உள்ளூர் செய்திகள்

திண்ணை!

டிச.,5 -ஜெயலலிதா நினைவு நாள் எஸ்.கிருபாகரன் எழுதிய, 'ஜெ.ஜெயலலிதா எனும் நான்... அம்மாவின் கதை!' நுாலிலிருந்து:கடந்த, 1960, மே மாத இறுதியில், ஒருநாள், சென்னை, மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில், அம்மு என்ற அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. அப்போது அவருக்கு, 12 வயது.திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், அம்மா சந்தியாவின் சொந்த பந்தங்கள், நண்பர்கள் என, ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக, சிவாஜி கணேசன், பி.நாகிரெட்டி, நாகய்யா, சாவித்திரி, பிரேம் நசீர் என, பலரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து, அம்முவை ஆசிர்வதித்தனர்.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, சிவாஜி, அம்முவை பார்த்து, 'இந்த பொண்ணு, ரொம்ப லவ்லியாக இருக்கிறாள்; தங்க சிலை மாதிரி தெரிகிறாள். முகத்தை பார்த்தா, பிற்காலத்தில் திரை உலகத்துக்கு வந்து, ஒரு கலக்கு கலக்குவா போலிருக்கு...' என, அழுத்தமாக சொல்லிச் சென்றார்.அடுத்த, 10 ஆண்டுகளிலேயே, தன்னை வாழ்த்தி பேசிய சிவாஜியுடன், 'டூயட்' பாடுவோம் என, அம்முவும் எதிர் பார்த்திருக்க மாட்டார். எந்த பெண்ணை வாழ்த்தி பேசினோமோ, அவரே தனக்கு ஜோடியாக நடிக்க வருவாள் என்று, சிவாஜியும் நினைத்திருக்க மாட்டார்.சர்ச் பார்க் பள்ளியில், விரல் விட்டு சொல்லும் எண்ணிக்கையில் தான், ஜெயலலிதாவுக்கு தோழிகள் அமைந்தனர். இவர்களில், அம்முவுக்கு நெருக்கமான ஒரு தோழி, இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தியின் மகள், நளினி. ஆறு ஆண்டுகள் அம்முவுடன் ஒன்றாக படித்தவர்.விடுமுறையின்போது, நளினி உள்ளிட்ட சில தோழியருடன், பூண்டி, சாத்தனுார் அணை, மகாபலிபுரம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு, 'பிக்னிக்' செல்வது வழக்கம். ஆனால், பள்ளி படிப்பு முடிந்த பின், நளினி என்ன ஆனார் என, தெரியவில்லை. நளினி தங்கியிருந்த இடங்களில் எல்லாம் விசாரித்தும், அவரை பற்றி அறிய முடியவில்லை.பின்னாளில், அம்மு, பெரிய நடிகையான பிறகும் கூட, நளினியின் நினைவு அவ்வப்போது வந்து, அவருக்கு வேதனையை தரும். பல ஆண்டுகளுக்கு பின் ஒருநாள், அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.சந்தியாவின் தோழியான நடிகை, எஸ்.வரலட்சுமி, தன் மகனின் பிறந்த நாளுக்கு, அம்முவை அழைத்திருந்தார். வரலட்சுமி வீட்டருகே தான், நளினியின் குடும்பமும் ஒரு காலத்தில் வசித்தது.பிறந்த நாளுக்கு வந்த, அம்முவுக்கு, நளினி நினைவு வந்து, அதை வரலட்சுமியிடம் பகிர்ந்து கொண்டார். நளினியை ஏற்கனவே அறிந்திருந்த வரலட்சுமி, பக்கத்து வீட்டுக்கு, திரும்பவும் அவர் வந்து விட்ட தகவலை தெரிவித்தார்.உடனே, நளினியை பார்க்க கிளம்பியவரிடம், 'நளினியையும் விசேஷத்திற்கு அழைத்திருக்கிறேன், வருவார்...' என்றார், வரலட்சுமி. சில நிமிடங்களில், நளினி வந்தார். பல ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்டதால், தோழிகள் இருவருக்கும் வார்த்தைகள் வரவில்லை.மருத்துவ படிப்பு முடித்ததையும், திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதையும், நளினி சொல்ல, மகிழ்ச்சிப் பெருக்குடன் தோழியை கட்டி தழுவினார், அம்மு.'நீ வீடு மாறி விட்டதால், என்னால் உன்னை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், நான் சினிமா நடிகைதானே... எளிதாக என்னை தொடர்பு கொள்ள முடிந்தும், ஏன் முயலவில்லை...' என, உருக்கமாக கேட்டார், அம்மு.'நீ இப்போ சாதாரண ஆள் இல்லை, நடிகை. அதுவும் பெரிய நட்சத்திர நடிகை. இப்போ உனக்கு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் நண்பர்களாகி இருப்பர். இந்த சமயத்தில், என்னை போன்ற சாதாரண தோழி தேடி வந்தால், ஏதோ ஆதாயத்துக்காகதான் வந்திருக்கிறாள் என, உன்னை சேர்ந்தவர்கள், உன்னிடம் பேச விட மாட்டார்களே...' என கூறி, கண் கலங்கினார், நளினி.'அடி போடி... நான் என்ன இன்னும் நுாறு ஆண்டுகளுக்கா நடிக்க போகிறேன்... நடிப்பு துறையில் நான் புகழடைந்தாலும், என்றும் உன் உயிர் தோழி தான். இனி, எப்போது வேண்டுமானாலும் நீ, என் வீட்டுக்கு வரலாம். எனக்கும் ஓய்வு கிடைத்தால், உன் வீட்டுக்கு நானும் ஓடி வருவேன். சரியா...' என, அம்மு பேசப் பேச, அவரை பிரமிப்புடன் பார்த்தபடியே இருந்தார், நளினி.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !