சேரநன்நாட்டினில்... (5)
நாங்கள், 'லேக் சாங்' என்ற ஒரு நட்சத்திர, 'ரிசார்ட்'டில் தங்கி, குமரகத்தை வலம் வந்தோம். ஆலப்புழாவுக்கு அடுத்து, குமரகத்திலும், மணிமகுடமாக திகழ்வது, படகு வீடுகள் தான். ஒரு படுக்கை அறை முதல், 10 - 15 படுக்கை அறைகள் வரையுள்ள, பிரமாண்ட படகுகளும் உள்ளன. 'ஏசி' வசதி, நவீன கழிப்பறை, வரவேற்பறை, சமையலறை, முதல் தளம், பால்கனி என, வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் இருக்கின்றன.வசதிக்கேற்ப, வாடகைக்கு தங்கி கொள்ளலாம். 'ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. நாம் போக ஆசைப்படும் இடங்களுக்கு, படகில் அழைத்துச் செல்லவும், பிடித்த உணவை சமைத்து தரவும், படகில் ஆட்கள் உள்ளனர்.படகில் பயணித்தபடி, இயற்கை அழகை ரசிக்கலாம். மாலை, 6:00 மணிக்கு, ஏரிக்குள் சூரியன் மறையும் காட்சி, அதி அற்புதமாக இருக்கிறது. குமரகத்தை சுற்றிலும், குறுக்கும், நெடுக்குமாக, சாலைகள் போல, ஏரியில் இருந்து பிரியும் நீர்வழி பாதைகள் அமைந்துள்ளன. இரு கரைகளிலும், வீடுகள். அவற்றின் வாசல்களில் தலா ஒரு சிறிய படகு கட்டப்பட்டுள்ளது. நம் ஊரில், 'டூ-வீலர்'கள் போல, இவர்களுக்கு படகுகள்.தேவைப்படும் நேரத்தில், இன்ஜினை மாட்டி, கயிற்றை இழுத்து, 'ஸ்டார்ட்' செய்து, சட்டென கிளம்பி விடுகின்றனர். வீடுகளின் பின்புறம், தென்னந்தோப்புகள், நெல் வயல்கள் அமைந்துள்ளன. கேரளாவில், 'கள்'ளுக்கு அனுமதி இருப்பதால், தென்னை மரங்களில், காலையும், மாலையும், 'கள்' இறக்குகின்றனர், சேட்டன்கள்.வீட்டுக்கு வீடு தேங்காய் நாரில், சிறிய இயந்திரத்தில் கயிறு தயாரிக்கின்றனர். பெரும்பாலும், இதில் பெண்களே ஈடுபடுகின்றனர். சிறிய கை வலையை கால்வாயில் வீசி, மீன் பிடிக்கின்றனர், ஆண்கள். இங்கு, மீன் பிடி தொழில் முக்கியமாக உள்ளது.காயல்களில், மாலை, 6:00 மணிக்கு மேல் படகு போக்குவரத்து முடிந்ததும், மீன் பிடிக்க கிளம்பி விடுகின்றனர். இவற்றை வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வியந்து பார்த்து, விதம், விதமாக படம் பிடிக்கின்றனர்.குமரகம் பறவைகள் சரணாலயத்தில், பல வகையான பறவைகள் உள்ளன. சைபீரிய கொக்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இது தவிர, ஆயுர்வேத, 'ஹெல்த் கிளப்'கள், மசாஜ், உழிச்சல், பிழிச்சல், தாரை என, பல்வேறு ஆயுர்வேத சிகிச்சைக்காகவே, இங்கே பலர் வருகின்றனர். நவம்பர் முதல் மே மாதம் வரை, இங்கே, 'சீசன்!' இருப்பினும், ஆண்டு முழுவதும் சென்று அனுபவிக்க ஏற்ற இடம், குமரகம்.கேரளாவில், ஐந்து நாட்கள் சுற்றியதில், மனதில் தோன்றியது இது தான்... இது, கடவுளின் தேசம் என்பதை, யாரும் மறுக்க முடியாது.பயணத்தை முடித்து, மீண்டும் கொச்சியில் இருந்து விமானத்தில், சென்னை வந்து இறங்கியதும், டீ குடிக்கும் ஆவல், நாவில் எழுந்தது. சென்னை விமான நிலையத்தில், டீ குடிக்க, மிகப்பெரிய செல்வந்தராக இருந்தாக வேண்டும். முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரமே, விமான நிலைய கேன்டீனில், காபி விலை, 180 ரூபாய் என கேட்டு, காபி குடிக்காமல், பாக்கெட்டை பொத்தியபடியே, பதறி திரும்பிய கதை தான் தெரியுமே!எனவே, வரும் வழியில், கால் டாக்சியை நிறுத்தி, நம் பெஞ்ச் பெரியவர்கள் சங்கமிக்கும் நாயர் கடைக்கு வந்தேன். 'எந்தா சேட்டா... சுகந்தன்னே...' என, விளித்து - நாம் கேரளா சென்று வந்தது தெரிய வேண்டாமோ... டீக்கு, 'ஆர்டர்' சொல்லி, ஒரு, 'சிப்' பருகவும், கடை ரேடியோவில், 'சொர்க்கமே என்றாலும், அது நம்மூர போல வருமா...' என்ற பாடல் ஒலிக்கவும், சரியாக இருந்தது.உழைப்பால் மீண்ட, எண்ட கேரளம்!கடும் மழை, வெள்ளத்தால், கேரளாவில், 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான, பொது சொத்துகள் சேதம் அடைந்தன. ஆயினும், மலையாளிகள், கடும் உழைப்பாளிகள் என்பதில் சந்தேகமில்லை. உழைப்பே உயர்வு என்பதற்கேற்ப, ஒரே வாரத்தில் வெள்ள சோகத்தை மறந்து, பணிகளில் கவனம் செலுத்த துவங்கி விட்டனர்.இதற்கு உதாரணம், ஐந்து நாட்களும், நாங்கள் பயணித்த, 'டெம்போ டிராவலர்ஸ்' வேன் உரிமையாளர், திலீப், 46. வெள்ளை சீருடையில், 'பளீச்'சென இருந்தவரை, முதலில், டிரைவர் என்றே கருதினோம். தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசினார். வழிகாட்டி போல, பல இடங்கள் குறித்து எடுத்துரைத்தார்.கடைசி நாள், குமரகத்தில் இருந்து கொச்சி விமான நிலையம் செல்லும் வழியில், அவருடன் இரண்டு மணி நேரம் பேசினோம். அப்போது தான், அவர், எம்.பி.ஏ., பட்டதாரி என்பதும், ஆஸ்திரேலியாவில், உறவினருடன் சேர்ந்து, 'பிசினஸ்' செய்ததும், ஒரு கட்டத்தில், தாயகம் திரும்பி, என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில், டிராவல்ஸ் துவங்கி, 30க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் தொழில் நடத்தி வருவதும் தெரிந்தது.கொச்சியில் அலுவலகம் வைத்துள்ளார். 'ஏசி அறையில் இருந்து நிர்வாகம் செய்யாமல், களத்தில் இதுபோன்ற சுற்றுலா பயணியருடன் சென்று வந்தால் தான், டிரைவர்களுக்கு நம் மீது மரியாதை இருக்கும். உரிமையாளர் வழியில் எங்கும் தென்படலாம் என்பதால், கவனமாக இருப்பர்...' என்கிறார்.இவரது மனைவி, அரசு கல்லுாரி பேராசிரியை. மகன், கோழிக்கோடு, என்.ஐ.டி., மாணவர், மகள், பிளஸ் 2 படிக்கிறார். டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என, தெரிந்ததும், இறங்கும்போது, 'டிப்ஸ்' கொடுக்கும் எண்ணத்தை ஏறக்கட்டி, விடை பெற்றேன்.- முற்றும்எஸ்.ஜெயசங்கர நாராயணன்