உள்ளூர் செய்திகள்

கங்கா ஸ்நானம் ஆச்சா....

நரகாசுரனை அழிக்க கிருஷ்ணர் புறப்பட, அவரோடு, சத்யபாமாவும் உடன் சென்றார். தன் தாய் அன்றி வேறு யாராலும், மரணம் நேரக் கூடாது என்று, வரம் வாங்கி இருந்தான், நரகாசுரன்.பூமாதேவியின் அம்சம், சத்யபாமா. அவர், நரகாசுரனை அழிக்க, அவன் மீது சுதர்சன சக்கரத்தை வீசும்போது, அவர் ஸ்பரிசமும் சக்கரத்தில் பதிந்திருந்தது.நரகாசுரன் உயிர் பிரிகையில், கிருஷ்ணரிடம், 'இந்த நாளை, எல்லாரும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டான். 'அப்படியே ஆகட்டும்...' என்று அருள் பாலித்தார், கிருஷ்ணர்.அந்த இரவின், நான்காம் ஜாமத்தில், பாமாவோடு ஊருக்குள் பிரவேசித்தார், கிருஷ்ணர். பகவானை வரவேற்க, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. துன்பம் தொலைந்ததென்று எண்ணெய் தேய்த்து குளித்தனர், மக்கள்.நரகாசுரனின் புதல்வன், பகதத்தன், 16 ஆயிரத்து 100 பெண்களையும், சிறை மீட்டு அனுப்பினான். அவர்கள் கிருஷ்ணரின் பாதம் பணிந்து, 'எங்கள் ஊருக்கு செல்ல முடியாது; ஊரார் பழிப்பர்...' என்று கண்ணீர் விட, பாதுகாப்போடு அவர்களை துவாரகை அனுப்பி வைத்தார்.தெய்வ தம்பதியரான கிருஷ்ணர் மற்றும் பாமாவை நீராட வைத்து, பட்டாடைகளையும், பொன் ஆபரணங்களையும் பரிசாக அளித்தான், பகதத்தன். யானைகளையும், காம்போஜ குதிரைகளையும் துவாரகைக்கு அனுப்பி வைத்தான்.கிருஷ்ணர் - சத்யபாமாவுக்கு இனிப்போடு விருந்து வைத்தான். வருணனின் வெண் குடையையும், மணி சிகரத்தையும், அதிதி தேவியின் அமுத குண்டலங்களையும் சமர்ப்பித்தான். அவற்றை தேவலோகம் சென்று, இந்திரனிடம் சமர்ப்பித்து, பாமா விரும்பியபடி பாரிஜாத மரத்தை எடுத்து வந்து, அவரின் அரண்மனை தோட்டத்தில் வைக்க செய்தார், கிருஷ்ணர். பகதத்தனின் மாளிகைக்கு, கிருஷ்ணர் வரும் போது, வழியெல்லாம் வெடி வெடித்தனர், மக்கள். நாமும் அவ்விதமே பட்டாசு வெடித்தும், வெகுமதிகள், இனிப்பு வழங்கியும் கொண்டாடி, பரந்தாமனை சந்தோஷப் படுத்துகிறோம்.திருப்பாற்கடலை கடைந்து, அமிர்தம் கிடைத்த நாளும், ஐப்பசி அமாவாசை. அன்று, மகாலட்சுமி, எள் செடிகளை மிதித்தபடி போக, பின்னால் வந்த பரந்தாமன், 'இன்று, எண்ணெய் தேய்த்து குளித்து, உன்னை பெருமைப் படுத்துவர்...' என்று, எள் செடிகளுக்கு வரமளித்தார்.அவர் பாதத்திலிருந்து உற்பத்தியான கங்கைக்கும், 'இன்று, அதிகாலை, எல்லார் வீடுகளிலும் ஜலவாசம் செய்வாய்...' என்று உத்தரவிட்டார். 'கங்கா ஸ்நானம் ஆயிற்றா...' என்று விசாரிப்பதன் அர்த்தம் இது தான்.நம்பி ஆரூரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !