உள்ளூர் செய்திகள்

திண்ணை!

தஞ்சை ந.எத்திராஜ் எழுதிய, அருணோதய பதிப்பக வெளியீடான, 'இணையற்ற இந்திய ராணிகள்' நூலிலிருந்து: சத்ரபதி சிவாஜியை நேர்காணலுக்கு டில்லிக்கு அழைத்து, அவரை வீட்டுக்காவலில் சிறை வைத்தார் அவுரங்கசீப். ஆனால், அவுரங்கசீப்பின் மகள் சைபுன்னிசாவுக்கு சிவாஜி மீது காதல் ஏற்பட்டது என்றும், சிவாஜி அதை ஏற்கவில்லை என்றும், சில ஆங்கில ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.தக்காணத்தின் ராஜபிரதிநிதியின் ஏற்பாட்டின்படி, சமாதானம் பேச வந்த சிவாஜியை, சிறையில் அடைத்த செய்கையில் நியாயமில்லை என்பதாலும், ஆக்ரா அவையில், சிவாஜி நடந்து கொண்ட விதத்தையும், அவருடைய கம்பீரம் மற்றும் தன்மான உணர்வையும் கண்டு வியந்த சைபுன்னிசா, சிவாஜி தப்பிச் செல்ல மறைமுகமாக உதவியதாக, ஆங்கில ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.'விந்தை மனிதர் வால்ட் டிஸ்னி' நூலிலிருந்து: வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் திரைப்படங்கள், உலகப் புகழ் பெற்றவை. அவரது படங்களில் வரும் விலங்குகளின் பேச்சு, இயற்கையாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவார், 'நெருப்புக் கோழி அப்படி டான்ஸ் ஆடாது; பென்குவின் இப்படி சிரிக்காது...' என்று ஆட்சேபிப்பார். ஒரு படத்தில், ஆந்தை பேசுவதாக, காட்ட வேண்டியிருந்தது. நூற்றுக்கணக்கானோரின் குரலைப் பதிவு செய்து பார்த்து, 'சரியில்லை...' என்று ஒதுக்கி விட்டார்.கடைசியில், ஒருவர் பெயரை சிபாரிசு செய்து, 'அவர் ரேடியோவில், உருளைக்கிழங்கு பேசுவது மாதிரி பேசியிருக்கிறார்...' என்றனர். 'அவர் தான் நமக்குத் தேவை; உருளைக்கிழங்கு எப்படிப் பேசும் என்பது தெரிந்தவருக்கு தான், ஆந்தை எப்படிப் பேசும் என்று தெரிந்திருக்கும்...' என்று கூறி, அவரையே அமர்த்தினார், டிஸ்னி.அகில இந்திய காங்கிரஸ் மாநாடு, ஐதராபாத்தில் நடைபெற்ற போது, துவக்க கால காங்கிரஸ் தலைவர்களாக இருந்த, 70 பேருடைய உருவப் படங்கள் தேடப்பட்டன. 69 பேரின் படங்கள் கிடைத்தன; ஒருவருடைய புகைப்படம் மட்டும் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. அவர்தான், காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த, அதன் முதல் தலைவரான, ஆலன் ஓ ஹியூம்!'தமிழ்ப் புலவர்கள்' நூலிலிருந்து: புலவர் ஒருவர், தம் நண்பரான மற்றொரு புலவரை காண வந்திருந்தார். இருவரும் உணவு உண்டு, வெற்றிலை பாக்கு போட்டபடி, அளவளாவினர்.அப்போது, தம் மனைவியை அழைத்து, 'ஐயா உண்ட இடத்தில், சாணியை தடவு...' என்றார், நண்பர் புலவர்.'ஆமாம்... அவர் சொன்ன இடத்தில், சீக்கிரம் பூசுங்கள்...' என்றார் வந்திருந்த புலவர்.'உண்ட இடம்' என்பது சாப்பிட்ட இடம் என்பதோடு, சாப்பிட்ட வாயையும் குறிக்கும். 'சொன்ன இடம்' என்பது, அவர் குறிப்பிட்ட இடம் என்பதோடு, அவர் வாயையும் குறிக்கும்.படித்ததில் ரசித்தது...தன்னைப் பார்த்துக் கொள்ள வந்திருந்த ஆயாவிடம், 'பீரோவை திறக்க வேண்டும்...' என்று கேட்டது குழந்தை. 'அதனுள் விலை உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி உள்ளது; அதனால், சாவியை என்னிடம் தரவில்லை...' என்று கூறினாள் ஆயா.அடுத்து, ஏ.டி.எம்., கார்டை கேட்டது குழந்தை. 'அதில் பணம் உள்ளதால், என்னிடம் தரவில்லை..' என்றாள் ஆயா.குழந்தை கேட்கும் அனைத்திற்கும் இப்படியே கூறினாள், ஆயா.இறுதியில், 'அப்ப தங்கம், வெள்ளியை விட, நான் விலை குறைவு என்பதால் தான், என்னை மட்டும் உன்னிடம் விட்டுச் சென்றாளா என் அம்மா...' என்று கேட்டது குழந்தை.ஆயாவால் பதில் கூற முடியவில்லை.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !