பசுமரத்தாணி பதிவுகள்!
கை கூப்பி வணங்கியபடி, அறைக்குள் பிரவேசிக்கும் கணவன் - மனைவியை, இன்முகமாய் வரவேற்றாள், மனநல மருத்துவர், மாலா விஸ்வநாத்.கணவனுக்கு, வயது, 38 இருக்கக் கூடும். கனத்த, சதைத்த உடல்வாகு. எடியூரப்பா போல வெள்ளை நிற சபாரி உடுத்தியிருந்தான். நெற்றியில் விபூதி பட்டை, சிரிக்கும் கண்கள்.மாலா விஸ்வநாத்துக்கு எதிரே, இருவரும் அமர்ந்தனர். முதலில் வாயை திறந்தாள், மனைவி.''இவர் தான், என் கணவர். பெயர், வந்தியதேவன். தம்பிமலை பல்கலைக் கழகத்தில், மொழியியல் துறையில், விரிவுரையாளராக பணிபுரிகிறார். எங்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன, எட்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். என் கணவருக்கு தான் நீங்கள், மனநல ஆலோசனை வழங்க வேண்டும்,'' என்றாள்.குறும்பாய் சிரித்தான், வந்தியதேவன். ''என் மனைவி, தவறாக கூறுகிறாள். அவளுக்கு தான் நீங்கள் மனநல ஆலோசனை வழங்க வேண்டும்,'' என்றான்.''திருமதி வந்தியதேவன்... உங்க பெயர் என்ன?''''காஞ்சனா!''''எனக்கு மிகவும் பிடித்த பெயர். உங்கள் கணவருக்கு என்ன பிரச்னை?''''அவரின் இரு கைகளை நீட்ட சொல்லி பாருங்கள்... பிரச்னை என்னவென்று உங்களுக்கே தெரிந்து விடும்,'' என்றாள்.நாணி கோணினான், வந்தியதேவன்.''வெட்கப்படும் அளவுக்கு கைகளில் என்ன விஷயத்தை ஒளித்து வைத்துள்ளீர்கள், தேவன்?''''நான் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான வெட்கம். எல்லாரும் என் கைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக, நான் முழுக்கை சட்டையை அணிவதில்லை. நன்றாக பாருங்கள் டாக்டர்,'' என, இரு கைகளையும் நீட்டினான். இரு கடல் கெளுத்தி மீன்கள் போல் கைகள். முன்னங் கைகளில் பச்சை குத்தியிருந்தான். இரு கைகளையும் தன் பக்கம் முழுமையாக இழுத்து, பச்சை குத்தலை வாசிக்க ஆரம்பித்தாள், மாலா விஸ்வநாத்.''அன்பழகி, பத்மாவதி, மரகதமணி, திருவள்ளுவன், மருதமலை, ரோசலின் மேரி!''அந்த ஆறு பெயர்களையும் தன் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டாள், மாலா விஸ்வநாத்.''வந்தியதேவன்... இந்த ஆறு பெயர்களை எதற்காக பச்சை குத்தியுள்ளீர்கள் என்பதை விளக்க முடியுமா?''''ஒய் நாட்... அன்பழகி, என் தாயாரின் பெயர். உலகிலுள்ள எல்லா அம்மாக்களின் நல்ல குணங்களை அன்பழகி என்ற, என் தாயிடம் கண்டு வியந்திருக்கிறேன்... என் தாய், நன்றாக சமைப்பாள். பின்னங்கால் வரை தலைமுடி அடர்ந்திருக்கும்... இனிமையான குரல்... மொத்தத்தில் என் தாயின் பெருமைகளை கூற, ஒருநாள் போதாது,'' என்றான்.''அவரவருக்கு அவரவர் தாய் தான், 'பெஸ்ட்!' உலகின் கோடிக்கணக்கான நல்ல அம்மாக்களில், உங்கள் அம்மாவும் ஒருவர்,'' என்றார், மாலா விஸ்வநாத்.''அப்படி சொல்லாதீர்கள்... நான் வழிபடும் பெண் தெய்வம், என் அம்மா தான்!''''இப்ப, அவர் எங்கிருக்கிறார், வந்தியதேவன்?''''கர்ப்பப்பை புற்றுநோய் வந்து, சில ஆண்டுக்கு முன்தான் இறந்து போனார். இருந்தும், அவரது ஆன்மா என்னையும், என் வீட்டையும் சுற்றி சுற்றி வருகிறது,'' என்றான்.''நன்றி பாராட்ட, அவரின் பெயரை பச்சை குத்தி வைத்துள்ளீர்கள்... நல்லது! பத்மாவதி யார்?''''என் ஆரம்ப பள்ளி ஆசிரியை, பத்மாவதி; என் கல்விக் கண்ணை திறந்துவிட்ட மந்திரவாதி. கல்வியை விளையாட்டாய் எனக்கு ஊட்டியவர். என் கல்வி பணிக்கு ஆழமான, அழுத்தமான அஸ்திவாரம் போட்டது அவர் தான்.''அவர், புடவையை நேர்த்தியாக அணிந்திருந்ததை போல, வேறெந்த பெண்ணும் அணிந்து நான் பார்த்ததில்லை. ஒரு ஆணோ, பெண்ணோ, வாழ்க்கையில் வெற்றி பெற, அவர்களுக்கு சிறப்பான ஆரம்ப பள்ளி ஆசிரியர் அல்லது ஆசிரியை தேவை. ''பத்மாவதி டீச்சர், ஆரம்ப பள்ளி ஆசிரியைகளுக்கு, ஒரு அழகிய முன் மாதிரி,'' என்றான்.''இது ஒரு, உளவியல் அறிஞரான, ப்ராய்டியன் தாக்கம் தான். ஆசிரியைக்கு பதில் ஆசிரியர் கல்வி கற்றுத்தர வந்திருந்தால் இந்தளவு கவர்ந்திருக்க மாட்டார்,'' என்றார்.''என்னுடைய அபிமானத்தை கொச்சைப்படுத்தாதீர், டாக்டர்!''''சாரி... அடுத்து, திருவள்ளுவன்?''''அவர், என் இளங்கலை, முதுகலை மொழியியல் பாடங்களுக்கான ஆசிரியர். 'தமிழ் மொழியிலிருந்து தான் உலகின் எல்லா மொழிகளும் தோன்றின...' என்பார். 'பண்டிதர் தமிழை விட, வட்டார தமிழ்கள் தான் இனிமையானவை...' என, வாதிடுவார். ''தமிழ் வார்த்தைகள் வேற்று மொழிகளில் பயன்படுத்தப்படுவதை உதாரணங்களுடன் விளக்குவார். ''கி.ராஜநாராயணன் எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர். இளம் முனைவர், முனைவர் பட்டங்களை நான் பெற, பெரிதும் கிரியா ஊக்கியாக இருந்தவர், அவர் தான். கடைசி மூச்சு வரை கற்றபடி இருந்தால் தான், சிறந்த ஆசிரியனாக முடியும் என, என்னை வழி நடத்தியவர். திருக்குறள் மீது மாறா காதல் கொண்டவர்,'' என்றான்.''மருதமலை என்பவர் யார்... அவர் பெயரை ஏன், பச்சை குத்தி கொண்டீர்கள்?''''ஒரு தடவை அரசு பேருந்தில் ஏறி, சென்னைக்கு போனேன். பயணியர் அனைவரும், நன்கு துாங்கிக் கொண்டிருந்தோம். திடீரென பஸ் குலுங்கி, தாறுமாறாய் அங்குமிங்கும் தறிகெட்டு ஓட ஆரம்பித்தது; நாங்கள், விழித்து அலறினோம்; கண்டக்டரும் அலறினார். ''டிரைவருக்கு, 'ஹார்ட் அட்டாக்...' பிரம்மபிரயத்தனம் செய்து, வண்டியை செலுத்தி, பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார், டிரைவர். 'இந்த பாழாய்போன, 'ஹார்ட் அட்டாக்' சென்னையில் பயணியரை இறக்கி விட்டபின், வந்திருக்கக் கூடாதா... உங்களை எல்லாம் சில பல நிமிடங்கள் அலறியடிக்க வைத்ததற்கு மன்னியுங்கள்... முருகா...' என்றபடி, உயிர் நீத்தார் டிரைவர்,'' என்றான்.''நல்ல அரசு ஊழியர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர்,'' என்றார், மருத்துவர்.''டிரைவரின் பெயர், மருதமலை என்பதை கேட்டு அறிந்தேன். சில வாரங்களுக்கு பின், மருதமலை குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறி வந்தேன்,'' என்றான்.''உயிர் காத்த மருதமலை பெயரையும் பச்சை குத்தி கொண்டீர்கள். மரகதமணி பற்றி கூறுங்களேன்,'' என்றார், மருத்துவர்.மரகதமணி என்கிற பெயர் உச்சரிக்கப்பட்டதும், வந்தியதேவனின் கண்கள், ஏகாந்தத்தில் நட்டுக் கொண்டன. முகம் ரோமாஞ்சனம் பூசிக் கொண்டது. வந்தியதேவனின், 38 வயது முகம், 20 வயது வாலிப முகமாய் மாறியது.''மரகதமணி, என் காதலி. அவரும், நானும், எட்டு ஆண்டு காதலித்தோம். அவளை காதலித்த நாட்கள், தங்க ஜரிகை நெசவிய வைர நாட்கள். மரகதமணி, வயலும் வயல் சார்ந்த கிராமிய பெண்மணி. நாட்டுப்புற பாடல்கள் பாடுவாள். இளம் முனைவர், பட்டப்படிப்பை இருவரும் சேர்ந்தே முடிக்கும் தருணத்தில், பாம்பு கடித்து இறந்து போனாள்,'' என்றான்.மற்ற பெயர்களை பெருமையாக கணவன் கூறும்போது, முக பாவங்கள் காட்டாத காஞ்சனா, மரகதமணி பற்றி கூறும்போது, பொறாமை முகம் காட்டினாள்.''கணவன்மார்கள், முன்னாள் காதலியரை பற்றி சிலாகித்து பேசுவதை சகிக்கும் சமூகம், மனைவிமார்கள், தங்களது முன்னாள் காதலர்களை பற்றி பேசினால் சகிப்பதில்லை. ஆணாதிக்க சமுதாயம் இது,'' என, பொருமினாள், காஞ்சனா.''ரோசலின் மேரி?''''என் மனைவிக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர். கர்ப்பப்பையில் இருந்த என் மகனின் கழுத்தை, தொப்புள்கொடி சுற்றிக்கொண்டது. ஆறு மணி நேர போராட்டத்துக்கு பின் மருத்துவர், தாயையும், சேயையும் காப்பாற்றினார். அவர் பார்க்கும், 100 பிரசவங்களில், 98 பிரசவங்கள், சுகப்பிரசவங்கள். அதிக பணம் பறிப்பதில்லை. பிறந்ததே பிரசவம் பார்க்க என்கிற கொள்கை உடையவர், ரோசலின் மேரி!'' என்றான்.''ஒரு ஆணோ, பெண்ணோ, தங்களது வாழ்நாளில், நுாறு மனிதர்களை மிகவும் நேசிக்கின்றனர்... நுாறு மனிதர்களை வெறுக்கின்றனர்... உணர்வுகளை கண்காட்சி ஆக்குவது சரியல்ல... நீங்கள் பச்சை குத்தியுள்ள மரகதமணி பெயர், உங்களுடன் தாம்பத்யம் செய்யும் மனைவியை வெகுவாக உறுத்தலாம்.''யார் யார் பெயரையோ பச்சை குத்தியுள்ள இவன், நம் பெயரை பச்சை குத்தவில்லையே என, உங்களுக்கு நெருக்கமான பலர், ஆவலாதி காட்டலாம். கை என்ன விளம்பர பலகையா... நீங்கள் நன்றி பாராட்டும், நேசிக்கும், மதிக்கும் நபர்களின் உருவங்களையும், பெயர்களையும் இதயத்தில் பச்சை குத்திக் கொள்ளுங்கள்... ''அதுவே, அர்த்த பொருத்தமான பசுமரத்தாணி பதிவுகள். நீங்கள் பச்சை குத்தியுள்ள நபர்களை பற்றி அபிப்ராயம் இன்னும், 10 ஆண்டுகள் கழித்து மாறலாம். அந்த பெயரை மட்டும் அழிப்பீர்களா என்ன,'' என்ற மருத்துவர், ''திருமதி வந்தியதேவன்... உங்கள் கணவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?''''என் கணவர், உயரிய நோக்கத்தோடு தான் பச்சை குத்தியிருக்கிறார். ஆனால், பலர் இதை கேலி செய்கின்றனர். என் கணவர், என்னை கட்டியணைக்கும் போது, அவரது கைகளிலுள்ள பெயர்கள் என்னை உறுத்துகின்றன. உடலை பாடம் நடத்தும் கரும்பலகையாக பாவித்தல், எனக்கு உடன்பாடல்ல...''இவர், தன் கைகளிலுள்ள எல்லா பெயர்களையும் அழித்துவிட வேண்டும். அதற்கான மனநல ஆலோசனை வழங்குங்கள் டாக்டர்,'' என்றாள்.மீண்டும் ஒரு மணி நேரம் ஆலோசனை வழங்கிவிட்டு, ''வந்தியதேவன்... நான் ஒரு, 'காஸ்மோ கிளினிக்' முகவரி தருகிறேன். 'லேசர்' தொழில்நுட்பத்தால், உங்கள் கை, பச்சை குத்தலை அகற்றி விடலாம். இரண்டு வாரங்கள் கழித்து நீங்கள் இருவரும் என்னை வந்து பாருங்கள்,'' என்று, ஆலோசனை கட்டணமாக, 1,500 ரூபாய் வாங்கிக் கொண்டாள், மாலா விஸ்வநாத்.இரண்டு வாரங்கள் கழித்து-வந்தியதேவனும், காஞ்சனாவும் வணங்கியபடி உட்பட்டனர். வந்தியதேவன் முழுக்கை சட்டை அணிந்திருந்தான்.''காஸ்மோ கிளினிக் போனீர்களா, தேவன்?''நினைத்தாலே இனிக்கும் படத்தில் நடித்த ஜெயப்ரதா போல, ஆம் என்றும், இல்லை என்றும் குழப்பமாய் தலையாட்டினான்.''எங்க கையை காட்டுங்க,'' என்றார், மருத்துவர்.தயங்கி தயங்கி, முழுக்கை சட்டையை பின்னுக்கு தள்ளினான். ஏற்கனவே இருந்த பெயர்களுடன், புதிதாய் ஒரு பெயர், பச்சை குத்தப்பட்டிருந்தது. கண்களை விரித்து பார்த்து அதிர்ந்தாள், மனநல மருத்துவர்.'மாலா விஸ்வநாத்!'''என்ன காரியம் பண்ணியிருக்கீங்க, தேவன்?''''கவுன்சிலிங் கொடுக்கிறதுல நீங்க, 'பெஸ்ட்!' என்னையே உங்க மனநல ஆலோசனை, ஒரு நிமிஷம் புரட்டி போட்டு விட்டது. 'தி கிரேட்... சைக்கியாட்ரிஸ்ட்'டை கவுரவப்படுத்த, அவர் பெயரையும் பச்சை குத்தியுள்ளேன். பசுமரத்தாணி பதிவுகள் தொடரும்,'' குறும்பாய் கண் சிமிட்டினான், வந்தியதேவன்.ஸ்தம்பித்து, உறைந்து, விக்கித்து போனாள், மாலா விஸ்வநாத்.ஆர்னிகா நாசர்