உள்ளூர் செய்திகள்

தூங்கா நகரம்!

உலகில், 6,000ம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே மாநகரம், எது என்று உங்களுக்கு தெரியுமா?உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும், அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ, சிதைவுற்றோ மீண்டும் தோன்றி இருக்கின்றன. ஐரோப்பாவில் உள்ள மிகப் பழமையான கிரேக்கம், ஏதேன்ஸ் மற்றும் ரோம் போன்ற மாநகரங்களை அகழ்வாராய்ச்சி செய்தபோது, அடுக்கடுக்கான அமைவிடங்கள் இருப்பது தெரிய வந்தது. அதாவது, அந்த நகரம் புதையுண்டு, அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்தது.ஆனால், 6,000ம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம், மதுரை தான் என்று ஆச்சரியப்படுகின்றனர், ஆய்வாளர்கள்.'நகரம் மட்டும் இயங்கவில்லை, தன் கலாசாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தால், மதுரையை உலகில் பழமை மாறாமல் இயங்கி வரும் ஒரே நகரம்...' என்கிறார், டிஸ்கவரி, 'டிவி' சேனல், ஆவணப்பட தொகுப்பாளர், மைக்கேல் வுட்ஸ்.மேலும், மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில், நரசிங்கம்பட்டி கிராமத்தில், சமீபத்தில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, 6,000ம் ஆண்டுக்கு முந்தைய ஈமக்காடு - இறந்தவர்களை புதைக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.இதில், வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இறந்தோரை புதைத்த இடத்தை அடையாளம் காண, கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது, இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரிகத்திற்கு முந்தையது. இந்த இடத்தை, இப்போது சென்று பார்த்தாலும், கற்குவியலை காணலாம்.குறிப்பிட்ட நாட்களில், சிலர் இங்கு வந்து, பூஜித்து வழிபடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, 'பரம்பரை பரம்பரையாக வழிபடுகிறோம். இதற்கான காரணம் தெரியாது. ஆனால், அங்கு முன்னோர் இருப்பதாக நம்பிக்கை உள்ளது...' என்கின்றனர். அது, அவர்களுடைய முன்னோர் புதையுண்ட இடம் தான் என்று, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதை கேட்டு, பிரமித்தனர்.அதுமட்டுமல்ல, மதுரைக்கு, 'துாங்கா நகரம்' என்ற பெயரும் உண்டு. இது, இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே. இங்கு, இரவு நேர கடைகள் பிரசித்தம். அவற்றை, 'அல் அங்காடி' என்று கூறுவதுண்டு. உலகிலேயே, 6,000ம் ஆண்டுகளாக ஒரு நாகரிகத்தின் கலையையும், கலாசாரத்தையும், மொழியையும் சுமந்து இயங்கி வரும் ஒரே நகரம், மதுரை மட்டும் தான்.- ஏ.எஸ்.ஜி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !