உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பெறுங்கள்!

மார்ச் 7, மகா சிவராத்திரி'சிவராத்ர' என்பதையே, சிவராத்திரி என்கிறோம். 'ராத்ர' என்ற சொல்லுக்கு, 'உலகிலுள்ள எல்லாமும் செயலிழந்து நிற்பது' என்று பொருள். எனவே தான், உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப் பொழுது, ராத்திரி எனும் பெயர் பெற்றது.தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற நாட்களில், விளக்கேற்றி ஒளியை உண்டாக்குகிறோம்; ஆனால், சிவராத்திரியில் அந்த வழிபாட்டை செய்வதில்லை. கண்விழித்து சிவனை வழிபடுகிறோம். இப்படி கண்விழிக்க காரணம் என்ன?காலையில் சூரியன் உதயமானதும், கண் விழித்து நம் அன்றாடக் கடமைக்கு தயாராகிறோம். எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை, நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் நம்மால் உணர முடிகிறது. ஆனால், உறங்கி விட்டாலோ நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரிவதில்லை. இந்நிலையிலும் நாம் மூச்சு விடுவதுடன், நம் உள் உறுப்புகள் செயல்படவே செய்கின்றன. அதைச் செய்பவர், சிவபெருமான்!இறப்புக்கு சமமான தூக்கத்திலும், நம்மைக் காக்கும் அவனுக்கு, ஒருநாள் இரவாவது கண்விழித்து நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான், சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கிறோம்.சிவராத்திரியன்று விழித்திருக்கும் போது, நேரம் செல்லச் செல்ல உடல் அசதியாகி, அப்படியே படுத்து விடலாமா என்று தோன்றும். வைராக்கியம் உள்ளவர்களால் மட்டும் தான் தொடர்ந்து கண்விழிக்க முடியும். மற்றவர்கள் தானாகவே படுக்கையில் சரிந்து விடுவர். மற்ற நாட்களில் அப்படியல்ல, 10:00 மணியானால் பாயைப் போட்டு சுகமாக தூங்கி விடுகிறோம். அந்த சுகமான தூக்கத்தை தருபவன் சிவன். அப்படியானால் அவன் எப்பேர்ப்பட்ட கருணையுள்ளவன்!சிவராத்திரி குறித்த புராணக்கதை ஒன்று உண்டு. ஒரு சமயம், உலகம் அழிந்து, எங்கும் இருள் சூழ்ந்திருந்த அந்த வேளையில், சிவபெருமான் ஒருவரே செயலாற்றினார். அவரது துணைவியான பார்வதி தேவி, தன் பிள்ளைகளான உயிர்கள் மீண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என, இரவு முழுவதும் விழித்து, சிவனை நோக்கி தியானம் செய்தாள். அவள் சிவ வழிபாடு செய்ததை நினைவு கூரும் விதமாக அமைந்த இரவே, சிவராத்திரி!'இந்நாளில் விரதம் இருந்து, இரவில் நான்கு கால சிவ பூஜை செய்வோருக்கு, மங்களங்கள் யாவும் தந்து, நிறைவில் மேலான பதமும் தர வேண்டும்...' என, சிவனிடம் வேண்டினாள், பார்வதி தேவி. அவ்வாறே வரம் அளித்தார் சிவபெருமான். ராத்திரி என்ற சொல்லுக்கு, 'அளித்தல்' என்ற பொருளும் உண்டு. உயிர்களுக்கு மோட்சத்தை அளிப்பவர் சிவபெருமான். ராத்ர என்றால், பூஜித்தல் என்றும் ஒரு பொருள் உண்டு. சிவபெருமானை பூஜிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி!இந்நாளில், உணவையும், உறக்கத்தையும் தவிர்க்க காரணம், உணவு என்பது நாம் செய்யும் வினைகள்; நல்வினை, தீவினை என எதைச் செய்தாலும் புண்ணிய - பாவங்களை அனுபவிப்பதற்காக நாம் மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடும். நல்வினைகளின் பயனை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால், அதன் பலன் நம்மைச் சேராது. ஆனால், இதற்கு மிக உயர்ந்த மனப்பக்குவமும், தியாக உணர்வும் வேண்டும். தீய வினைகளைச் செய்யவே கூடாது.உறக்கம் என்பது, இந்த உலக வாழ்வு நிலையானது என்ற எண்ணத்தைக் குறிக்கிறது. சிவராத்திரியன்று விழித்திருப்பது ஏன் என்றால், 'இந்த வாழ்வு என்றாவது முடிந்து விடும்...' என்ற விழிப்புணர்வை பெறுவதற்கு தான். இதை உணர்ந்து, வாழும் காலம் வரை நல்லதைச் செய்து, அதன் பலனை சிவனுக்கே அர்ப்பணித்து, பிறப்பற்ற நிலைக்கு வித்திடுவோம்! தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !