ஒற்றுமை நீங்கிடில்...
பல காலம் பாடுபட்டு கட்டிய பெரிய கட்டடம், ஒரு சிறு நில அதிர்வால் தரை மட்டமாகி விடும். அதுபோல, பல்லாண்டு காலமாக கட்டிப்பிணைக்கப்பட்ட குடும்பம் என்னும் கோவில், ஒரு சிறு மனஸ்தாபத்தின் காரணமாக, சிதைந்து போய் விடும்.'உறவுகளுக்குள் பேதம் வேண்டாம்; அது தீராத துயரத்தை உண்டாக்கி விடும்...' என்று, விதுரர், திருதராஷ்டிரனின் கால்களில் விழுந்து கேட்டும், பலவிதமாக எடுத்து சொல்லியும். திருதராஷ்டிரன் கேட்கவில்லை. அப்போது, திருதராஷ்டிரன் மனதில் தைக்கும்படியாக விதுரர் சொன்ன கதை இது:பறவைகளை பிடிப்பதற்காக தன்னிடம் இருந்த, ஒரு வலையை பூமியில் விரித்து வைத்திருந்தான், வேடன் ஒருவன். எப்போது பார்த்தாலும் சேர்ந்தே திரியும் இரண்டு பறவைகள், வேடன் விரித்த வலையில் ஒன்றாக சிக்கிக்கொண்டன. துாரத்தில் இருந்து அதை பார்த்த வேடன், மகிழ்ந்தான். மெல்ல எழுந்து, சற்று நிதானமாகவே வந்தான்.'வலையில் சிக்கிய பறவைகள் எங்கு போய் விடும்...' என்ற எண்ணமே, அதற்கு காரணம்.வேடனின் எண்ணம் எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும். பறவைகளின் எண்ணத்தையும் பார்க்க வேண்டுமல்லவா?எங்கு போனாலும் ஒன்றாக சுற்றித் திரியும் அந்த பறவைகள், வேடன் வருவதை பார்த்ததும், வலையோடு எழுந்து ஒன்றாக பறக்கத் துவங்கின. வேடன் திடுக்கிட்டான்; இருந்தாலும், பறவைகள் பின்னாலேயே ஓடத் துவங்கினான்.அங்கே, தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவர், அதை பார்த்தார். வேடனின் செயல், அவருக்கு சிரிப்பை உண்டாக்கியது.'வேடனே... என்ன செய்கிறாய் நீ... ஆகாயத்தில் பறக்கும் பறவைகளை பிடிக்க, தரையில் பின் தொடர்ந்து ஓடுகிறாயே... ஏனிப்படி செய்கிறாய்... விசித்திரமாக இருக்கிறதே...' என, கேட்டார்.வேடன் நிதானமாக, 'முனிவரே... மேலே செல்லும், அந்த இரண்டு பறவைகளும் என்னிடம் இருந்த ஒரே வலையை, எடுத்துப் போகின்றன. அந்த பறவைகள் எந்த இடத்தில் விவாதத்தைத் துவங்கி, ஒற்றுமையை இழக்குமோ, அந்த இடத்தில் இரண்டு பறவைகளும், என் கையில் அகப்படும்; என் வலையும் திரும்பக் கிடைக்கும்...' என்று சொல்லி, ஓட்டத்தை தொடர்ந்தான். ஒரு சில வினாடி களிலேயே, பறவைகள் ஒற்றுமையை இழக்கத் துவங்கின. 'இந்த பக்கம் போகலாம்...' என்றது, ஒரு பறவை. 'இல்லையில்லை... அந்தப் பக்கம் போகலாம்...' என்றது, மற்றொன்று. அப்புறம் என்ன, இரு பறவைகளும் ஒன்றுமை இழந்தன.ஒரு பறவை, இந்த பக்கம் இழுக்க, மற்றொன்று, அந்த பக்கம் இழுக்க, இரண்டுமாக வலையோடு கீழே விழுந்தன.ஓடிப்போய், இரு பறவைகளையும் வலையோடு எடுத்து திரும்பினான், வேடன். ஒற்றுமையின்மை, நம்மை வீழ்த்தி விடும் என்பதை விளக்கும் இக்கதை; மற்றொரு விதமாகப் பார்த்தால், வேடனின் விடாமுயற்சி, அவனுக்குக் காரியத்தை சாதித்துக் கொடுத்ததைப் போல, விடாமுயற்சி வெற்றியை தரும் என்ற படிப்பினையையும் தருகிறது. பி.என்.பரசுராமன் ஆலய அதிசயங்கள்!சமயபுரம் மாரியம்மன் கோவிலில், உட்கார்ந்த கோலத்தில், அம்மனின் மிகப்பெரிய திருமேனி உள்ளது. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை, வேறு எந்த கர்ப்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி, மூலிகைகளால் ஆனது