மதராஸ் வானொலி நிலையம்!
மதராஸ் வானொலி நிலையம், ஜூன் 16, 1938ல் துவங்கப்பட்டது. சென்னை, எழும்பூர் மார்ஷல் சாலையில் இருந்த, ஈஸ்ட் நுாக் என்ற கட்டடத்தில் முதலில் துவக்கப்பட்டது.மாலை, 5:30 மணி முதல், இரவு, 10:30 மணி வரை, நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. ஒரு காலத்தில் பிரிட்டானிய காலனித்துவத்தின் வழியாக வானொலி ஒலிபரப்பு, 1920களில் இந்தியாவில் உருப்பெற்றது.மத்திய அரசின் சார்பில், டில்லியில், 'அகில இந்திய வானொலி ஒலிபரப்பு இலாகா' நிறுவப்பட்டது.இதன்படி, முறைப்படுத்தப்பட்ட முதல் வானொலி நிலையம், பம்பாயில் (மும்பை) ஜூலை 23, 1927ல் துவக்கப்பட்டது. அதே ஆண்டு, ஆகஸ்ட் 26ல், கல்கத்தாவில் இரண்டாவது வானொலி நிலையம் நிறுவப்பட்டது. பிறகு டில்லி, பெஷாவர், லாகூர், லக்னோ, மதராஸ், திருச்சிராப்பள்ளி மற்றும் டாக்கா ஆகிய இடங்களில் ஒலிபரப்பு நிலையங்கள் துவக்கப்பட்டன. சென்னையில், சி.வி.கிருஷ்ணசாமி செட்டியார் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து, மே 16, 1924ல், 'மதராஸ் பிரசிடென்சி ரேடியோ கிளப்' என்ற பெயரில் வானொலி நிலையம் ஒன்றை துவக்கினர். எழும்பூர், ஹாலோவேஸ் கார்டன் என்ற இடத்திலிருந்து, இந்த வானொலி ஒலிபரப்பு நடத்தப்பட்டது. 8 கி.மீ., சுற்றளவில் இந்த ஒலிபரப்பின் மூலமாக வானொலி நிகழ்ச்சிகளை மக்கள் கேட்டனர். இது, 1927ம் ஆண்டு வரை தொடர்ந்தது. பிறகு, சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதற்காக, மெரினா கடற்கரை, ராபின்சன் பூங்கா, பீப்பிள்ஸ் பார்க் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகிய பகுதிகளில், ஆறு ஒலி பெருக்கி கருவிகள் பொருத்தப்பட்டன. தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டு, பேசியவர், கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி.—ராஜி ராதா