மூலிகை அருவி!
'கொரோனா' போன்ற கொடிய நோய்களுக்கு, மூலிகை மருத்துவம் பரிந்துரைக்கப்படுகிறது. இதெல்லாம் வருமென்று அறிந்தோ என்னவோ, முன்னோர், காடுகளிலுள்ள அருவிகளை பாதுகாத்து வந்தனர்.பொதுவாக அருவித் தண்ணீர், மூலிகை கலந்தே வரும் என்பர். அதிலும், திண்டுக்கல், மணக்காட்டூர் கரந்தமலை பகுதி, சாஸ்தா கோவில் அருகிலுள்ள அருவிக்கு, 'மூலிகை அருவி' என்றே பெயர் சூட்டியுள்ளனர்.கரம்பன் எனும் அசுரனின் மகனான மகிஷாசுரனை, வதம் செய்தாள், பார்வதி. கோபமடைந்த மகிஷாசுரனின் சகோதரி மகிஷி, பார்வதியை அழிக்க முயன்றாள். அதற்கான பலத்தை பெறும் விதத்தில், விந்திய மலையில் பிரம்மனை நோக்கி தவம் செய்தாள். காட்சியளித்த பிரம்மாவிடம், 'சிவ விஷ்ணுவுக்கு பிறக்கும் பிள்ளையைத் தவிர, வேறு யாராலும் எனக்கு மரணம் நேரக் கூடாது...' என, வரம் பெற்றாள். மகிஷியை வதம் செய்வதற்காக, சிவனுக்கும், மோகினியாக வடிவெடுத்த, விஷ்ணுவுக்கும் மகனாக அவதரித்தார், சாஸ்தா. இவரே, சபரிமலையில் தர்மசாஸ்தாவாக இருக்கிறார்.இவரை, அய்யனார் எனவும் குறிப்பிடுவர். காட்டுக்குள் குடியிருப்பதால், 'வனராஜா' எனப்படுவார். மணக்காட்டூர் வனப்பகுதியிலும், இவருக்கு கோவில் உள்ளது.இங்கு, பெரிய கருப்பு, சின்னக் கருப்பு சுவாமிகள், காவல் தெய்வங்களாக உள்ளனர்.கருவறையில் பூரணவள்ளி, சுந்தரவள்ளி சமேதராக, மூலவர், அய்யனார் காட்சியளிக்கிறார். கோவிலில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் மூலிகை அருவி உள்ளது. ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் கொட்டுகிறது. நோய்கள் குணமாக, மூலிகை காற்றை சுவாசித்தபடி, மலைப்பாதையில் நடந்து, அருவியில் நீராடுகின்றனர். மணக்காட்டூர் மெயின் ரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் கோவில் இருப்பதால், நடந்தே செல்ல முடியும். பக்தர்கள் கூட்டமாக செல்வதே பாதுகாப்பானது.பாலிதீன் பொருட்களை எடுத்து செல்லக் கூடாது. அருவியில் நீராடிய பின், சாஸ்தாவை தரிசிக்க வேண்டும்.நான்கு ஆண்டுக்கு ஒருமுறை, வைகாசியில் திருவிழா நடத்தப்படும். விழாவன்று, சுவாமிக்கு சந்தனக்காப்பு நடக்கும். அப்போது, குதிரை எடுப்பு நேர்த்திக்கடனைச் செலுத்துவர், பக்தர்கள்.திண்டுக்கல் - மணக்காட்டூர் சாலையில், 5 கி.மீ., துாரத்தில் அய்யனார் கோவில் விலக்கு உள்ளது. அங்கிருந்து, 3 கி.மீ., கடந்தால், கரந்தமலையை அடையலாம். காலை, 9:00- முதல், மாலை, 4:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.தி. செல்லப்பா