உள்ளூர் செய்திகள்

பசுமை நிறைந்த நினைவுகளே (70)

பசுமையான மற்றும் பழமையான ஆலமரங்கள் நிறைந்த ஐந்தருவி சாலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் ரிசார்ட்சில் தங்கியிருந்த இளைய வயதினரான தமிழரசி, அஸ்வினி, காயத்ரி ஆகிய வாசகிகள் ஆலமரத்தின் விழுதை பிடித்து தொங்கியபடி ஊஞ்சலாடினர்.'உற்சாக மிகுதியில் ஆடினாலும், சிறிது தவறினாலும் விழுந்து அடிபடும் அபாயம் இருக்கிறது. ஆகவே, இதை எடுத்துச் சொல்லி அவர்களை அங்கு இருந்து அழைத்து வாருங்கள்; வர மறுத்தால் இழுத்து வாருங்கள்...' என்று வேடிக்கையாக சொல்லி மூத்த வாசகிகளான நாகேஸ்வரி, ஜெகதா மற்றும் காந்திமதி ஆகியோரை அனுப்பி நீண்ட நேரமாகியும் யாருமே வரவில்லை.என்னாச்சு என்று போய் பார்த்தால், 'விழுதை பிடித்து ஊஞ்சலாடாதே விழுந்து விடுவாய்...' என்று எச்சரித்து கூப்பிட்டு வரவேண்டிய மூத்த வாசகிகள், விழுதை பிடித்து ஊஞ்சலாடிக் கொண்டு இருந்தனர்.'என்னங்கம்மா நீங்களும் ஆட ஆரம்பிச்சுட்டீங்க?' என்று கேட்டதும், 'ஐந்து வயசுல ஆடினது, அப்புறம் வாய்ப்பே கிடைக்கல... ஆடிப்பாருங்க ஆன்ட்டி'ன்னு இந்த பிள்ளைக சொல்லுச்சு. சரி, ஆடித்தான் பார்ப்போமேன்னு ஆடினோம், நல்லாத்தான் இருக்கு' என்றவர்களை அங்கிருந்து அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.வாசகிகள் அப்படி என்றால் அந்த வருடம் வந்திருந்த வாசகர்கள் வெளிப்படுத்திய சந்தோஷமும் தனி ரகம்.வாசகர் ரவிக்குமாரும், அவரது மகன் கபில் பிரவீனும் வித்தியாசமான விக் எல்லாம் வைத்து ஆடிய ஆட்டத்தை இப்போதும் மறக்க முடியாது. அவர்கள் ஆடி முடித்ததும் பலரும் கைதட்டியபடி மேடைக்கே போய் கைகுலுக்கி பாராட்டினர்.இப்படி 2008ல் சந்தோஷம் பொங்கி வழிந்தது என்றால் 2009-ம் ஆண்டில் மற்றொரு விதமான சந்தோஷம்.ஆரம்பத்திலேயே அப்பத்தா சுருக்கு பையின் அறிமுகத்தோடு டூர் களைகட்டத் துவங்கியது.இப்போதும் கிராமத்து பக்கம் போனால் அப்பத்தாக்கள் என்று சொல்லப்படும் வயதான பெண்கள், இடுப்பில் ஒரு சுருக்கு பையை தொங்கவிட்டு இருப்பர். அதில் கசங்கிய நோட்டு, சில்லரை காசுகள் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு டப்பா, புகையிலை மற்றும் வீட்டுச்சாவி என்று ஏகப்பட்ட பொருட்கள் இருக்கும்.அதே போன்ற ஒரு சுருக்கு பையை கொண்டு வந்தார் பேராசிரியர் கண்ணன். ஒரே ஒரு வித்தியாசம் பைக்குள், மேலே சொன்ன விஷயங்கள் எதுவும் கிடையாது. மாறாக சின்ன சின்ன துண்டு சீட்டுகள் இருக்கும். அந்த சீட்டில் வாசகர்கள் கைக்கு வருவதை எடுத்து படித்து பார்த்து, பதில் சொல்ல வேண்டும். இதுதான் விளையாட்டு.'நான்தான் முதல்லே எடுப்பேன்...' என்று முந்திக்கொண்டு சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து வந்திருந்த நடுத்தர வயது வாசகர் சரவணன் ஒரு சீட்டை துழாவி துழாவி எடுத்து படித்தார்.அதில், 'சமீபத்தில் நீங்கள் உங்கள் துணைவியாரை அழைத்துச் சென்ற சுற்றுலாதலம் எது?'என்று கேட்கப்பட்டு இருந்தது. 'அது வந்து...' என்று சரவணன் இழுக்க, விருட்டென்று எழுந்த சரவணனின் மனைவி பார்வதி, 'இந்த மனுஷன் என்னை எங்கேயும் கூட்டிட்டு போனதுல்ல... டூருக்கு நான்தான் எழுதிப் போட்டேன் இப்ப வாரமலர் இதழ் புண்ணியத்துல, நான்தான் இவரை கூட்டிட்டு வந்துருக்கேன்...' என்று பட்டென போட்டு உடைத்தார்.'சரிம்மா சரிம்மா... ஊருக்கு போன பிறகு உன்னைய நான் எங்கெல்லாம் கூட்டிட்டு போறேன் பார்...' என்று சொல்லி, திரும்ப அப்பத்தாவின் சுருக்கு பை தன்பக்கம் வர முடியாத இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்.சுருக்கு பையில் இருந்து அடுத்து யார் சீட்டு எடுக்கிறது என்று கேட்டதும் சொல்லி வைத்தது போல, அத்தனை ஆண் வாசகர்களும் கையில் செல்போனை எடுத்துக்கொண்டு, 'ஹலோ யாரு பேசறது... உள்ளே சிக்னல் சரியா இல்லை வெளியே வந்து பேசுறேன்...' என்றபடி வராத போனில் பேசிக்கொண்டே வெளியேறினர்.குற்றால டூர் கூப்பன் போடும் போதே, எந்த தேதியில் டூர் நடக்கும் என்பதை தெளிவாக, சில ஆண்டுகள் முன் வரை குறிப்பிட்டு வந்தோம்.காரணம், அந்த தேதியில் தேர்வு, திருமணம் மற்றும் வெளியூர் பயணம் என்று ஏற்கனவே நிகழ்வுகள் இருந்தால் கூப்பன் போடுவதை தவிர்த்து விடலாம் என்பதால். அப்படி இருப்பினும் தேர்வான பிறகு கூப்பிட்டு, தேர்வான சந்தோஷத்தை போனில் சொல்லி அவர்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்வோம்.எதற்காக என்றால் பல ஆயிரக்கணக்கான வாரமலர் வாசகர்களின் பல ஆண்டு கனவு இது.இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையில் வாய்ப்பு கிடைத்தும் யாரும் வராமல் இருந்து, வாய்ப்பை வீணாக்கி விடக்கூடாது என்ற அந்துமணியின் எண்ணம்தான் இதற்கான முக்கிய காரணம்.இருந்தும், கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாமல் வராமல் போனவர்கள் இத்தனை ஆண்டுகளில் இரண்டு குடும்பங்கள் மட்டும்தான்.இந்த இரண்டு குடும்பத்திற்கு பதிலாக வேறு இரண்டு குடும்பங்களை, கூப்பன் குவியலில் இருந்து மீண்டும் தேர்ந்து எடுத்து அழைத்துச் சென்று இருக்கிறோம்.உள்ளபடியே அவர்கள் பெரும் அதிர்ஷ்டசாலிகள் தான்.அவர்களில் ஒருவர்தான் கல்பாக்கம் சித்ரா. ஐம்பது வயதை தாண்டியவர்; அந்துமணியின் தீவிர வாசகி. தமிழ் ஆர்வலர். குற்றால டூரில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை, வாழ்க்கையின் ஒரே கனவாகக் கொண்டவர்.நீண்ட கால தினமலர் - வாரமலர் இதழ் வாசகியான இவர், கடைசி கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டதில் எங்களுக்கே ஏகப்பட்ட மகிழ்ச்சி.வார்த்தைகளில் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் நிரப்பியபடி, வாசகி சித்ராவை போனில் அழைத்தோம்.நீண்ட காத்திருப்பிற்கு பின் நம் அழைப்பு ஏற்கப்பட்டது.நாம் யார் என்ற அறிமுகத்திற்கு பிறகு, 'சித்ரா மேடத்திடம் பேச வேண்டும்...' என்றதும் ஒரு நீண்ட மவுனம்... பிறகு பேசிய இளம் பெண்ணின் குரல், 'அம்மாட்டே இப்ப பேச முடியாது அவுங்க இப்ப ஆஸ்பத்திரியில் இருக்காங்க...' என்றது.— அருவி கொட்டும்.எல்.முருகராஜ்குற்றாலமும், ஞானசம்பந்தனும்...தமிழ் பேராசிரியர், திரைப்பட நடிகர், பட்டிமன்ற நடுவர், நகைச்சுவை பேச்சாளர் என பன்முகம் கொண்ட இன்முக கலைஞர், தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றவர், முனைவர், கு.ஞானகம்பந்தன்.இவரது பேச்சைக் கேட்டு, யாராவது சிரிக்காமல் இருந்தால், லட்ச ரூபாய் தருவதாக தாராளமாக பந்தயம் கட்டலாம்.இவர், மதுரையில் துவங்கிய நகைச்சுவை மன்றத்திற்கு, அடுத்த ஆண்டு வெள்ளி விழா ஆண்டாகும்.வீட்டிற்கு ஒரு நுாலகம் என்பது, எப்போதோ கேட்ட கெட்ட வார்த்தையாகிப்போன இந்த நாளில், தன் வீட்டில் உள்ள நுாலகத்தை, பூஜை அறையை விட மேலானதாக நேசிக்கிறார்; அங்குள்ள பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை இப்போதும் வாசிக்கிறார்.நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர். அமெரிக்கா வாழ் தமிழர்களின் அன்பர். இந்த தொடர்பு காரணமாக அங்குள்ள தொழிலதிபர் பால் சி.பாண்டியன் உதவியையும், இசையறிஞர் மம்மதுவின் உழைப்பையும் வைத்து இவர் உருவாக்கியுள்ள, 'தமிழிசை பேரகராதி' காலத்தை வெல்லும், தமிழ்கூறும் நல்லுலகம் உள்ளவரை இவர் பேர் சொல்லும்.கடந்த, 2008ம் ஆண்டு வரை மதுரையில் இருந்து டூர் வாசகர்கள் புறப்படும் போது வந்து வழியனுப்பி, பேசுவார். அப்போது, 'எல்லாரையும் கூப்பிட்டுட்டு போறீங்க, என்னைய மட்டும் மதுரையிலேயே விட்டுட்டு போறீங்களே...' என்று வேடிக்கையாக சொன்னார்.உடனே அந்துமணி, 'இப்பவே நீங்க குற்றாலம் வர்றீங்க; எங்க வாசகர்களுக்காக பேசுறீங்க...' என்று சொல்லி விட்டார். அந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை ஐயா அவர்களது வருகை ஆண்டு தவறாமல் இடம் பெற்று வருகிறது.குற்றால டூரில் மட்டும் பேராசிரியர் ஞானசம்பந்தன் தன் துணைவியார் அமுதாவுடன் வந்து பேசுவார். கணவர் நடுவராக இருக்க, இவர் மனைவி ஒரு அணியின் சார்பாக பேச்சில் வெளுத்து வாங்க, பட்டிமன்றம் களைகட்டும்.அதே போல பேச்சு கலையின் நுட்பங்களை சொல்லிக் கொடுத்து நம் வாசகர்களையும் பேசவைத்து விடுவார். அது ஒரு தனி டிராக்கில், 'மெகா' சிரிப்புடன் நடக்கும், இவரது பேச்சு, சிரிப்பை மட்டுமல்ல, சிந்தையையும் தூண்டிவிடும் வல்லமை கொண்டது.நம் அந்துமணிக்கு பல ரசிகர்கள் உண்டு என்றால், அந்துமணியோ இவரது ரசிகர். இவரது பேச்சை கேட்டு அந்துமணி சிரிக்கும் சிரிப்பு தென்காசியை தாண்டியும் கேட்கும். அந்துமணியை அப்படி சிரிக்க வைப்பதற்காகவே புதிது புதிதான நகைச்சுவை செய்திகளோடு வருவார் பேராசிரியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !