கொரோனா பிள்ளையார்!
'கொரோனா' என்ற கொடிய வியாதி, பல லட்சம் மக்களை அழித்து விட்டது. தெய்வத்தின் துணை இருந்தால், எத்தகைய கொடிய வியாதியையும் நம்மால் வெல்ல முடியும். அதிலும், முழுமுதற் கடவுளான விநாயகர் அருளிருந்தால், கேட்கவும் வேண்டுமா?'கொரோனா'வின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று காய்ச்சல். இந்த காய்ச்சலை நீக்கி, நமக்கு நலமளிப்பவர் ஜுரஹர விநாயகர். இவர், கும்பகோணத்திலுள்ள நாகேஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கிறார். ஜுரம் என்றால் காய்ச்சல். ஹரம் என்றால் அழிதல். காய்ச்சலை நீக்கி குணமளிப்பவர் என்பதால், இவருக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.ஆதிசேஷன் என்ற பாம்பு, உலகத்தை தாங்கிக் கொண்டிருந்தது. உலக மக்கள் செய்த பாவங்களின் பாரம் தாங்காமல், அதன் தலை நசுங்கியது. இந்த பாரத்தை குறைக்கும்படி, சிவனிடம் வேண்டியது. 'உலகமே அழிந்தாலும், பூலோகத்திலுள்ள கும்பகோணம் என்ற இடம் மட்டும் அழியாது. ஒருமுறை, வெள்ளத்தால் உலகம் அழிந்த போது, அமுத கலசத்தில் படைப்புக் கலன்களை வைத்து, பிரம்மா மிதக்க விட்டார். அந்தக் கும்பம் ஒரு இடத்தில் ஒதுங்கியது. அதுவே கும்பகோணம்.'அந்தக் கலசத்தை நான், அம்பு எய்து உடைத்தேன். கலசத்தின் மேலிருந்த வில்வம் சிதறி, ஒரு இடத்தில் விழுந்தது. அது இப்போது வில்வ வனமாக உள்ளது. அங்கு சென்று, லிங்கம் வடித்து என்னை பூஜித்து வா. உன் பாரத்தை குறைக்கிறேன்...' என்றார், சிவன்.ஆதிசேஷனும் அவ்வாறே செய்தது. நாகம் பூஜித்த லிங்கம் என்பதால், சிவனுக்கு நாகேஸ்வரர் என்ற பெயர் வந்தது. பிற்காலத்தில் இங்கு மிகப்பெரிய கோவில் எழுந்தது. இந்தக் கோவிலில் எழுந்தருளியவரே, ஜுரஹர விநாயகர்.விநாயகர் சிலையை கிழக்கு, மேற்கு, வடக்கு நோக்கி அமைப்பது அதிகம். இங்கு, மிக அபூர்வமாக தெற்கு நோக்கி, ஜுரஹர விநாயகர் அமைக்கப் பட்டிருக்கிறார்.தெற்கு, எம திசையை குறிக்கும். நிமோனியா, மலேரியா மற்றும் 'கொரோனா' போன்ற கொடிய நோய்களுக்கு காரணமான காய்ச்சல் வடிவில் மக்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறான், எமன். அப்போது, அவர்களைக் காப்பாற்றும் சக்தியாக, ஜுரஹர விநாயகர் விளங்குகிறார்.எந்த தடையையும் நீக்கும் சக்தி படைத்தவர், விநாயகர். நம் தேசத்தின் முன்னேற்றத்தை, 'கொரோனா' என்ற கொடிய வியாதி தடுத்து நிறுத்தியுள்ளது. இத்தடையை நீக்க, இந்த விநாயகரை வணங்கி வரலாம்.தி. செல்லப்பா