தெய்வமும் மனிதனாகலாம்!
''வரேன் சார்!'' காலை தொட்டு வணங்கிய செந்திலை அணைத்துக் கொண்டார், சிறை அதிகாரி ரமணன்.சிரித்தபடி, ''இங்க, 'வரேன் சார்'ன்னு சொல்லக் கூடாது; 'போறேன் சார்'ன்னு தான் சொல்லணும்,'' என்றார்.''செந்தில்... நான் கூறியதையெல்லாம் மறக்காதே... கூர்மையான அறிவுள்ளவன் நீ... உழைப்பாளி, பாடுபட தயங்காதவன், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், பாதை மாறி போய் விட்டாய். இப்போதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை.''நாலு பேர் உன்னை பின்பற்றும் நல்ல மனிதனாக வாழ்ந்து காட்டு; உன்னால் நிச்சயம் முடியும். என்ன... சிறைக்கு போய் வந்தவன் என்ற முத்திரை, உன்னை அவ்வப்போது அலைக்கழிக்கும்... அதையெல்லாம் லட்சியம் செய்யாதே. புது மனுஷனா வந்து, என்னை பாரு.'' செந்திலுக்கு மட்டுமல்ல, அந்த கருங்கல் கட்டடத்தினுள் கல்லாக இறுகிப் போயிருந்த பல கைதிகளுக்கும், அவர் அவ்வப்போது கூறும் அன்பான அறிவுரைகள், இவை.அப்பப்பா... ஒன்றா, இரண்டா, ஒன்பது ஆண்டுகள். பலதரப்பட்ட மனிதர்கள். அவர்களது குற்றங்கள், நியாயங்கள் தனி ரகங்கள். அந்த அனுபவங்களும் கூட, செந்திலை பக்குவப்படுத்தி இருந்தன. பெருமூச்சுடன் வெளியே வந்த அவனை, உலகின் ஒளியும் - ஒலிகளும் தான் வரவேற்றன.'தலைவா... தலைவா...' என்று கண்மூடித்தனமாக யார் பின்னால் ஓடினானோ, அந்த தலைவனையோ, அவருடன் சிறு தொண்டர்களாக சுற்றித் திரிந்த சின்னு, மாரி மற்றும் ஜோசப்பையும் காணவில்லை. இதெல்லாம் செந்தில் எதிர்பார்த்தது தான். இருந்தாலும், ஏமாற்றத்துடன் மனதில் எழுந்த பழைய நாட்களின் நினைவுகளை ஒதுக்கித் தள்ள முடியவில்லை; அதிலும் அந்த சம்பவம், அந்த முகம்.அவனால் வெட்டப்பட்டு, ரத்தக்களரியுடன், 'அம்மா' என்ற அலறலுடன் சாய்ந்தவனை, அவனால் மறக்க முடியவில்லை. இப்போது, எப்படி இருக்கிறானோ... அவனை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று அவ்வப்போது தோன்றும் ஆவல், இப்போதும் எழுந்தது. எதற்கு... அவன் சேதமில்லாமல் இருந்தால், வண்டாக குடையும் தன் மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்பதற்கா அல்லது பாவ மன்னிப்பு கேட்கவா... அவனுக்கே புரியவில்லை.எந்த ஊர்... நினைவை கசக்கினான், சோலையூர். திட மனதுடன் கிளம்பி விட்டான்.சோலையூரில் வந்து இறங்கியதுமே, ஊருணியின் துார் எடுக்கும் பணி, அவன் பிழைப்புக்கு, வழி காட்டியது.புல்லும் முள்ளும், சேறும் சகதியும் மண்டிப் போயிருந்ததை, செம்மை படுத்தும் பலரில் ஒருவனாக, அன்றைய கூலியை அவன் வாங்கிய போது... மெதுவாக அவன் தோளை தொட்டு கேட்டார், ''ஊருக்கு புதுசா... யாருப்பா நீ?''அந்த கண்களின் ஊடுருவலில், தடுமாற்றத்துடன், ''சேலத்து பக்கத்திலிருந்து பொழப்பு தேடி வந்தேனுங்க... வந்ததும், இந்த வேலை கிடைச்சுச்சு,'' என்றான், செந்தில்.''அயராம நீ வேலை செய்யறத பார்த்தேன்... இப்படிதான் பாடுபடணும்... உன் பேரு என்ன?'' ''செந்தில்ங்க.''''எங்க தங்கியிருக்கே?''விழித்தான், செந்தில்.புரிந்து கொண்டவராக, ''ராமா... இப்போதைக்கு, இவரை உன் கூட தங்க வச்சுக்க... இந்தாப்பா செந்தில்... நாளைக்கும் வந்துடு,'' எனக் கூறி, நடந்தவரை பார்த்தபடியே நின்றான்.''செந்தில்... அவர் தான் கணேசன் சார்... சோலையூர் என்ற பேருக்கேத்தாப்புல குளுகுளுன்னு மரமும், செடியுமா இந்த ஊர் நல்லாருக்குன்னு சொன்னியே... அதுக்கு காரணமே, இவர் தான். ஊர்ல ஒவ்வொருத்தரும், ஒரு செடியாவது வளர்த்து, மரமாக்கணும்ன்ற திட்டத்தை செயல்படுத்தி, அவனவனை போட்டி போட்டு, மரம் நட வச்சாரு... ஊரே இன்னிக்கு சோலையாயிருக்கு.''''இந்த ஊர் தலைவரா?'' கேட்டான், செந்தில்.சிரித்தான், ராமன்.''இங்க, தலைவர்னுல்லாம் கிடையாது. எல்லாரும் தலைவர் தான், தொண்டர் தான். 'நான், எனது'ன்னு இல்லாம, 'நாம், நமது'ன்னு இருக்கோம்...''கணேசன் சாருக்கு, இந்த மண்ணுன்னா உசிரு... இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்து, படிச்சு, இந்த ஊர் கலைக்கூடம் அரசு பள்ளியில தலைமை ஆசிரியரா இருக்காரு... நிறைய படிச்சிருந்தும், டவுனு, வெளிநாடுன்னு போகாம, ஏழை எளியவங்க, நல்லா படிக்கணும், அரசு பள்ளிகளெல்லாம் சிறப்பா நடக்கணும்ன்னு பாடுபடறாரு...''போன மாசம், பேப்பர், 'டிவி'யில் எல்லாம் பார்த்திருப்பியே... அரசு கலைக்கூடம் பள்ளி மாணவி, கவுரி, தமிழகத்துலயே முதல் மாணவியா வந்தது... அப்ப, நீங்க இங்க வந்திருக்கணும், கலெக்டர் என்ன... மந்திரிங்க என்ன... ஊரே திருவிழாவா இருந்துச்சு...''நாலு ஆண்டுக்கு முன், பள்ளிக்கூடத்துல மட்டுமில்ல, வீடுகள்ல கூட சரியான கழிப்பறை கிடையாது... கள்ளுக்கடை, பொழுது சாஞ்சா புருஷன் பொண்டாட்டி சண்டை, தெருவ அடைச்சுகிட்டு ஓடற சாக்கடைன்னு இருந்த சோலையூரு... இன்னிக்கு, 'பளீச்'சுன்னு அனைவரும் திரும்பி பார்க்கறாப்புல இருக்குன்னா, அதுக்கு கணேசன் சாரோட வழிகாட்டலும், அயராத உழைப்பும் தாம்பா காரணம்.''அவ்வளவு ஏன், இந்த தேர்தல்ல ஓட்டு கேட்டு வந்தவங்க, இலவசமா கொடுக்க வந்த பொருள், பணம் எதையும் நாங்க வாங்க மறுத்துட்டமே... அதுக்கு பதிலா, 'குண்டும் குழியுமா இருக்கற ரோடை செம்மைபடுத்துங்க... சரியான கவனிப்பு இல்லாம இருக்கற, அரசு ஆஸ்பத்திரிய சீர்படுத்துங்க... எங்க ஓட்டு, உங்களுக்கு தான்'னு கோரிக்கை வச்சோம்!''மூச்சு விடாமல் அடுக்கிய ராமனை, வியப்புடன் பார்த்த செந்தில், ''அதென்னண்ணே, ரோடு ஓரத்துல ஆங்காங்கே, மஞ்ச பெட்டி, சிகப்பு பெட்டி?''''அதுவா... மக்கற குப்பையை, மஞ்ச பெட்டியிலயும்... மக்காத குப்பையை சிகப்பு பெட்டியிலயும் போடணும்... அப்படி போட்டா, அதுல வேலை செய்யறவங்களுக்கு உதவியா இருக்கும். எடுத்ததுக்கெல்லாம் அரசையே குறை கூறிட்டு இருக்காம, நாமளும் விழிப்புணர்வோட இருக்கணும்கறதையே கணேசன் சார் தான் புரிய வச்சார்... நீ கேட்டியே, அவர் தலைவரான்னு... கணேசன் சார், அதுக்கும் மேலே... எங்க தெய்வம்னே சொல்லணும்.'''இப்படியெல்லாம் ஒழுங்கா முறையா நடக்குமா... நடக்கும். ஊருணி வேலை முடிந்ததும், வந்து பார்க்க சொன்னாரே கணேசன் சார்... எத்தனை பெரிய மனசு...' வியந்த செந்திலின் மனதில், அவர் உயர்ந்து நின்றார்.அந்த ஊருக்கு எதற்கு, யாரை காண வேண்டும் என்று வந்தானோ, அந்த துடிப்பு கூட சற்று பின் தள்ளப்பட்டு விட்டது.தனித்து தெரிந்த அந்த ஊர், அதன் மக்கள், அவர்களில் ஒருவனாக காலமெல்லாம் அங்கேயே கழித்து விடலாம் என்று தோன்றியது. அதிலும், பூத்துக் குலுங்கும் செடிகளும், மரங்களும் சூழ, துறு துறுவென்று ஓடி வரும் சிறுவர்களும், கம்பீரமாக வலம் வரும் ஆசிரியர்களுமாக, 'பளீச்'சென்று காட்சியளிக்கும் அந்த கலைக்கூடம் அரசு பள்ளியில், கூட்டி பெருக்கும் சிறு வேலை கிடைத்தால் போதும்... இப்படி பல சிந்தனைகள். கணேசன் சாரை போய் பார்த்தான், செந்தில்.ஆனால், அந்த சந்திப்பு... எப்போதும் போர்த்தியபடி இருக்கும் மேல் அங்கி இல்லாமல் அமர்ந்திருந்த அவரின் மார்பு... வலது தோள்பட்டையுடன் நின்று போயிருந்த, கைக்கு மேல் தொங்கிய தொள தொள சட்டை...ஓங்கி அறையப்பட்டது போல் ஒரு கணம் துடித்தான், செந்தில்.''செந்தில்... நம்ம ஊர் சர்ச்சுல வேலை செய்பவர், மூன்று மாத விடுப்பில் போயிருக்கிறார். அவர் வரும் வரை, நீ அந்த வேலைகளை பார்த்து கொள்கிறாயா... அங்கேயே பக்கத்துல தங்குமிடம், உணவு வசதியும் இருக்கு... பாதிரியார் பீட்டரை போய் பார்... எல்லாம் விளக்கமா சொல்வார்,'' என்றார், கணேசன்.வாய் திறந்து பதில் சொல்ல இயலாது, தலையை ஆட்டி, வெளியே வந்தவன், ஒதுக்குப்புறமாக நின்று, குலுங்கி குலுங்கி அழுதான்.'அந்த அவன் தான், இவரோ... ஆமாமா... நான் தான் பார்த்தேனே... என்னோட வெட்டு, சரியா அந்த தோள் பட்டைல விழுந்ததை... அவருக்கும் தன்னை தெரிந்து விட்டதோ... அதனால் தான் என்னை, பாவ மன்னிப்பிற்கு சர்ச்சுக்கு அனுப்புகிறாரோ...'பலவாறு கலங்கிய அவன் மனதிற்கு, அந்த தேவாலயத்தின் புனிதமும், அமைதியும், சுத்தப்படுத்துவதும், தோட்ட பராமரிப்பும், பாதிரியாரின் கனிவான பேச்சும் இதமாக இருந்தது. இருப்பினும், மூன்று மாத வேலை முடிந்தவுடன், ஊரை விட்டே போய் விடலாமா என்ற எண்ணமும் அவ்வப்போது எழுந்தது.ஆனால், அவனை போக விடவில்லை, கணேசன்.அது... சோலையூரில் உருவாகி வரும், பெரிய நுால் நிலையத்தை காவல் காக்கும் பொறுப்பு.சிறுவர்கள் முதல் பெரியோர் வரை, மாணவர்கள், பொதுமக்கள் எல்லாருக்கும் பயன்படக் கூடியதாக, சுற்று வட்டாரத்தில் எங்கும் கிடைக்காத அரிய நுால்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தரும்படியாக, அந்த பாரதி நுால் நிலையம் அமைய வேண்டும். வாழ்வின் லட்சியமே அதுதான் என்பது போல, அயராது பாடுபட்டு கொண்டிருந்தார், கணேசன்.அதற்காக, பல இடங்களிலிருந்தும் நன்கொடை குவிந்தாலும், அங்கு வைத்திருந்த பெரிய உண்டியலில், 'நிதி மிகுந்தோர் பொற்குவி தாரீர்... நிதி குறைந்தோர் காசுகள் தாரீர்...' என்று எழுதி வைத்திருந்தார். அதற்கேற்ப, மாணவர்களும், அவ்வப்போது சில்லரை காசுகளை அதில் போடுவதை கண்டான் செந்தில்.'என்னை நம்பி, இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாரே கணேசன் சார்...' என்று மனம் கசிந்துருக, தானும் அதற்கு கைமாறாக ஏதாவது செய்ய துடித்தவனின் கண்களில், செய்தி தாளின் அந்த விளம்பரம் கண்ணில் பட்டது.அதில், 'பெரும் செல்வந்தர் ஒருவரின் மகனுக்கு, ஒரு கிட்னியை தந்து உதவுபவருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்...' என, விலாசம் மற்றும் தொலைபேசி எண்ணுடன் குறிப்பிடப்பட்டிருந்தது.'ஆஹா... நல்ல வாய்ப்பு...' என்று மகிழ்ந்த செந்தில், இதனால், தன் வேலைக்கு பங்கம் வருமா... எத்தனை நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்ற விபரங்களை சேகரித்தான். பின், குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணில் பேசி, சோலையூர் நுால் நிலையம் பற்றி கூறி, 'சன்மானத்துடன், முடிந்தவரை கூடுதலாக சேர்த்து, மகன் பெயரில் நன்கொடையாக கொடுங்கள்... அந்த புண்ணியம் அவரை வாழ வைக்கும்...' என்று உணர்ச்சி பெருக்கில் கூறினான், செந்தில்.எப்போது வரவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதும், சொல்வதாக கூறினார், நெகிழ்ந்த அந்த செல்வந்தர்.'இதையெல்லாம் கணேசன் சாரிடம் சொல்லாமல் செய்கிறோமே, விடுப்பு எத்தனை நாளோ, எப்படி கிடைக்கும்...' பல சிந்தனைகளுடன் வந்தவன் எதிரில், அவனை வழி மறித்தவனை கண்டதும், 'ஷாக்' அடித்தது போல் நின்றான்.அவனுடன் ஒன்றாக சிறையில் இருந்த அழகரு. அடாவடி, முரட்டுத்தனம், தான் சொல்வதே சரி என்ற பிடிவாதம்... இதன் மொத்த உருவம் அவன். ஆனாலும், தன்னை போல அவனும் இப்போது மாறியிருக்க மாட்டானா என, எண்ணினான்.''என்னடா செந்தில்... அப்படியே திகைச்சு நின்னுட்டே... போன வாரம் தான் ரிலீசானேன்... இங்க என் மச்சான் இருக்கானான்னு பார்க்க வந்தேன்... அவங்க ஊரை விட்டே போயிட்டாங்களாம்... என்ன செய்யிறது, எங்க போறதுன்னு யோசனையோட வந்தவனுக்கு, 'நான் இருக்கேண்டா'ங்கறாப்பல நீ வந்து நிக்கறே... உன்னை பார்த்தது, ரொம்ப சந்தோஷமா இருக்குடா.''அவன் பேச்சின் உருக்கத்தில் நெகிழ்ந்த செந்தில், அழகரு கையை பற்றி, தன் இருப்பிடத்திற்கு கூட்டி வந்தவன், அப்படியே தன் மனதை திறந்து கொட்டி விட்டான். அதில், தன்னால் வெட்டப்பட்ட கணேசன் சாரின் சிறப்பு... தான் தான் அந்த குற்றவாளி என்பது, இங்கு யாருக்கும் தெரியாது... இன்னும் ஓரிரு நாளில் கிட்னியை கொடுக்க, கோவை போக இருப்பது எல்லாமே அடக்கம்.காலையில் விடிந்ததும், விடியாததுமாக, ''செந்தில்... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்,'' ஒரு மாதிரியாக இருந்தது, அழகரு குரல்.''இந்தா பாரு... எனக்கு உன்னை போல நல்லவன், வல்லவன்கற பட்டம் எல்லாம் வேண்டாம்... அது, நம்மால முடியாது... அப்பப்ப கை நிறைய காசு... மனம் போன போக்கில், ஜாலியான வாழ்க்கை... இருக்கற வரைக்கும் அனுபவிக்காம, இதென்னடா சாமியார் வாழ்க்கை... ''அதுக்கு தான் ஒண்ணு சொல்றேன், நானும் உன் கூட கோவைக்கு வரேன்... எல்லாம் முடிஞ்சதும், அவரை கூட போட்டு தரச்சொன்னியே, அதையும் சேர்த்து, 'லம்பா' வாங்கி என்கிட்ட கொடுத்திடு... பயப்படாதே, அதுல உனக்கும் பங்கு தரேன்,'' என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தான், செந்தில்.செந்திலின் மறுப்பு, அழகரின் பிடிவாதம், அதன் இடையில் ஒலித்த மொபைல் போனில், செல்வந்தரின் மகன், மரண செய்தி வந்தது. செந்தில் முகத்தில் தெரிந்தது பச்சாதாபமா... நிம்மதியா... ஆனால், 'சுளையா கிடைக்க இருந்த பணம் போச்சே...' என, அழகருக்கு தான் ஒரே ஏமாற்றம்.''சரி விடு... இன்னொண்ணு சொல்றேன்... அந்த நுால் நிலையத்துல இருக்கற அந்த உண்டியல்... நேத்து துாக்கி பார்த்தேன், என்ன கனம்... 50 - 60 ஆயிரம் தேறும்... ஏன், லட்சம் கூட இருக்கும்... நீ ராவுல வர்றப்ப அதை எடுத்துட்டு வா... இங்க வச்சு ஒடச்சு ஆளுக்கு பாதியா அள்ளிட்டு, ஊரை விட்டே ஓடிடலாம்,'' என்றான், அழகரு.வெறுப்புடன், 'த்துா...' என்று காறி உமிழ்ந்தான். சட்டைப்பையில் இருந்த சில, 10 ரூபாய் தாள்களை எடுத்து, அழகரு கையில் அழுத்தியவன், ''இந்தா பஸ் காசு... இப்பவே இங்கிருந்து ஓடிடு,'' எனக் கூறி, பணிக்கு கிளம்பினான், செந்தில்.''ஏண்டா... உனக்கு இவ்வளவு திமிரா... என்னையா விரட்டுறே... வெக்கறேண்டா உனக்கு வேட்டு... இப்ப பாரு, இந்த ஊர்காரங்களே உன்னை கல்லால் அடிச்சு, கழுத்தை பிடிச்சு தள்ளிடுவாங்க,'' என, உறுமியவன், கணேசன் சார் முன் போய் நின்றான்.''ஓ... செந்திலோட விருந்தாளி... என்னப்பா, காலையிலேயே இந்த பக்கம்... ஊருக்கு கிளம்பிட்டியா,'' கேட்டார், கணேசன்.''