உள்ளூர் செய்திகள்

திண்ணை!

காந்திஜி பற்றி, ஆவணப்படம் தயாரித்த, ஏ.கே.செட்டியார் ஒரு கட்டுரையில்: குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்த, சபர்மதி ஆசிரமத்தில், காந்திஜி பற்றி ஆவணப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம்; கேமராமேனாக, டாக்டர் பதி பணியாற்றினார்.காலைப் பொழுதில் காந்திஜி நடந்து வருவது போலவும், அப்போது, எதிரே வருவோருக்கு வணக்கம் தெரிவிப்பது போன்றும் படமாக்க திட்டமிட்டோம். அதனால், காந்திஜி நடந்து வரும் போது, நான் எதிரே வந்து வணக்கம் தெரிவிப்பது என்றும் பதிலுக்கு, அவர் கரம் கூப்பி வணங்கும் போது, காந்திஜியை படம் பிடித்து விட வேண்டும் என்று திட்டமிட்டு, கேமராவோடு சாலையில் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் வேகமாக நடந்து வந்தார், காந்திஜி. அப்போது, சாலையில் எதிர்பட்ட வழிப்போக்கர், ஆடு மேய்ப்போர் மற்றும் வழியில் தென்படும் அனைவருக்கும் அவரே வணக்கம் சொல்லி, கை கூப்பி கும்பிட்டார். எனக்கு வேலை இல்லாமலேயே, அக்காட்சி படமாக்கப்பட்டது.'கதம்பக் கதைகள்' என்ற குட்டிக்கதைகள் நூலிலிருந்து: ஒரு விவசாயி, வங்கிக்கு சென்று, 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி கேட்டார்.'உன்னிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றன?' என்று விசாரித்தார், வங்கி அதிகாரி.'ஐந்து மாடுகள்...' என்றார் விவசாயி. அவர் சொன்னது உண்மை என்று தெரிந்த பின், கடன் வழங்கினார், அதிகாரி.சில மாதங்கள் கழித்து, நிறைய பணத்துடன் வந்து, கடனை அடைத்தார், விவசாயி.'மீதிப் பணத்தை, இந்த வங்கியிலேயே போட்டு வையேன்...' என்றார் அதிகாரி.அவரை சந்தேகமாக பார்த்து, 'உங்களிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றன?' என்று கேட்டார், விவசாயி.கருணாநிதி, தொடர்ந்து, 25 ஆண்டுகள் சட்டசபையில் பணியாற்றியதற்கான பாராட்டு விழா, 1984ல் நடந்த போது, முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் பேசியது: நான், முதல்வராக இருந்த போது, கருணாநிதியை கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட, அவரை பாளையங்கோட்டை சிறையில் வைத்தேன். அதன்பின், ஒருநாள், 'சுதேசமித்திரன்' பத்திரிகையில், 'பாளைச் சிறையிலே இருக்கும், கருணாநிதிக்கு நெஞ்சு வலி...' என்று செய்தி வந்திருந்தது. அப்போது, வெளியூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். இருப்பினும், பெரிய அதிகாரிக்கு போன் செய்து, 'அவசரம் இது; உடனே, என்னை ரயில் நிலையத்தில் வந்து சந்தியுங்கள்...' என்று கூறினேன். என்னை வந்து சந்தித்த அதிகாரியிடம், 'கருணாநிதியை உடனே விடுதலை செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டேன். சாதாரணமாக, பாதுகாப்பு கைதியை, முதல்வரே விடுதலை செய்ய சொன்னாலும், உரிய அதிகாரிகள் கையெழுத்திட்டு செயல்பட, இரண்டு, மூன்று நாட்களாகும்.ஆனால், கருணாநிதியை போன்ற அறிவாளிகள் சிறையில் அவதிப்படக் கூடாது என்பதற்காகவே துணிவுடன் எல்லா சம்பிரதாயங்களையும் ஒதுக்கி, இரவில் உத்தரவிட்டேன். மறுநாள் காலை, 6:00 மணிக்கு, அவர் விடுதலை செய்யப்பட்டார்.'தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: பண்டிதமணி கதிரேசன் செட்டியார், தன் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தார். உணவு உண்ட பின், வேலைக்காரன் பால் கொண்டு வந்து கொடுத்தான். பாலில் எறும்பு விழுந்து கிடந்ததை கண்ட பண்டிதமணி, 'பாற்கடலில், சீனிவாசன் துயில் கொள்கிறான்...' என்றார்.பாற்கடல் - பால்சீனிவாசன் - சீனியில் விரும்பி வாசம் செய்யும் எறும்பு!பொருளை அறிந்த நண்பர் சிரித்தார். நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !