கலைவாணர் என்.எஸ்.கே., (18)
கலைவாணரின் குழுவில், பல்வேறு திறமை வாய்ந்த கலைஞர்கள் இருந்தனர்; அவர்களில், 'காக்கா' ராதாகிருஷ்ணனும் ஒருவர்!ராதாகிருஷ்ணனுக்கு, 'காக்கா' என்ற சிறப்பு பெயர், சிங்காரி படத்தின் மூலம் கிடைத்தது என்றாலும், அதற்கு முன், மங்கையர்கரசி எனும் படத்திலேயே அவர் காக்கா பிடிக்கும், 'காமெடி' காட்சி ஒன்றை, செய்திருந்தார்.'காக்கா' ராதாகிருஷ்ணன், 'மங்கள பால கான சபா'வில் சிறு வயதில் நடிகராக பணியாற்றிய போதிலிருந்தே, அவரது தனித்தன்மைகள், கலைவாணரை கவர்ந்திருந்தன. அந்நாளில், காக்காவும், சிவாஜி கணேசனும் நாடக கம்பெனியில், நண்பர்களாக இருந்தனர். நாடகங்களில் நடித்த நேரம் போக, மற்ற நேரங்களில், கலைவாணர், மதுரத்தைப் போல பேசி, நடித்து, பாராட்டுதல்களைப் பெற்றனர்.ஒருசமயம், 'மங்கள பால கான சபா' கோயம்புத்தூரில் முகாமிட்டிருந்தது. அப்போது, படங்களில் நடிப்பதற்காக, அவ்வூரில் உள்ள சென்ட்ரல் ஸ்டுடியோவில் கலைவாணரும், மதுரமும் தங்கியிருந்தனர். ஒருநாள், ஸ்டுடியோவில் அவர்களை சந்தித்தார், நடிகர் டி.பாலசுப்ரமணியம். அப்போது, 'பொன்னுசாமி பிள்ளையின், 'பாய்ஸ்' கம்பெனியில், இரண்டு சிறுவர்கள், உங்கள் இருவரை போல, 'காமெடி' செய்கின்றனர். நீங்கள், ஒருநாள் அப்பையன்களின் நடிப்பை பார்க்க வேண்டும்...' என்று, கலைவாணரிடம் தெரிவித்தார்.'ஒருநாள் என்ன... இப்போதே, அச்சிறுவர்களின் நடிப்பைக் காண வருகிறேன்...' என்று, காரில் கிளம்பினார் கலைவாணர். 'ஏதோ நாம் சொன்ன செய்தியைக் கேட்டு, தலையை ஆட்டி, சும்மா இருந்து விடுவார்...' என்று தான் நினைத்தார், பாலசுப்பிரமணியம். ஆனால், கலைவாணர், தம்மையும் காரில் ஏற்றி, 'மங்கள பால கான சபா' நடிகர்கள் தங்கியிருந்த இடத்திற்கு கிளம்பியது, பாலசுப்பிரமணியத்தை புல்லரிக்கச் செய்தது.திறமையுள்ள கலைஞர்கள் எங்கிருந்தாலும் அவர்களை தேடிச் சென்று பாராட்டும் நற்குணம், கலைவாணரிடம் இருந்ததால், அவர், சிறுவர்களைக் காண ஆர்வத்தோடு சென்றார்.கலைவாணருக்கு முன், காக்கா, கலைவாணராகவும், கணேசன் மதுரமாகவும் மாறி, என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம், 'காமெடி' காட்சிகளை, நடித்துக் காட்டினர்.அவர்களின் நடிப்பை, 'பேஷ்... பேஷ்...' என்று, தலையை ஆட்டி, வஞ்சனையில்லாமல் ரசித்தவர், சிரித்துக் கொண்டே, 'சிறுவர்கள் எங்களை நன்றாக, 'காப்பி'யடிக்கக் கற்றுக் கொண்டுள்ளனர். அருமையான தயாரிப்பு...' என்றார்.இருவரின் பெயர்களையும், கேட்டுத் தெரிந்து, தன் அருகில் அவர்களை அழைத்து, முதுகில் தட்டிக் கொடுத்தார். அப்போது, மதுரமாக நடித்துக் காட்டிய சிவாஜி கணேசன், நாணிக் கோணி நின்றார்!சில மாதங்களுக்கு பின், கலைவாணர், சொந்தமாக படங்கள் தயாரிக்கத் துவங்கிய போது, சந்திரஹரி எனும் நகைச்சுவைப் படத்தில் நடிக்க, சிறு வயது நடிகன் தேவைப்பட்டான். அதில், 'சந்திரஹரியின் மகன் தாசலோகி வேடத்திற்கு, பொருத்தமாக யாரைப் போடலாம்...' என்று, கலைவாணர் யோசித்த போது, தாம் ஒரு சிறுவனை அழைத்து வருவதாகக் கூறினார், எம்.ஆர்.ராதா.அப்போது, 'மங்கள கான சபா' சிங்காநல்லூருக்கு வந்திருந்தது. அங்கே சென்று, காக்கா ராதாகிருஷ்ணனை, தனியே சந்தித்து, 'சினிமாவில் நடிக்கலாம்; என்னோடு புறப்பட்டு வா...' என்று சொல்லி, கோயமுத்தூருக்கு அழைத்து வந்தார், எம்.ஆர்.ராதா.'இதோ ஒரு சிறுவனைக் கூட்டி வந்துள்ளேன்...' என்று, காக்கா ராதாகிருஷ்ணனை, கலைவாணருக்கு முன் நிறுத்தினார், எம்.ஆர்.ராதா.நிமிர்ந்து பார்த்த கலைவாணர், 'இந்தப் பையனா... இவனைத் தான் நினைத்தேன்; நீ அவனையே அழைத்து வந்து விட்டாயே... பையன் கெட்டிக்காரன்...' என்று சொல்லி, பெருமைப்பட்டார். சந்திரஹரி படத்தில், காக்கா ராதாகிருஷ்ணனுக்கு, தாசலோகி வேடம் கிடைத்தது; அந்த நிமிடமே, கலைவாணரின் உள்ளத்திலும், அவருக்கு நல்லதொரு இடம் கிடைத்தது.சந்திரஹரி படத்தின் வாயிலாக, கலைவாணரின் அன்பையும், ஆசியையும் பெற்ற காக்கா ராதாகிருஷ்ணன், அவரது அபிமான நடிகர்களில் ஒருவரானார்; கலைவாணரின் படங்களிலும், நாடகங்களிலும் இடம் பெற்றார்.கலைவாணர், கோயமுத்தூரில் தங்கி, படங்களில் நடித்து வந்த போது, ஓய்வு நேரங்களில், சங்கீத கச்சேரிகளுக்கு சென்று வருவது வழக்கம்.ஒருநாள், டி.ஆர்.மகாலிங்கம் என்ற புல்லாங்குழல் மேதையை பற்றி கேள்விப்பட்டு, 'புல்லாங்குழல் கேட்டு வருவோம் வா...' என்று, மதுரத்தை அழைத்தார், என்.எஸ்.கிருஷ்ணன். 'நீங்கள் கேட்டு, அந்த வித்வான், புல்லாங்குழலை கொடுக்காவிட்டால் என்ன செய்வீர்கள்...' என்று, வேடிக்கையாக மதுரம் கேட்க, 'என்னவோ கேட்டுப் பார்ப்போம்...' என்று, உற்சாகமாக சொல்லியவாறு, கச்சேரிக்கு கிளம்பினர்.சங்கீத சபை நிறைந்திருந்தது; மேடையில், பக்க வாத்தியக்காரர்கள் தங்களுடைய இசைக் கருவிகளோடு வீற்றிருந்தனர்; அவர்களுக்கு நடுவே, புல்லாங்குழல் வித்வானை எதிர்பார்த்து, மற்றவர்களை போல் கிருஷ்ணனும், மதுரமும் காத்திருந்தனர்.சில நிமிடங்களுக்கு பின், சிறுவன் ஒருவன், 'விசுக் விசுக்'கென்று நடந்து, மேடை ஏறிச் சென்றான். அவனது கையில், புல்லாங்குழல் இருந்தது. 'புல்லாங்குழல் வித்வானின் உறவுக்காரப் பையன், புல்லாங்குழலை பறித்துக் கொண்டு மேடைக்கு வந்து விட்டான் போலிருக்கிறது...' என்று நினைத்தார் கலைவாணர்.மெல்ல, கலைவாணரின் காதருகே, 'நீங்கள் புல்லாங்குழலைக் கேட்க ஆவலோடு வந்தீர்கள்; ஆனால், உங்களுக்கு முன், இந்தப் பையன், புல்லாங்குழலை வாங்கி விட்டானே, என்ன செய்வீர்கள்...' என்றார் மதுரம்.அதைக் கேட்டு சிரித்த கலைவாணர், மேடையை உற்று நோக்கிய போது, அவருக்கு பெரும் வியப்பு காத்திருந்தது. சற்று முன், மேடையேறிய அந்த சிறுவன், மேடையில் அமர்ந்து, ஆனந்தமாக, புல்லாங்குழலை இசைத்தான்!அந்தச் சிறுவன் தான், டி.ஆர்.மகாலிங்கம் என்று தெரிந்து, இருவரும் வியப்பும், திகைப்பும் கொண்டனர். மகாலிங்கத்தின் மகத்தான கிருஷ்ண கானம், என்.எஸ்.கிருஷ்ணனைச் சொக்க வைத்தது. 'ஆகா, பிரமாதம்...' என்று, அடிக்கடி ஆரவாரித்தார்.சங்கீதக் கச்சேரி முடிவதற்கு முன், அவர் மேடைக்குச் சென்று, பால்ய மேதை டி.ஆர்.மகாலிங்கத்தை, பாராட்டி, அவருக்கு ஐந்து சவரன் தங்க நகையை பரிசளித்தார். அதற்கு பின், பல முறை டி.ஆர்.மகாலிங்கத்தின் இசையை கேட்டுச் சுவைத்தார் கலைவாணர்.அதன்பின், திருமண விழாக்களுக்கும், மகாலிங்கத்தின் கச்சேரியை, சிபாரிசு செய்தார். புல்லாங்குழலிசை மட்டுமல்ல, எல்லா இசைகளும் கலைவாணரை கவர்ந்தன. அவரது பாராட்டுதல்களையும், அவருக்கு பெற்றவர்களில், நாதஸ்வர சக்கரவர்த்தியாக விளங்கிய, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையும் ஒருவர்!ஒருசமயம், ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார், கலைவாணர். அவருக்கு அருகில் இருந்த மதுரம், காரை திருவாவடுதுறைக்கு ஓட்டுமாறு, டிரைவரிடம் தெரிவித்தார். கலைவாணர், டி.என்.ராஜரத்தினம் பிள்ளையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்; அவரது, நாதஸ்வர வாசிப்பைக் கேட்டதில்லை. அதனால், முதல் வாய்ப்பை, ஏற்படுத்திக் கொடுத்தார் மதுரம்.— தொடரும்.நன்றி: வ.உ.சி., நூலகம் பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.