குழந்தை வரம் தரும், ஸ்ரீசந்தான கோபாலன்!
ராமநாதபுரத்திலிருந்து, 20 கி.மீ., துாரத்திலிருக்கும் திருத்தலம், திருப்புல்லாணி. இங்கு, ஸ்ரீஆதிஜெகன்னாதர் கோவில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீபத்மாசினி. இந்த கோவிலின் வெளிமண்டபத்தில், தெற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார், ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணன். எட்டு யானைகள் மற்றும் எட்டு நாகங்களுடன் ஆதிசேஷன் குடைபிடிக்க, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள், ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணனை வழிபட்டு, பெருமாளுக்கு நைவேத்தியம் செய்த பாயசத்தை பிரசாதமாக பெற்று பயபக்தியுடன் அருந்தினால் குழந்தை செல்வம் கிட்டுவதாக கூறப்படுகிறது. இங்கு தான் தசரத மகாராஜா, புத்திர காமேஷ்டி யாகம் செய்தார் என்றும் புராணம் கூறுகிறது. தரிசன நேரம் காலை 7:30 மணி - பகல் 12:00 மணி வரை. மாலை: 5:30 மணி - இரவு 8:30 மணி வரை. வாகன வசதிகள் உள்ளன.