உள்ளூர் செய்திகள்

திண்ணை!

எழுத்தாளர், ஜெ.பாபு எழுதிய, 'வரலாற்றில், ஜி.கே.மூப்பனார்' நுாலிலிருந்து: மூப்பனாரின் அரசியல் சேவை நமக்கு தெரியும். அவர், இசைச் சேவையிலும் சிறந்து விளங்கினார்.இதற்கு சிறந்த உதாரணம்: ஸ்ரீதியாகராஜ ஆராதனை. 1966ல் துவங்கி, தொடர்ந்து, 25 ஆண்டுகள், தியாக பிரம்ம மகோத்சவ கமிட்டியின் தலைவராக இருந்துள்ளார்.இதுநாள் வரை, ஸ்ரீதியாக பிரம்ம மகோத்சவம் மிகச்சிறப்பாக நடந்து வருவதற்கு முக்கிய காரணம், மூப்பனாரும், அவரது முன்னோரும் தான். இசைக் கலைஞர்களுக்கு காலங்காலமாக ஆதரவு தந்து வந்துள்ளனர்.இதற்கு உதாரணமாக சில நிகழ்ச்சிகளை கூறலாம்...சரபோஜி மன்னர் காலத்தில், நரசையர் என்ற, சங்கீத வித்வான் இருந்தார். இவர், சங்கராபரண ராகத்தை மிக விரிவாக பாடுவதில் வல்லவர். சரபோஜி மன்னர் முன்னிலையில், நரசையர் நன்றாக பாட, மகிழ்ந்த மன்னர், 'சங்கராபரணம் நரசையர்' என்ற சிறப்பு பட்டம் சூட்டி, அன்பளிப்பு வழங்கினார்.அதுமுதல் அவரை, சங்கராபரணம் பாடச் சொல்லி, கேட்டு மகிழ்ந்தனர், ரசிகர்கள். இத்தகைய சூழலில், நரசையருக்கு, கடும் பண நெருக்கடி ஏற்பட்டது. அதற்காக, கடனும் வாங்க வேண்டியிருந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலத்தில் இருந்த, ஜி.கே.மூப்பனாரின் முன்னோரில் ஒருவரான, ராமபத்திர மூப்பனாரிடம் சென்று, கடன் கேட்டார்.'கடன் வாங்க வேண்டுமெனில், எதையேனும் அடகு வைக்க வேண்டும்...' என, ராமபத்திர மூப்பனார் வேடிக்கையாக கூறினார். உடனே, நரசையர், 'எனக்கு புகழ் தேடிக் கொடுத்த, சங்கராபரண ராகத்தை, அடகு வைக்கிறேன். பொன்னை திருப்பி தரும் வரையில், அந்த ராகத்தை எங்கும் பாடுவதில்லை...' என, உறுதி பத்திரம் எழுதிக் கொடுத்தார். கேட்ட கடனை வழங்கினார், ராமபத்திர மூப்பனார்.கொடுத்த வாக்குபடி, சங்கராபரண ராகம் பாடுவதையே நிறுத்தி விட்டார், நரசையர்.அந்த காலத்தில், கும்பகோணத்தில், அப்பு ராயர் என, ஒரு செல்வந்தர் இருந்தார். அவர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்கு, பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட திவானாகவும் இருந்தார். அவர் வீட்டில், ஒரு திருமண நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்ள பிரபல இசை கலைஞர்களை அழைத்தார். இவர்களில், சங்கராபரணம் நரசையரும் ஒருவர்.அவரிடம், சங்கராபரணம் பாடலை பாட கோரினார், திவான்.'அது, என்னால் இயலாது...' என்றார், நரசையர்.'ஏன்...' என்று கேட்டார்.'நான் அதை, ராமபத்திர மூப்பனாரிடம் அடகு வைத்து, பொன் பெற்றுக் கொண்டுள்ளேன். அத்துடன், கடனையும், வட்டியையும் திரும்பி கொடுக்கும் வரை, பாடலை பாட மாட்டேன் என, உறுதி பத்திரமும் கொடுத்துள்ளேன்...' எனக் கூறினார்.இதைக் கேட்ட திவான், நரசையர் வாங்கிய பொன்னையும், அதன் வட்டியையும் சேர்த்து, கபிஸ்தலம், ராமபத்திர மூப்பனாரிடம் கொடுத்து, கடன் பத்திரத்தை திரும்பி வாங்கி வரும்படி, ஒருவரை அனுப்பினார்.அந்த நபர், கபிஸ்தலம் சென்று, ராமபத்திர மூப்பனாரிடம், பணத்தையும், பொன்னையும் கொடுத்து, நரசையரின் விடுதலை பத்திரத்தை கேட்டார்.திகைத்த ராமபத்திர மூப்பனார், உடனே, விடுதலை பத்திரம், திவான் கொடுத்த பணம் மற்றும் கூடுதலாக கொஞ்சம் பணத்துடன், திவான் வீட்டிற்கு விரைந்தார்.'திவானும், நரசையரும் என்னை மன்னிக்க வேண்டும். என்னிடம் எவ்வளவு தொகை வேண்டுமாயினும் கேட்டு வாங்க உரிமையுடையவர், நரசையர். அவரை போன்றோருக்கு கொடுக்காமல் என் பணம் இருந்து என்ன பயன். அவர், பணம் வேண்டும் என்று கேட்டால், உடனே கொடுத்திருப்பேன். 'கடனாக வேண்டும் என கேட்டது, எனக்கு வருத்தத்தை தந்தது. விளையாட்டாக, 'அடகு உண்டா...' என, கேட்டேன். அவர், சங்கராபரணத்தை அடகு வைத்தார். நீங்கள் கொடுத்த தொகை எனக்கு உரியதன்று.'இத்தனை நாள் சங்கராபரணத்தை சிறை வைத்ததற்கு தண்டனையாக, நான் கொடுக்கும் இந்த தொகையையும், திவானே, நரசையரிடம் வழங்க வேண்டும்...' எனக் கூறி, பணத்தையும், விடுதலை பத்திரத்தையும் வழங்கினார், ராமபத்திர மூப்பனார்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !