உள்ளூர் செய்திகள்

ஞானிகள் பார்வை பட்டால்...

முற்பிறவியில் செய்த பாவங்களே, நோய் வடிவில் வருகின்றன என்பது, முன்னோரின் வாக்கு. அவற்றில் இருந்து விடுபடும் வழி பற்றி, தீர்த்த மகாத்மியம் கூறுகிறது.கிருத யுகத்தில் நடந்த வரலாறு இது:அவந்தி நாட்டை ஆண்டு வந்தார், மன்னர், விஷ்ணுவர்மன்; தீய குணங்களின் இருப்பிடமான அவர், நல்லவைகளையும், அவற்றின்படி செயல்படும் நல்லவர்களையும், விட்டு வைக்க மாட்டார்.அவர் செய்த தவறுகள், நோயாக வெளிப்பட்டன. இருமல் நோய் வந்து, மன்னரை ஆட்டிப் படைத்தது. என்ன தான் ராஜவைத்தியம் பார்த்தும், இருமல் அடங்குவதாக இல்லை; படாதபாடு பட்டார்.மன்னரின் மனைவி, புண்ணியசீலை. பெயருக்கு ஏற்றார் போல், புண்ணியமும், நல்லொழுக்கமும் நிறைந்தவள்; கணவரின் துயர் தீர, எந்த நேரமும் தெய்வத்திடம், பிரார்த்தித்தபடியே இருந்தாள்.அவள் பிரார்த்தனைக்கு பதில் அளிப்பதைப் போல, அரண்மனை தேடி வந்தார், சனக முனிவர். பிரம்மாவின் மனதால் படைக்கப்பட்ட, சனகாதி முனிவர்கள் நால்வரில் முதலானவர், இவர். அரண்மனை தேடி வந்த முனிவரை, அன்போடு வரவேற்ற அரசி, 'என் கணவரை காத்தருள வேண்டும்...' என, வேண்டினாள்.மன்னரும், முனிவரின் காலடியில் விழுந்து வேண்டினார்.'மன்னா... யாராலும் வினைப் பயனைத் தடுக்க இயலாது. அதை அனுபவித்து தான் தீர்க்க வேண்டும். இருப்பினும், தெய்வ வழிபாடு இல்லாத இடம், ஞான நுால்களை பயிலாத இடம், நல்லவர்களின் கூட்டம் இல்லாத இடம்...'ஒழுக்கம் இல்லாத இடம், பிறருக்கு உதவும் நல்ல இயல்பு இல்லாதவர் இருக்கும் இடம், தீவினை செய்வதிலேயே விருப்பம் உள்ளவர்கள் இருக்கும் இடங்களில், எல்லா வகையான நோய்களும் நிலைபெற்று இருக்கும்...' என்று, சனக முனிவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குறுக்கிட்டாள், அரசி, புண்ணியசீலை. 'முனிவர் பெருமானே... கணவர் என்ன தான் தீவினை செய்திருந்தாலும், அது தீர்வதற்காகத்தானே, தாங்கள் இங்கு வருகை புரிந்திருக்கிறீர்கள்... இல்லாவிட்டால், சனகாதி முனிவர்கள் நால்வரில் முதல்வரான, தங்கள் தரிசனம் எங்களுக்கு கிடைக்குமா... அருள் புரியுங்கள், சுவாமி...' என, வேண்டினாள்.'மன்னா... திருக்கோகர்ணம் எனும் சிவ தலத்தில், கோடி தீர்த்தம் என்னும் புனித தீர்த்தம் உள்ளது. மாசி மாதம், முதல் நாள், சூரிய உதயத்தில், அப்புனித நீரில் நீராடி, இறைவனை வணங்கு... உன் வினைகள் தீரும்...' என்று கூறினார், முனிவர்.மன்னரும் அவ்வாறே செய்து, வினைகள் நீங்கி, திருந்திய உள்ளத்தவராய் வாழ துவங்கினார். சேர்ந்த பாவமெல்லாம், ஞானிகள் பார்வை மற்றும் வாக்கால் நீங்கும், நல்லவற்றை அருளும் என்பதை, விளக்கும் கதையிது. பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !