காதல் மராத்தான்!
''எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்கு...'' என்று, அமலா அருகில் வந்து சொன்னபோது, வாசித்துக் கொண்டிருந்த, கலீல் ஜிப்ரானை மடக்கி வைத்து, நன்றாக நிமிர்ந்து அமர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்தாள், நித்யா.''சோ வாட்?''''நான் அவன்கிட்ட, 'ப்ரபோஸ்' பண்ணப் போறேன்...'' தோள்களைக் குலுக்கி, அலட்சியமாய் சொன்னாள். காஜல் பூசிய கண்களில், அலட்சியம் தெரிந்தது. 'பவுண்டேஷன்' வகையறாக்கள், அவள் இளமையை, இன்னும் மெருகாக காட்டியது.''நல்லா யோசிச்சியா?''''இதுல யோசிக்க எதுவுமில்லை... ஒருத்தரை பிடிக்கலைன்னு சொல்லத்தான் காரணம் தேடணும். பிடிச்சிருக்குன்னா, பிடிச்சிருக்கு அவ்வளவு தான்...'' என்ற, அமலாவின் வாயில், 'சிக்லெட்' உருண்டது.''இதுக்கு முன், வினய்கிட்டயும் இதைச் சொல்லித்தான், 'ப்ரபோஸ்' பண்ண... அதுக்கு முன்ன அஜய்... ஆனால், எல்லாம், 'ப்ரேக் - அப்' ஆச்சு. அது, எதனாலன்னு நீ யோசிச்சியா?''''யோசிக்க எதுவுமில்லை... 'வேவ் லைன்' சரியாயில்ல... இதுவும் நல்லது தான். நமக்கு, இதைவிட நல்லவரா, 'பார்ட்னர்' கிடைப்பார். அதுக்காக, மத்ததெல்லாம் தள்ளிப் போச்சுன்னு நினைச்சுக்க வேண்டியது தான். பாசிடிவ்...'' அமலாவின் வார்த்தைகள், அதில் இருந்த அலட்சியம், நித்யாவை என்னவோ செய்தது.'பாசிடிவ்' என்ற வார்த்தைகளுக்கான பொருள், அடிக்கடி ஆள் மாறாட்டமா... அதுவும் விளங்கவில்லை. ஆனாலும், இதற்குமேல், அவளிடம் கேள்வியும் கேட்க முடியாது; அறிவுரையும் சொல்ல முடியாது.இருவரும், மகளிர் விடுதியில், 'ரூம்மெட்!' நித்யா, எம்.பில்., மாணவி.அமலா, இளங்கலை இரண்டாம் ஆண்டு. துாத்துக்குடியில், உப்பள அதிபரின் மகள். அதனால், பணத்துக்கும், பகட்டுக்கும் குறைவே இல்லை. அவளின் அகங்காரத் திமிர் அதில் தெரியும். நாட்கள் மெல்ல கரைந்து உருகிக் கொண்டிருந்தது.அமலாவிற்கு, தன் காதல் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள, நித்தமும் தேவைப்பட்டாள், நித்யா. புத்தகத்தை மார்பில் போட்டபடி, அவள் சொல்லும் அத்தனை செய்திகளையும் இமைக்காமல் கேட்டுக் கொண்டிருப்பாள்.''நித்யாக்கா... இப்படி ஆர்வம் இல்லாம கேட்டா எப்படி?'' தன் சின்ன கண்கள் அங்குமிங்கும் அலைபாய, அவள் சொன்னபோது, நித்யாவிற்கு சிரிப்பு வந்தது.''உன் கதையில எனக்கென்னடி ஆர்வம்... இந்த முறையாவது உனக்கு எல்லாம் சரியா வந்தா சந்தோஷம் தான்...'' அவளைக் கட்டி, கன்னத்தில் முத்தம் பதித்தாள்.''அது சரி... உன் சாமியார், 'லவ்' என்னாச்சு...'' துணிகளை அலமாரியில் மடித்து வைத்தபடியே, அவளிடம் வம்பிழுத்தாள், அமலா.''அதுதான் சாமியார், 'லவ்'ன்னு சொல்லிட்டியே... அப்புறம் என்ன... சாம்பிராணி, ஊதுவத்தி மணத்தோட அதுபாட்டுக்கு இருக்கு. பிரதீப், சி.ஏ., முடிக்கணும். அப்புறம் தான் கல்யாணத்தைப் பத்தி யோசிக்க முடியும்,'' என்றாள்.''எத்தனை ஆண்டுகளா, 'லவ்' பண்றீங்க?''''ஆறு ஆண்டு முடிஞ்சிருச்சு,'' சொல்லும்போது, ஒரு பெருமிதம் கண்களில் மிதந்தது. ''வாவ்... இத்தனை நாளும், ஒரு, 'கான்ட்ரவர்சி'யும் உங்களுக்குள்ள வரலியா?'' என்றவாறு, அவளது கன்னத்தில், ஒரு அடி அடித்தாள்.''என்ன, உன் காதல் கதைகளை உட்கார்ந்து கேட்டதுக்கு, எனக்கு இது தான் தண்டனையா பக்கி?'' ''அச்சோ, நித்யாக்கா... நான் அப்படிச் சொல்லல... எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு, அதுதான் கேட்டேன். ஏன்னா, என்னால யார் கூடவும், 'கான்ட்ரவர்சி' இல்லாம நீண்ட 'ரிலேஷன்ஷிப்'பை ஏற்படுத்திக்க முடியாது... யூ ஆர் கிரேட்...'' கைகளை பற்றி குலுக்கினாள்.'அன்பின் பரிபாஷைகளை, ஆதிக்கம் என்ற முலாம் பூசும் அமலா போன்றவர்களுக்கு, இதெல்லாம் புரிய நியாயமில்லை...' என, நினைத்துக் கொண்டாள், நித்யா.ஒருநாள், நித்யாவை அழைத்துப் போய், சுதீஷுக்கு அறிமுகம் செய்து வைத்தாள், அமலா. கொஞ்சம் 'வெடவெட'வென, அவளுக்கு துளி கூட பொருத்தம் இல்லாமல் இருந்தான். இவனை எப்படி தேர்வு செய்தாள் என்ற கேள்வி மனசுக்குள் படிந்தது.நித்தம் ஒரு சந்தோஷமும், சண்டையுமாய், அவர்களின் காதல் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். 'செமஸ்டர்' தேர்வுக்கு முதல் நாள், கொஞ்சம் சோர்வாக முன்னே வந்து நின்றாள்.வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து, அவள் முகத்தை பார்க்க, சட்டென்று இரு கைகளாலும் முகத்தை மூடி, அழத் துவங்கினாள். வேகமாய் எழுந்து வந்து, அவள் கைகளைப் பிரித்து விட்டாள், நித்யா.''என்னாச்சு அமலா... எதுக்கு அழற... உனக்கும், சுதீஷுக்கும் எதுவும் பிரச்னையா?'' என கேட்க, இல்லையென்று வேகமாய் தலை ஆட்டினாள்.''பின்னே என்ன... மறுபடியும், 'ப்ரேக் - அப்'பா?'' சலிப்பாய்க் கேட்க, இன்னும் வேகமாய் மறுத்து, தலை அசைத்தாள்.''அதெல்லாம் இல்ல நித்யாக்கா... தப்பு நடந்து போச்சு. என்ன தான் அவன் வற்புறுத்தி இருந்தாலும், நான், ஈ.சி.ஆர்.,க்கு போயிருக்க கூடாது. அங்கே...'' என்றவள், விசும்பி விசும்பி அழ, நித்யாவிற்கு எல்லாம் புரிந்தது. மெல்ல கண்களை மூடிக்கொண்டாள். வேறென்ன சொல்வது என்று தெரியவில்லை.''நடக்கறதுக்கு முன்னாடித்தான், தடுக்கிறதை யோசிக்க முடியும். நடந்த பின், அடுத்து என்னங்கிறது மட்டும் தான் புத்திசாலித்தனம். 'செமஸ்டர்' விடுமுறைக்கு ஊருக்கு போறதானே...''அங்கே உன் பெற்றோரிடம், சுதீஷ் பத்தி பேசு... எப்பவும் நீ சொல்றத தான், இப்ப நான் சொல்றேன்... பீ பாசிடிவ்...'' சொன்ன நித்யாவை, கண்ணீர் மல்க கட்டிக் கொண்டாள், அமலா.அடுத்து வந்த நாட்களில், இருவரும் அதிகமாய் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போனது. 'அசைன்மென்டு'க்காக அலைந்து திரிந்து, 'செமினாரு'க்கு தயார் செய்து, தன் தேர்வுகளை முடித்து, விடுதியை காலி செய்து, கிளம்பி விட்டாள், நித்யா.ஊருக்குத் திரும்பி, அருகில் உள்ள கல்லுாரியில் தற்காலிகமாய் பணிக்குச் செல்ல, அவளுடைய வாழ்க்கை திசைமாறியது. அவ்வப்போது அமலாவின் நினைவு வரும். அலைபேசியில் அழைத்து, விசாரிப்பாள். நாளாக ஆக, அதுவும் இல்லாமல் போனது.பிரதீப், சி.ஏ., பாஸ் செய்ய, வெகு முனைப்பாக இருந்தான். அதனால், இருவரும் அலைபேசியில் பேசிக்கொள்வதும் கூட, முற்றிலும் குறைந்து போனது. கால ஓட்டத்தில், இரண்டு ஆண்டுகள் காணாமல் போய் இருந்தது. 'நெட்' தேர்வு எழுதுவதற்காக சென்னைக்கு வந்திருந்தாள், நித்யா. பிரதீப்பை பார்த்து, அளவளாவி விட்டு, விடுதிக்கு வந்தாள். இவளோடு இருந்தவர்கள் யாருமே அங்கு இல்லை. அமலாவை அலைபேசியில் அழைத்தபோது, குரல் பூரித்தது. ''எங்கே இருக்கே நித்யாக்கா... நான் சென்னையில தான் இருக்கேன். எங்கேன்னு சொல்லு, கார் அனுப்பறேன். எனக்கு, கல்யாணம் ஆயிடுச்சு,'' என்றாள்.மாப்பிள்ளை யார் என்று, நித்யா கேட்கவில்லை. இருக்கிற இடத்தைச் சொல்ல, அரைமணியில் கார் வந்தது. நீலாங்கரையில் பங்களா. அமலா அப்பாவின் சொகுசை, அழகாய் காட்டியது செதுக்கப்பட்ட கட்டடம்.உள்ளே நுழைந்ததும், அமலாவும், அவள் கணவனும் நிற்கும் புகைப்படம் முகப்பை அலங்கரித்திருந்தது. அது, சுதீஷ் இல்லை. நித்யாவின் பார்வை பயணமான இடத்தை வைத்து யூகித்து இருந்தாள், அமலா.''உங்க பார்வை புரியுது நித்யாக்கா... எனக்கும், சுதீஷுக்கும் எந்த பிரச்னையும் இல்லை தான். ஆனால், அப்பாவுக்கு அவனைப் பிடிக்கல.''எத்தனை போராடியும் எனக்கு வேற இடத்துல கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு... இது, அவரோட நண்பர் பையன். 'ஷிப்பிங்'கில் இருக்காரு... ஒரு ஆண்டாகுது...''தலை ஆட்டிக்கொண்டாள். பேச்சு வேறு தளங்களில் பயணமாகி, நேரத்தை விழுங்கிக்கொள்ள, 'ஜூஸ்' சாப்பிட்டு கிளம்பி விட்டாள். வழியனுப்ப, வாசல் வரை வந்தாள். ''உங்க கல்யாணம் எப்போ அக்கா... என்னை கண்டிப்பா கூப்பிடுவீங்கள்ல?'' ''பிரதீப்புக்கு கொஞ்சம் வேலை இருக்கு, அமலா. முடிஞ்சதும், கல்யாணம் தான்... கண்டிப்பா, 'இன்விடேஷன்' அனுப்பி வைக்கிறேன்,'' என்றாள், முகத்தில் புன்முறுவல் பூக்க.''சென்னையை விட்டுப்போய் இரண்டு ஆண்டுகள் ஆகுது. இன்னும் பிரதீப் கூட, 'கான்டாக்ட்' இருக்காக்கா...'' என, கண்களில் ஆச்சர்யம் விரிய கேட்டாள்; அவளை புழுவைப்போல் பார்த்தாள், நித்யா.''அமலா... எல்லாருக்கும் காதல் புனிதமா தெரியறது இல்ல. உன்னை மாதிரி பலருக்கு, இப்பெல்லாம் காதல்ங்கிறது, கல்யாணத்துக்கு முன்ன ஒரு பொழுதுபோக்கு. வாலிபத்துக்கும், வாழ்க்கைக்கும் நடுவில நடக்கிற மாரத்தன் மாதிரி. பெருசா நம்பிக்கை இல்லை...''இது மாதிரியான எண்ணமுள்ள சில பேரால தான், தன்னுடைய புனிதத்தை இழந்திருச்சு, காதல்... அதுவும் கல்யாணத்துக்கு முன், அத்துமீறுகிற பெருவாரியான காதல்கள், கல்யாணத்துல முடியறதே இல்ல... அதுக்கு காரணம், தங்கள் துணை மீதான நம்பிக்கை முழுசாய் முடிஞ்சு போயிடுது... ''இதில்லாட்டி அதுங்கிற, 'வேவெரிங் மென்டாலிட்டி' இருக்கிறவங்களால, எந்த இடத்திலயும் நிம்மதியா இருக்க முடியாது. தவிர, அந்த அளப்பரிய சுதந்திரம், ஒரு கட்டத்துக்கு மேல ஆபத்தா போயிடுது... ''எனக்கெல்லாம் காதல் அப்படியில்லை... கல்யாணத்துக்கும், வாலிபத்துக்கும் இடையேயான இடைப்பட்ட சந்தோஷமில்லை, காதல்... கல்யாணத்துக்கான அச்சாரமே காதல்ன்னு, நான் நம்பறேன்.''அதனால, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழிச்சு நீ, என்னைப் பார்த்தாலும், எனக்கு பிரதீப் மட்டும் தான்... ஒண்ணு, காதலரா இருப்பாரு; இல்லாட்டி கணவரா நிற்பாரு.'' அமலாவிற்கு செருப்பில் அடித்தது போல் இருந்தது. கண்கள் லேசாய் பனிக்க, அமைதியாய் நின்றாள்.அவள் கைகளைப் பற்றிய நித்யா, ''உன்னைக் காயப்படுத்த எதையும் சொல்லல, அமலா... ஆனால், உன்னை மாதிரி காதல் கூட விளையாடுற பெண்களால தான், அவங்க கூட விளையாடிட்டு போயிடுது, காதல்... எதுலயும் சரியாவும், தெளிவாகவும் இருக்கணும்...''இருக்கிறப்போ மதிப்பு தெரியாததால தான், இழந்தப்பவும் உனக்கு பெருசா பாதிக்கல... அது கற்பா இருந்தாலும் சரி, காதலா இருந்தாலும் சரி... நான் சொல்றது புரியும்ன்னு நம்பறேன்... கல்யாண பந்தத்திலாவது அதுக்கு உண்டான மரியாதையைக் கொடு,'' தோளில் தட்டி, இறங்கி நடந்தாள். தலைகுனிந்து நின்றாள், அமலா.முதன் முறையாய் தான் கடந்து வந்த வாழ்க்கை மீது படிந்திருந்த அழுக்கு, அவள் நாசிக்கு எட்டி, முகமும், அகமும் சுளிக்க வைத்தது.எஸ். பர்வின்