ஆமா சார்... அதுக்கு முன், உங்ககிட்ட மட்டுமில்ல... இந்த ஊரையே கூட்டி வச்சு, அந்த புரட்டுக்காரன் மூடி மறைச்ச ரகசியத்தை உடைக்கணும்... முதல்ல, அந்த செந்தில் பயல இழுத்தாற சொல்லுங்க,'' என்றான், மிதப்புடன்.அழகரு வந்திருப்பதை அறிந்து, அங்கு வந்த செந்தில், சர்வ அங்கமும் ஒடுங்க, திகைத்து நின்றான்.''இதோ... செந்திலே வந்துட்டானே... அதென்னப்பா சிதம்பர ரகசியம், சும்மா சொல்லு... எங்கிட்ட சொன்னாலே போதும்... இந்த ஊரும், நானும் ஒண்ணு தான்,'' சிரித்தபடி கூறினார், கணேசன்.''இவன் யாரு தெரியுமா... உங்க கையை வெட்டிட்டு, ஒன்பது ஆண்டுகளாக ஜெயில்ல, 'களி' தின்னுட்டு இருந்தானே அந்தப் பய... இது தெரியாம, மாலை மரியாதையோட அவனை கொண்டாடறீங்க,'' என, ஆக்ரோஷத்துடன் கூறினான், அழகரு.''தெரியுமே... முதலாளி சொன்னாருன்னு மரத்தை வெட்ட தான், அருவாளை ஓங்கினான்... நான் தான் சின்னப்பிள்ளைத் தனமா ஓடிப்போய் மரத்தை கட்டிப் பிடிச்சுட்டேன்... ஓங்கிய அருவா நிக்காம, நழுவிருச்சு; என் கை போச்சு... இதுல, செந்திலோட தப்பு எதுவும் இல்லே...''பாவம்... அனாவசியமா ஒன்பது ஆண்டு தண்டனை அவனுக்கு... இப்ப பாரு, எனக்கு ஒரு கை போனா என்ன, செந்திலோட கைகளையும் சேர்த்து, நுாத்துக்கணக்கான கைகள் உதவியா இருக்கு... அது, இந்த ஊருக்கே தெரியும்... அழகருன்னு பேரு தான் உனக்கு, மனசு நல்லா இல்லியே... இப்ப வேணா அந்த, 'மைக்'ல போயி சொல்லு,'' என்றார்.'தடால்' என்று விழுந்து, கண்ணீரால் கால்களை கழுவிய செந்திலை, துாக்கி அணைத்து கொண்டார், கணேசன்.''என்னப்பா... பெரிய மனுஷா... உன் கிட்னிய கொடுத்து, நம்ம லைப்ரரிக்கு நன்கொடை கேட்டாயாமே... அவரு பாவம், தன் மகனை இழந்ததை கூட பெரிது பண்ணாம, உன்னை பாராட்டி, ஒரு லட்ச ரூபாய் அனுப்பியிருக்காரு,'' என்றார்.அங்கிருந்த அனைவர் கண்களும் கலங்கின... அதோ அழகரு, அவன் மனசும் கூட லேசாக இளக துவங்கியது.ஜெயா ராஜாமணிஇயற்பெயர்: ஆர்.ஜெயலட்சுமி, பல ஆண்டுகளாக எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது படைப்புகள், பல்வேறு தமிழ் வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன. 2017ல், இலக்கிய பீடம் நடத்திய சிறுகதை போட்டியில், இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.மதுரை மற்றும் திருநெல்வேலி வானொலியில், இவரது பல படைப்புகள் ஒலிபரப்பாகியுள்ளன.பகவானுக்கு பாமாலை மற்றும் இறையருள் இசைமாலை எனும், பக்தி பாடல் நுாலை எழுதியுள்ளார். இவர் இயற்றிய பல பக்தி பாடல்கள், 'சிடி' வடிவில் வெளியாகியுள்ளன.'பாரதி யுவகேந்திரா' என்ற அமைப்பு, இவருக்கு, 'சிறந்த பெண்மணி' என்ற விருதை வழங்கி, கவுரவித்துள்ளது. இது தவிர, 'லேடீஸ் ஸ்பெஷல்' இதழின் ஆசிரியர், 'ஸ்பெஷல் லேடி' விருதையும் வழங்கியுள்ளார்.