அம்மாவின் விருப்பம்!
கிட்டத்தட்ட ஆயிரத்தைத் தொடுகிற, எண்ணிக்கையில் குவிந்து கிடந்த காசோலைகளைப் பார்த்தபோது, பெருமூச்சு வந்தது சாரங்கனுக்கு. 'எப்படி இத்தனையையும் சரியாக கையாண்டு, ரிடர்ன்ஸ் போடப் போகிறோம், பெரும்பான்மை ஹை வால்யூக்களாக இருக்கிறதே. சின்ன அஜாக்கிரதையும், மிகப் பெரிய நஷ்டத்தில் கொண்டு போய் விடுமே!'மனதில் உறுதியை ஏற்படுத்திக் கொண்ட சாரங்கன், 'முடியும், சரியாகச் செய்ய முடியும்' என்று, தனக்குத் தானே சொல்லிக் கொண்டபோது மொபைல் அழைத்தது.''சொல்லு மைதிலி... என்ன ஏதாவது முக்கியமான விஷயமா?''''ஏங்க, அம்மா இப்படி இருக்காங்க...'' என்பதற்குள், அவள் அழுது விட்டாள்.''சண்டையா அம்மாவோட... அடக் கடவுளே... சொல்லு, என்ன பிராப்ளம்?'''''டிவி'ல இன்னும் எல்லா சேனலும் வரலே... ராமாயணம் பாக்கும்போது, இன்வர்ட்டர் ஆப் ஆய்டறதுன்னு, ஒரே கம்ப்ளெய்ன்ட் அம்மாகிட்ட இருந்து. நானும் கேபிள், 'டிவி' ஆள்கிட்ட நாலு தடவை சொல்லியாச்சு, 'வரேன் வரேன்'னு இழுத்துக்கிட்டே போறான். அம்மாவுக்கு ஒரே கோபம், என்னை ஆபீசுக்கே கிளம்ப விடலே...நான் என்னங்க செய்வேன்?''''சரி சரி... எல்லாத்துக்கும் ஒப்பாரியா... நான் பேசறேன் அவங்ககிட்ட. இங்க எவ்வளவு வேலை தெரியுமா... இப்படி வீட்டு பிரச்னை எல்லாம், ஆபீஸ் நேரத்துல பேசிக்கிட்டிருந்தா சரியா வருமா... 'கட்' செய்றேன்.''''ஒரு நிமிடம்.''''சொல்லு.''''நித்யா பேசினா...''''என்னவாம்...''''பத்தாம் தேதி, அம்மாவை அங்க கொண்டு விடணும். இல்லையா...''''அதுக்கென்ன மைதிலி இப்போ?''''பயமா இருக்காம். எதை எடுத்தாலும், குத்தம் கண்டுபிடிக்கிற அம்மாவை நினைச்சாலே கதிகலங்கறதாம். 'நீங்க எப்படி சமாளிச்சீங்க'ன்னு கேட்டா...''''ஓகோ...ரெண்டு பேரும் சேர்ந்து, மாமியாரை வாழை இலை மாதிரி கிழி கிழின்னு கிழிச்சீங்களோ?''''அய்யோ...அப்படி எதுவும் இல்ல, நல்ல பேர் வாங்கலேன்னாலும், கெட்ட பேர் வாங்காம இருக்கணும்ன்னு பதட்டம் ரெண்டு பேருக்கும்... சரி சாயங்காலம் பார்க்கலாம் குட் டே.''வேலை இழுத்துக் கொண்டே இருந்தாலும், மறுபக்கம், மனது அம்மாவை நினைத்து குழம்பிக் கொண்டே இருந்தது. முந்தாநாள், அவளுக்கு பிடிக்கும் என்று தான், பக்கோடா வாங்கிக் கொண்டு போனான். வாயில் வைத்த அடுத்த நிமிடம், 'அழுகின வெங்காயமா போட்டு, செய்துருக்காண்டா; டேஸ்ட் பாத்துட்டு, வாங்கிட்டு வர மாட்டியா...' என்றாள். வாழைப்பூ உசிலி அம்மாவுக்குப் பிடிக்கும் என்று, இடுப்பொடிய பூவை ஆய்ந்து, பார்த்துப் பார்த்து சமைத்தாள் மைதிலி. 'இப்படியா உப்பை அள்ளிக் கொட்டுறது மைதிலி...வாய்ல வைக்க முடியல...' என்று முகம் சுளித்தாள். சுசிக்குட்டி வரைந்த மயில் படத்தைப் பார்த்து, 'லோக்கல் பேப்பர்ல, உன் வயசு சுட்டி ஒண்ணு, தஞ்சாவூர் கோவில் கோபுரம் வரைஞ்சிருந்தது. அப்படி பெரிசா டிரை செய்...' என்று குழந்தையின் ஆர்வத்தை நசுக்கியே விட்டாள் அம்மா.ஆனந்தும், நித்யாவும் பத்து நிமிட பயண தூரத்தில் வசிக்கின்றனர். அப்பா போன, இந்த ஒன்றரை வருடத்தை, இங்கே, அங்கே என்று தன் விருப்பப்படி கழித்தாள் அம்மா.அப்பாவின் இறப்பிற்கு பின், அம்மாவின் சுபாவங்களில் ஏதேதோ மாற்றங்கள் வந்திருப்பதாக, அவனுக்குத் தோன்றியது. இப்படி இருப்பவளே அல்ல அவள். அவனும், ஆனந்தும் நாலாவதும் - ஐந்தாவதும் படித்துக் கொண்டிருந்தபோது, வீடு இந்திரலோகமாக இருந்தது. நல்ல சிவந்த முகத்தில், மெல்லிய திலகம் இட்டு, சிறிய உடலை தழுவுகிற வெங்கடகிரி காட்டன் புடவை கட்டிக் கொண்டு, மலர்ந்த முகத்துடன் அம்மா வளைய வருகிற வீடு, நந்தவனம் போல இருக்கும். தினம், புதுசு புதுசா தின்பண்டம் செய்வாள். பொட்டுக்கடலை மாவு, முறுக்கு, அவல் கேசரியில் பைனாப்பிள், வெற்றிலை மறையும் தோசை என்று தானே காம்பினேஷன்களை மாற்றி மாற்றி, ஓட்டல் உணவு போல சுவையை கொண்டு வருவாள். ராத்திரிகளில், ஆளுக்கு ஒருவராக அம்மாவின் மடியில் படுத்துக் கொள்வர். 'அயோத்தியில் ராஜகுமாரர்கள் நான்கு பேரும் நான்கு தொட்டில்களில் படுத்திருக்க, அம்மாமார்கள் தொட்டில்களை ஆட்டினார்களாம், குழந்தைகள் தூங்கவேயில்லையாம், விசுவாமித்திரர் சொன்னாராம், 'சகோதரர்களைப் பிரித்தால் எப்படி தூங்குவர்? ராமன், லட்சுமணனுக்கு ஒன்று, பரதன், சத்ருக்கனனுக்கு ஒன்று என்று மாற்றுங்கள். பிறகு பாருங்கள்' என்றாராம். அதேபோல செய்ததில், அடுத்த நிமிடமே சிசுக்கள் ஆனந்தமாக தூங்கினராம்...' என்று அவள் சொல்லும் கதைகள் அவ்வளவு அழகாக, அர்த்தமுள்ளதாக இருக்கும்.அப்பா ஏதாவது சொல்லி கத்தினால், சிரித்துக் கொண்டே போய் விடுவாள். ஆனால், அடுத்த நாளே அப்பா, பூனைக்குட்டி போல அம்மாவிடம் கொஞ்சிக் கொண்டிருப்பார். 'படி, படி' என்று டார்ச்சர் கிடையாது. 'விளையாடி, சட்டையை அழுக்காக்காதே...' என்று திட்டுவது கிடையாது; சினிமா ஓவராக பார்க்காதே என்று, அட்வைஸ் கிடையாது. ஆனால், சொல்லியும் சொல்லாமலுமே, தன் மகன்களை மாணிக்கங்களாக்க மாற்றியது, அவளின் மாபெரும் சாதனை.இப்போது, அந்த அம்மா இல்லை. அவள், ஒரு நடமாடும் புகார் பெட்டியாக மாறிப் போனாள். எதிலும் அதிருப்தியையே கண்டாள். உலகம் தன்னை உதாசீனப்படுத்துவதாக, வீடு தன்னை வேண்டா விருந்தாளியாக பார்ப்பதாக நம்பத் தொடங்கினாள்.சாரங்கனுக்கு நீண்ட பெருமூச்சு வந்தது.வாசலிலேயே காத்திருந்தாள் அம்மா.''ஏம்மா இங்க நிக்கற? உள்ள வாம்மா,'' என்று புன்னகையை வரவழைத்துக் கொண்டான் அவன்.அழுத்தமான குரலில், ''அது சரி உள்ள போனா, உன்கிட்ட தனியா பேசவா முடியும்... உன் பொண்டாட்டியும், வாரிசுகளும், ஒரு நிமிடம் உன்னை சும்மா விடாதே! சரி, விஷயத்தை சொல்றேன்... 30 ஆயிரத்திற்கு, 'செக்' எழுதி வெச்சிருக்கேன். நாளைக்கு பணத்தை, 'டிரா' செய்து, முக்தி டிராவல்ஸ்காரன் கிட்ட கட்டிடு,'' என்றாள் அம்மா.''முப்பதாயிரத்துக்கு டூரா!''''ஆமாம்...சீனியர் சிடிசன்ஸ் ஸ்பெஷல். காசி, கயா, பத்ரி, பிரயாகைன்னு பத்து நாள் டூர். ரெண்டு நாள்ல கிளம்பறேன்.''''என்னம்மா இது திடீர்ன்னு! பி.பி., இருக்கு உனக்கு; வெளி சாப்பாடு வேற ஒத்துக்காது! வட இந்தியா டூர் எல்லாம் தாங்குமாம்மா?''''மனசு நிம்மதிதாண்டா எல்லாத்தையும் விட முக்கியம். உங்க ரெண்டு வீடுமே, எனக்கு அன்னியமா இருக்கு. பத்து நாள் அக்கடான்னு இருந்துட்டு வர்றேன் விடு,'' என்று பட்டென்று பேசிவிட்டு, தோளைத் திருப்பிக் கொண்டு செல்பவளை, அவன் வெறுமையாகப் பார்த்தான்.கதவுக்கு அப்பால் நின்று கொண்டிருந்த, மைதிலியின் விழிகளில் தெரிந்த ஈரம், அதன் வலியைப் புரிய வைத்தது.பெற்ற மகளை விட, பரிவுடனும், பாசத்துடனும் தான் அம்மாவை கவனித்துக் கொள்கிறாள் மைதிலி. அம்மாவின் உடல் மட்டுமல்ல, மனதும் நோகக்கூடாது என்று, அவள் எடுத்துக் கொள்கிற சிரத்தைகளில் உண்மை இருக்கும். ஆனாலும், மைதிலியை குத்திக் குத்திப் பார்க்கிறாள் அம்மா. ஏன் நித்யாவையும் தான். இது எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும் எதையும் பெரிதுபடுத்தாத பெருந்தன்மை எல்லாரிடமும் இருந்தது. அதை அம்மா உணராதது தான், வேதனையாக இருந்தது.அலுவலகம் மிகப் பரபரப்பாக இருக்கிற, மாதத்தின் முதல் சனிக்கிழமை.ஒரு மணிக்குத் தான் தண்ணீர் குடிக்கவே எழுந்து வர முடிந்தது.''அம்மா வந்தாங்களே சாரங்கா...ரெண்டு லட்ச ரூபாய் வித்டிரா செய்துட்டு போனாங்களே,'' என்று கேட்டார் பாபு.''என்ன!'' என்றான் அவன் திகைப்புடன். ''இன்னிக்குதான், அவங்க யாத்ரா முடிந்து திரும்பி வந்திருக்காங்க...எப்படி உடனே பாங்குக்கு வந்தாங்க... அதுவும் என்னைப் பாக்காமலே போய்ட்டாங்களே!''''நீ ரொம்ப பிசியா இருந்ததால, உடனே கிளம்பிட்டாங்க போல,'' என்றார் அவர் சமாதானமாக.அவனுக்கு ஏனோ கலக்கமாகவே இருந்தது.ஆனந்த், நித்யா, மைதிலி மூவருடனும் அம்மா சிரித்த முகத்துடன், பேசிக் கொண்டிருக்க, அவன் வேகமாக உள்ளே நுழைந்தான்.''வாப்பா சாரங்கா...சாரிப்பா...மத்தியானம் உன் பாங்குக்கு வந்திருந்தேன், பணம், 'டிரா' செய்தேன், உன்னைச் சுத்தி பத்து பேர் செக்கை நீட்டிகிட்டிருந்ததைப் பாத்தேன். பாவம் வேலை நேரத்துல, தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு வந்துட்டேன். ஒரு நிமிடம் உட்காரேன்,'' என்று குரலில் அன்பு ததும்ப பேசியது அம்மாவா என்று வியப்பாக இருந்தது.அம்மாவின் முகம்தான் மலர்ந்திருந்ததே தவிர, மற்றவர்கள் இறுக்கமாக இருந்தனர். அதிலும், மைதிலி அவனை ஓரக்கண்ணால் கூட பார்க்காமல் தரையையே வெறித்துக் கொண்டிருந்தாள். அவள் இமைகளின் அசாதாரணமான படபடப்பு எதையோ சொல்ல தவித்தது.சட்டென்று அண்ணனின் பக்கம் திரும்பினான் ஆனந்த்.''அம்மா புது முடிவு எடுத்திருக்காங்க, முதியோர் இல்லத்துக்குப் போறாங்களாம். அதுக்குதான், பணம், 'டிரா' செய்தது... என்ன ஏதுன்னு நீயே கேளுண்ணா.''''நம்ம மேல ஏதாவது வருத்தம்ன்னா வெளிப்படையா சொல்லலாமே...அந்த உரிமை அம்மாக்கு இல்லாம, வேற யாருக்கு இருக்கு! இப்படி தடாலடியா, ஒரு முடிவு எடுக்கணுமா, அம்மா... எனக்கு படபடன்னு வருது,'' என்று கரகரத்தாள் நித்யா.மைதிலியின் குரல், அழுகைக்கு நடுவில் பிசிறாக ஒலித்தது...''அம்மா இல்லாத வீட்டை, என்னால கற்பனை கூட செஞ்சு பாக்க முடியலே, நானும் அம்மாவோடயே போயிடறேன்... என்னால தாங்க முடியலே.''அம்மா புன்னகையுடன், அவனைப் பார்த்து, ''ம்... நீயும் சொல்லேன், உன் பங்குக்கு.''''என்னம்மா நாடகம் இதெல்லாம்... என்ன குறை, உனக்கு எங்க கிட்ட. நீ சுதந்திரமாகத்தானே இருக்கே... பணம், பேச்சு, சாப்பாடு, 'டிவி', சினிமா அது இதுன்னு ஏதாவது கட்டுப்பாடு இருக்கா சொல்லு... உன்னை அனுசரிச்சுதான் எங்க டைம் டேபிளையே மாத்திக்கிறோம்... இது உனக்கும் தெரியும்மா, அப்பிடியும், ஏன் இந்த விபரீத முடிவு.''''உண்மைதான்...நீங்க எல்லாரும் தங்கம்தான், நட்சத்திரங்கள்தான். இந்த அறிவு இப்பதாம்பா எனக்கு வந்துள்ளது. யாத்ராவுக்கு போய்ட்டு வந்த பின்னாடிதான் வந்தது. அந்த அறிவு சொன்னபடி யோசிச்சுதான், இந்த முடிவையே எடுத்திருக்கேன்.''அம்மா பொறுமையாகப் பேசினாள். அவள் முகம், ஒரு புதிய ஒளியை சுமந்தபடி முதிர்ந்த கனியைப் போல இருந்தது. வார்த்தைகளை, அவள் அப்படி அன்பு ததும்ப பேசினாள். கண்களின் கனிவு, இதுவரை பார்த்தறியாத புதிய பரிமாணத்தில் ஒளிர்ந்தது.''என் கூட வந்தவர்கள்ல, முக்கால்வாசிப் பேர், முதியவர்கள் இல்லத்துல வசிக்கிறவர்கள். என்ன, முதியோர் இல்லமா, அப்படின்னு முதல்ல நான் முகத்தை சுளித்தேன். போகப் போக என் மனசு மெல்ல மெல்ல மாறிப் போச்சுப்பா...எப்படின்னு சொல்றேன்...''மற்றவர்களுக்கு எப்படியோ... எனக்கு முதுமை வந்துட்டதே தவிர, முதிர்ச்சி வந்ததா, இல்லயான்னு தெரியவில்லை. இந்தக் கேள்வியை, பலமுறை எனக்கு நானே கேட்டுக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய வந்தது. வயதாவது வேறு, வளர்ச்சியுறுவது வேறு. எனக்கு வயசாச்சே தவிர, முதிர்ச்சி வரலே...வயதாக வயதாக கேட்கும் திறன் குறைஞ்சு போச்சு. அதனால, 'டிவி'யை பெரிசா வெச்சுக்கறேன்.''குழந்தைக்கு பரிட்சைன்னு மருமகள் நியாயமா சொன்னாலும், என்னை அவ அவமானப்படுத்தினதா கோபப்படறேன். கூச்சல், அழுகை, வன்மம், பழி என்று, அரக்கத்தனமான சீரியல்களால வீட்டையே கெட்ட சக்தியால் மூடறேன். காப்பிக்கு சர்க்கரை கம்மி, ரசத்துக்கு மிளகு குறைச்சல், கோலத்துல புள்ளி தப்பு, இப்படி எவ்வளவு குத்தம் கண்டு பிடிச்சிருக்கேன். ராமாயணம், பாரதம்ன்னு படிச்சேனே தவிர, அதுல இருந்து வாழ்க்கைக்கு, என்ன தத்துவத்தை கற்றுக் கொண்டேன்! ராமனுக்கு பட்டம் கட்டி விட்டு, வனம் புகப் போகிறேன் என்று, தசரதன் சொன்ன வானப்ரஸ்தம் பற்றி மறந்து போனேனே...குந்தியும், காந்தாரியும், திருதராஷ்டிரனும் வனம் சென்று தான், தங்கள் எஞ்சிய காலத்தைக் கழித்தனர் என்பதையும் மறந்தேன்.''வயதாக வயதாக மெல்ல மெல்ல துறவு நிலை நோக்கி, நாம் நகர வேண்டும் என்று தோன்றத் துவங்கியது. இப்போது கானகம் இல்லை. ஆனால், அற்புதமான பராமரிப்பு இல்லங்கள் வந்துவிட்டன. உணவு, மருத்துவம் மிக முக்கியமாக, சக வயதுக்காரர்களின் அருகாமை, அவர்களோட நாமும் பேசி, பழைய நினைவுகளை பகிர்ந்துக்கறதுன்னு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்குப்பா. அசட்டுப் பாசங்களை விட்டுட்டு, மெல்ல மெல்ல முக்தி நிலைக்கு நகரணும்ப்பா. இந்த யாத்ரா எனக்கு சொல்லாம சொல்லிக் கொடுத்தது இதுதான்.''இத்தனை நாள் எப்படி இருந்தேன்னு நினைத்தாலே, கேவலமா இருக்குப்பா... தீராத பகைமையுணர்வு, உணவின் மேல் அதீத பற்று, அர்த்தமற்ற பொறாமை. சேச்சே...இப்பவாவது புத்தி வந்ததே! அதுக்காக என் தங்கங்களான, உங்களையெல்லாம் விட்டுட மாட்டேன். எப்பெல்லாம் மனசு ஏங்குகிறதோ, அப்பல்லாம் ஓடி வந்து எல்லாரையும் கண்குளிர பாத்துட்டுதான் போவேன், சரியா... என் முடிவு சரிதானே...'' என்று புன்னகைத்த அம்மாவை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர். ***வானதி