தண்ணீருக்கும், மின்னஞ்சல்களுக்கும் தொடர்பு உண்டா?
ஐரோப்பிய நாடான பிரிட்டன், 1967க்கு பின், அங்குள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் அணைகளின் நீர்மட்டம், வரலாறு காணாத அளவுக்கு குறைந்து, மிகக் கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டனின் தேசிய வறட்சி குழு, மக்களை மின்னஞ்சல் பெட்டியில் உள்ள பழைய செய்திகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்த அறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளானாலும், இதன் பின்னணியில் உள்ள சுற்றுச்சூழல் காரணங்கள் கவனத்திற்குரியவை. நம்முடைய டிஜிட்டல் வாழ்க்கை முறையும், தண்ணீர் பயன்பாடும் எவ்வாறு தொடர்புடையவை என்பதை, இது வெளிப்படுத்துகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னஞ்சல்கள், சமூக வலைத்தளங்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவை தரவு மையங்களில் சேமிக்கப்படுகின்றன. இந்த மையங்களில் உள்ள, 'சர்வர்கள்' தொடர்ந்து இயங்குவதால், அவை அதிக வெப்பத்தை வெளியிடுகின்றன. இவற்றைக் குளிர்விக்க, பெரிய அளவிலான நீர் சார்ந்த குளிரூட்டும் அமைப்புகள், குறிப்பாக, ஆவியாக்கும் கோபுரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, 1 எம்.பி., அளவு மின்னஞ்சல், தரவு மையங்களில் சேமிக்கப்படுவதற்கு, சுமார் 4 முதல் 10 லிட்டர் வரை நீர், குளிரூட்டலுக்கு செலவாகலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரிட்டனில், தரவு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இவை நீர் தேவையை பன்மடங்கு உயர்த்துகின்றன. 2025ல், கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், நீர் பற்றாக்குறையை சமாளிக்க, இத்தகைய அணுகுமுறைகள் அவசியமாகின்றன. உலகளவில் தரவு மையங்கள், ஆண்டுக்கு 1.8 டிரில்லியன் லிட்டர் நீரைப் பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் மட்டும், மொத்த நீர் பயன்பாட்டில், தரவு மையங்கள் 3 சதவீதம் பங்களிக்கின்றன. எனவே, தேவையற்ற மின்னஞ்சல்களை நீக்குவது, தரவு சேமிப்பு அளவைக் குறைத்து, குளிரூட்டல் தேவையையும், அதற்கு தேவையான நீரையும் குறைக்கிறது. இது, சிறிய அளவில் தோன்றினாலும், மில்லியன் கணக்கான மக்கள் இதைச் செய்யும்போது, கணிசமான நீர் சேமிப்பு சாத்தியமாகும். இருப்பினும், தனி நபர்களின் மின்னஞ்சல் நீக்கம் மட்டுமே வறட்சிக்கு முழுமையான தீர்வாகாது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி தரவு மையங்களை இயக்குவது, நீர் தேவையற்ற குளிரூட்டல் தொழில்நுட்பங்களை உருவாக்குவது போன்ற, மாற்று வழிகளும் ஆராயப்பட வேண்டும். பிரிட்டனின் மின்னஞ்சல் நீக்க அறிவிப்பு விசித்திரமாக தோன்றினாலும், டிஜிட்டல் உலகின் நீர் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இது, நம் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கும், இயற்கை வளங்களுக்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்துகிறது. எதிர்காலத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப முறைகளை ஊக்குவிப்பதன் மூலம், வறட்சி போன்ற சவால்களை, மிகவும் திறம்பட எதிர்கொள்ள முடியும். எம். நிமல்