இது உங்கள் இடம்!
பிறர் வளர்ச்சிக்கு துணை நிற்கலாமே!பக்கத்து ஊரிலிருந்து ஒருவர், தினமும், சைக்கிளில் காய்கறி, கீரை மற்றும் பழங்களை கொண்டு வந்து, எங்கள் பகுதியில் விற்பனை செய்வார். நேரடியாக விற்பதாலும், நியாயமான விலையில் கிடைப்பதாலும், அவரிடம் பேரம் பேசாமல் வாங்குவோம்.அவரது சைக்கிளில், மட்காடு ஒரு நைலான் கயிறால் கட்டப்பட்டிருக்கும்; பெடல் தொங்கிய நிலையில், ஸ்டாண்டு ஒரு கம்பியால் இழுத்து மாட்டப்பட்டிருக்கும். நாங்கள் பார்த்த வரையில் அவர் சைக்கிளை உருட்டியபடி தான் வருவார். அதில், பின்னால் ஒரு பெரிய கூடை, முன்னால் இரு பெரிய பைகள் தொங்கும். எந்நேரத்திலும் அந்த மிதிவண்டி நொறுங்கி விழுமோ என்றிருக்கும்.ஒருநாள், புத்தம் புது சைக்கிளில் வியாபாரத்திற்கு வந்திருந்தார். இதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில், 'என்னண்ணே... சைக்கிள்லாம் புதுசா இருக்கு; வியாபாரம் ஓகோன்னு இருக்கா?' என, விளையாட்டாக கேட்டேன். அதற்கு அவர், 'அடுத்த தெருவுல இருக்கிற வாத்தியாரு, ஒருநாள் என்னை கூப்பிட்டு விசாரிச்சாரு. மறுநாள், புது சைக்கிளை வாங்கிட்டு வந்து, 'இதை வச்சு வியாபாரம் செய்; இது ஒண்ணும் இலவசமில்ல; தினமும், அம்மாகிட்ட, 50 ரூபாய்க்கு காய்கறிகளை தந்து வரவு வச்சுக்க; ரெண்டு மாசத்துல சைக்கிள் உனக்கே சொந்தமாயிடும்'ன்னு சொல்லிக் கொடுத்தாரு.'இப்ப இந்த சைக்கிள் இருக்கிறதனாலே கூடுதலா இன்னும் ரெண்டு இடத்துக்கு போய் வியாபாரம் செய்றேன்...' என்றார் மகிழ்ச்சியுடன்!ஓய்வு பெற்ற அந்த ஆசிரியரின் மனிதாபிமான உதவியை நினைத்து, பெருமையடைந்தேன். அத்துடன், நாமும் ஏழை தொழிலாளிகள், வியாபாரிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது.— பி.சிவகாமி, எஸ்.பெருமாள்பட்டி.தலைக்கவசம் திருடு போகாமல் இருக்க...ஆக., 2, 2015 வாரமலர் இதழில், 'தலைகவசத்தை வாகன நிறுத்தங்களில் வைத்துவிட்டு செல்ல, போதிய வசதி இல்லை...' என, வாசகர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். எங்கள் ஊரில் பலர், சைக்கிளுக்கான, 'செயின் லாக்' வாங்கி, தலைகவசத்தை வண்டியில் உள்ள கைப்பிடியில் இணைத்து பூட்டி வைக்கின்றனர். எல்லா இடங்களிலும் வண்டியை நிறுத்தி, தலைகவசத்தை விட்டுப் போக, இது பாதுகாப்பாக உள்ளது. இதை, வாகன ஓட்டிகள் அனைவரும் பின்பற்றலாமே!— ஆர்.ஆர்.தமன், திருப்பெரும்புதூர்.புதுவித யோகா!சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். பிள்ளைகளை கூப்பிட்டு அறிமுகம் செய்து வைத்ததும், அவரது மகனும், மகளும் என் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். உடனே நான், 'என்னப்பா... பிள்ளைங்களுக்கு இப்பவே, தமிழக அரசியல் கலாசாரத்த பயிற்றுவிக்கிறியா...' என்று கேட்டேன்.அதற்கு நண்பர், 'இதில என்னப்பா அரசியல் இருக்கு... இது, யோகா பிராக்டீஸ்! வீட்டிற்கு யார் வந்தாலும் வணக்கம் வைக்கிறோமே... அது எதுக்குன்னு நினைக்கிறே... அது தான், சூரிய நமஸ்காரம். அதுமாதிரி தான் காலில் விழுந்து வணங்குறதும்! 'பிள்ளைகளுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுக்குறதன் மூலம், மரியாதைக்கு மரியாதையும், கலாசார வழக்கமும் ஆச்சு. அதை விட, பள்ளி செல்லும் பிள்ளைகள், இப்படி நல்லா உடம்ப வளைச்சு, நெளிஞ்சு, உடம்ப முறுக்க தெரிஞ்சு வச்சிகிட்டா தான் நல்லது...' என்றவர், 'சுய மரியாதை பாத்து, நெஞ்சை நிமிர்த்துகிட்டே போனா, வாழ்க்கையில ஏதாவது ஒரு கஷ்டம் வந்தா எதிர்கொள்ள சிரமப்பட வேண்டியது தான்...' என்றார். அவருடைய விளக்கம் எனக்கு சரியாகவே பட்டது!— பிரகாஷ், திருசெங்கோடு.மூட்டுவலிக்கு காரணம்!முன்பெல்லாம் செக்கில் மற்றும் எக்ஸ்பெல்லர் மிஷினில் ஆட்டிய கடலை மற்றும் நல்லெண்ணெயை உபயோகப்படுத்தி வந்தோம். அதனால், நமக்கு தேவையான கொழுப்புச்சத்து இயற்கையாகவே உடலுக்குள் சேர்ந்தது. அதனால், எலும்பு தேய்மானம் இல்லை; மூட்டுவலி அவதியும் இல்லை.முதன்முதலாக, பிரபல நிறுவனம் ஒன்று, சோப்பு செய்ய ஆரம்பித்த போது, தேங்காய் எண்ணெயில் இருந்த கொழுப்பை, சோப், சாக்லெட் மற்றும் வனஸ்பதி செய்ய எடுத்துக் கொண்டு, ஒரு சத்தும் இல்லாத ரீபைண்டு எண்ணெயை, பிரபல மருத்துவர்களின் விளம்பரம் வாயிலாக, கொலஸ்ட்ரால் இல்லாத எண்ணெய் என்ற மாயையை, மக்கள் மனதில் உருவாக்கி விட்டனர்.இதனால், தற்போது எலும்பு தேய்மானம், மூட்டுவலியை செயற்கையாக ஏற்படுத்தி, மருத்துவர்கள் தாங்களும் பிரபலமாகி, மருந்து கம்பெனிகளையும் உருவாக்கி, தங்கள் வருமானத்தையும் பெருக்கி, கொள்ளையடித்து வருகின்றனர்.இது, எல்லா மாநில அரசுகளுக்கு தெரிந்திருந்தும், வேறு வழியில்லாமல் இந்த ஈனச்செயலுக்கு துணை போகின்றனர்.மக்களாகத் தான் இதை உணர்ந்து திருந்த வேண்டும்; திருத்திக் கொள்ள வேண்டும்.— வீரா, புதுச்சேரி.