திண்ணை!
நேரு இறந்த போது, காமராஜர் தமிழகத்தில் இருந்தார். மைசூர் மாநிலத்திலிருந்த நிஜலிங்கப்பாவும், அதுல்யாவும் சென்னையில் காமராஜரோடு சேர்ந்து, தனி விமானத்தில் தலைநகர் சென்றனர். ஆந்திராவில், குக்கிராமத்தில் மாட்டிக் கொண்டார் சஞ்சீவ ரெட்டி. லண்டனிலிருந்து சிவராஜ் பாட்டீல், அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு அமைச்சர் சவான் ஆகியோர் பறந்து வந்தனர்.மொரார்ஜி தேசாய், தன் மகனுடன், தீன்மூர்த்தி பவனுக்கு, 2:30 மணிக்கே வந்து விட்டார். அங்கு நடைபெற வேண்டியவைகளை, உத்தரவுகளாக மொழிந்து கொண்டிருந்தார். அப்போதைய இடைக்கால பிரதமரான நந்தாவிற்கு யோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தார். லால்பகதூரும், கிருஷ்ண மேனனும் எட்ட இருந்து, தேசாய், விஷயத்தில் தலையிடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். தேசாயின் பந்தா, பலருக்கு பிடிக்கவில்லை. அடுத்த பிரதமர் அவர்தான் என்பது போல் நடந்து கொண்டார்.பிறர் பார்ப்பதற்கு வசதியாக,நேருவின் உடலை ஒரு மர மேடையில் கிடத்த வேண்டும் என்றாராம் தேசாய். அருகிலிருந்த சுகாதார அமைச்சர் சுசீலா நய்யார், 'அம்மாதிரி வைத்தால், பிறர் பார்க்க வாய்ப்பாக இருக்காது' என்றாராம். 'இல்லை, இது முன்பே முடிவெடுக்கப்பட்டது...' என்று, வெடுக்கென தேசாய் கூற, சினந்த அம்மையார், 'இந்த உத்தரவுகளைச் சொல்ல, நீங்கள் யார்...' என்று கேட்டார். சோகமே உருவமாக இந்திரா தரையில் அமர்ந்திருந்தார். பிற்பகல் 3:00 மணிக்கு, தீன்மூர்த்தி பவனில், கூட்டம் கூடத் துவங்கியது. தலைவர்களை விட, பொது மக்களே துயரத்தில் இருந்தனர். பார்லிமென்ட் உறுப்பினர்கள், அமைச்சர்கள் கண்களில், கண்ணீரைக் காணோம். தீப்பொறிகளே பறந்தன. தங்கள் தலைவரின் உயிரை பறித்த யமனை, நோக்கியா! இல்லை... அடுத்த பிரதமராக, தம் அணியைச் சேர்ந்தவரை ஆக்கி விட வேண்டுமே என்ற ஆவேசப் பொறிகள் அவை! துக்க வீடு, அரசியல் நரிகளின், சூழச்சிக்களமாக ஆகிவிட்டது.டில்லியில், நிலைமை நெருக்கடியானது. இதைத் தொடர்ந்து, விடுமுறையில் சென்றிருந்த ராணுவ வீரர்கள் உடனடியாகத் திரும்ப அழைக்கப்பட்டனர். ராணுவ தளபதி சவுத்ரி, 6,000 படை வீரர்களை, உடனடியாக தலைநகருக்கு கொண்டு வந்து விட்டார். 8,000 போலீசாரும் களமிறக்கப்பட்டனர். போலீஸ்காரர்களுக்கும், ராணுவ அதிகாரிகளே, உத்தரவு வழங்கிக் கொண்டிருந்தனர். இந்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி, ராணுவ ஆட்சி வந்து விடுமோ என்ற அச்சம் பரவியது. நேருவுக்குப் பின் யார் என்கிற, ஸ்திரமற்ற நிலை நிலவி வந்ததே இந்த அச்சத்திற்குக் காரணம். பாதுகாப்பு அமைச்சர் சவானே, ராணுவ தளபதிக்கு, படைகளைக் குவித்த காரணத்தைக் கேட்டு, கடிதம் எழுதினார் என்றால், மற்றவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்... மேலிடத் தலைவர்களே, சிலர், உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தனர். காந்திஜி மரணத்தின் போது, சவுத்ரியே தலைவராக இருந்தார் என்றும், அப்போது, இதே அளவு படை வந்ததென்றும், சவுத்ரி விளக்கம் கூறிய பின் தான், தவறேதும் நடக்கவில்லை என்று நம்ப முடிந்தது.— 'சிக்கல் தீர்த்த செயல்வீரர் காமராஜர்' என்ற நூலில், அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியரான அ.அறிவொளி.அசாம் தொலைக்காட்சி அதிகாரி ஒருவர், தன்னுடைய தலைமை அதிகாரியை பற்றி சொல்லி சிரித்தார். அந்தத் தலைமை அதிகாரி, அலுவலக காரில் போவாராம். காரை ஒரு பக்கமாக நிறுத்தி, டிரைவரை, 'வாழைப்பழம் என்ன விலை...' என்று கேட்டு வரச் சொல்வாராம். பக்கத்துக் கடையில் கேட்டால், 'காரில் வந்திருப்பவர்' என்று எண்ணி, விலையைத் கூட்டுவர் என்று, சற்று தொலைவில் உள்ள கடையில், பழம் வாங்கி வர சொல்லுவாராம். அதுவும் எப்படி என்று நினைக்கிறீர்கள்... டிரைவர், நடந்து சென்று, வாழைப்பழ விலை கேட்டு, திரும்பி வந்து, இவரிடம் விலை சொல்லி, காசை வாங்கிக் கொண்டு, கடைக்கு போவாராம்.வாழைப்பழத்தோடு திரும்பியவரிடம், ஒரு முறை இவர், 'இந்த பழம் நல்லா இல்ல; பழத்தை கொடுத்து, காசை வாங்கி வா...' என்று, பழையபடி நடக்க வைத்தாராம். டிரைவர், அந்த அதிகாரி முன்னாலேயே, வாழைப்பழத்தை விழுங்கி விட்டு, தன் சட்டைப் பையிலிருந்து, காசை எடுத்துக் கொடுத்தாராம். இதனால், ஆண்டானுக்கும், அடிமைக்கும் பலத்த சண்டையாம்.— சு.சமுத்திரம், 'எனது கதைகளின் கதைகளில்' நூலிலிருந்து...நடுத்தெரு நாராயணன்