கும். வாங்கிக் கொள்பவர்களின் கை கனக்கும்.மிகச் சிக்கனமாகவே பேசுவார். ஓரிரு வாக்கியங்களுக்கு மேல் இராது.என் மகன் வரவேற்பு, என் தம்பி மகன் வரவேற்பு, தங்கை மகன் வரவேற்பு, என் மணி விழா என, எல்லாவற்றுக்கும் வந்துள்ளார்.இவற்றுள் ஒன்றிரண்டிற்கு நான் அழைக்கப் போகையில், அவர் வீட்டிலேயே இல்லை.நேரில் போய் பத்திரிகை கொடுத்து அழைக்கும் போது, அவர் இல்லாவிட்டாலும், சந்தித்து சின்சியராக அழைத்தால் எப்படி முக்கியத்துவம் தருவாரோ, அதே போல் எடுத்துக் கொண்டு, நிகழ்வில் கலந்து கொள்வார்.'சொல்லிவிட்டு வந்தீர்களா; நேரம் குறித்துக் கொண்டு வந்தீர்களா; என் கையில் கொடுத்தீர்களா; போஸ்ட்மேன் போல, 'டெலிவரி' செய்தால் போதுமா, நான் வந்து விடுவதற்கு; நான் என்ன அவ்வளவு இளக்காரமா?' என்ற கேள்விகள் அற்ற, அவரது பண்பு கண்டு, நான் வியந்தது உண்டு.இவற்றினுாடே என் மணி விழாவிற்கு வந்து, என் கைகளைப் பிடித்துக் கொண்டு, அவர் சொன்னது என்னை வெட்கம் கொள்ளச் செய்து விட்டது; கொஞ்சம் நெளியவும் செய்தேன்.தொடரும்.லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !