உள்ளூர் செய்திகள்

ஏழைகளுக்கு, இங்கு எல்லாமே இலவசம்!

சென்னை, அடையாறு, சர்தார் படேல் சாலையில் உள்ள, 'கோகுல் ஆர்க்கேட்' வணிக வளாகத்தினுள் இயங்கி வருகிறது, 'துளி' அமைப்பின் துணிக்கடை. ஏழை, எளியோர், தங்கள் விருப்பப்படி, என்ன வேண்டுமானாலும் இங்கு வந்து எடுத்துச் செல்லலாம். காசு கொடுக்க வேண்டியதில்லை; எல்லாமே இலவசம். சென்னையில் உள்ள தொழிலதிபர்களான அஜித்குமார், சிவாஜி பிரபாகர், ஜெயபாலா மூவரும் நண்பர்கள். தம் வருமானத்தின், ஒரு பகுதியை ஏழை, எளியோருக்கு செலவிட முடிவு செய்து, பிப்ரவரி 2018ல், 'துளி' என்ற துணிக்கடையை துவக்கினர்.கடை வாடகை, வேலை பார்ப்பவருக்கு சம்பளம், மின்சார கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுகளை, இவர்களே கவனிக்கின்றனர்.இந்த துணிக்கடையில், எந்த பொருளும் விற்பனை செய்வதில்லை. பொதுமக்கள், தாங்கள் உபயோகித்த, நல்ல நிலையில் உள்ள ஆடைகளை எடுத்து வந்து கொடுக்கலாம். வரக்கூடிய துணிகளை, 'ஏ லாப்ட் ராஜ் பேலஸ்' என்ற லாண்டரி நிறுவனத்தார், கட்டணமின்றி, புதிது போல தயார் செய்து தருகின்றனர். வரும் ஆடைகளை, மூன்று வகையாக தரம் பிரிக்கின்றனர். முதல் வகை ஆடைகளை, கடையில் தொங்க விடுகின்றனர். இரண்டாம் வகை ஆடைகளை, நடமாட முடியாத நிலையில் ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கின்றனர். மூன்றாவது வகை ஆடைகளை, சுழற்சி முறைக்கு அனுப்பி விடுவர்.இதில், முதல் வகை ஆடைகளை, பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை, எளியோர் நேரில் வந்து வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டுடன், குடும்பத்தோடு வரவேண்டும். முதல், 'விசிட்'டில், விசாரணை நடைபெறும். அடுத்த, முறை தான், கடைக்குள் அனுமதிக்கப்படுவர். ஒருமுறை, 'ஷாப்பிங்' செய்தவர், அடுத்த ஆறு மாதத்திற்கு, வாங்க முடியாது.'துளி' துணிக்கடையில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியருக்கான உடைகள், பொம்மைகள், காலணிகள் மற்றும் வளையல்கள் போன்றவை தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டு, ஒவ்வொன்றின் விலையும் எழுதி வைக்கப்பட்டிருக்கும். துணிகளை போட்டு பார்த்து வாங்க, 'டிரையல் ரூம்' உண்டு. உதவிக்கு, ஊழியர்கள் உள்ளனர்.வரும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து, 1,000 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாய் வரை கூப்பன் கொடுக்கப்படும். கூப்பனுக்கு ஏற்ப, குடும்பத்தினர் துணிகள், காலணிகள், பொம்மைகள், ஆபரணங்கள் என, எது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.இதுவரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளியோர், பலனடைந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுவோர், வீட்டு வேலை செய்வோர், கூலி தொழிலாளர்கள் நிறைய பேர் வந்துள்ளனர். சென்னையை தாண்டி, செங்கல்பட்டில் இருந்தெல்லாம் வருகின்றனர்.ஏழை மக்களின் மகிழ்ச்சியை நேரில் பார்த்த நன்கொடையாளர்களில் சிலர், இப்போது, புது துணி மற்றும் காலணிகளும் வாங்கி தருகின்றனர். போதும் போதுமென்கிற அளவிற்கு, நிறைய பழைய துணிகள் வருகின்றன. இனி, கொடுப்பவர்கள், புது துணிகளாகவோ அல்லது 5 - 18 வயது வரை உள்ளவர்களுக்கானதாகவோ கொடுக்கலாம். தொண்டு செய்யும் எண்ணமுள்ளோரும் இங்கு வந்து சேவை செய்யலாம். ஞாயிறு விடுமுறை நாள்.இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், வைனஸ். மேலும் விபரம் அறிய, 75502 83108 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எல்.எம்.ராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !