உள்ளூர் செய்திகள்

திண்ணை

ஒரு சமயம், வெளியூர் பயணத்திற்கு தயாரானார், ஜவஹர்லால் நேரு. 10 மணி நேர பயணம் தான். இருந்தபோதும், 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை தன்னுடன் எடுத்து செல்ல வைத்தார். அதை கவனித்த மகள் இந்திரா, 'இந்த சிறு பயணத்தில், இவ்வளவு புத்தகங்களையும் உங்களால் எப்படி படிக்க முடியும்...' என்று, கேட்டார்.'உண்மை தான். இவ்வளவு புத்தகங்களையும் என்னால் படிக்க முடியாது தான். இந்த புத்தகங்கள் என்னோடு இருப்பது, அதை எழுதிய அறிஞர்கள் அனைவரும் என்னோடு இருப்பது போல நான் உணர்கிறேன். இந்த துணை, அபாரமான சக்தி கொண்டது. அதனால் தான், இவ்வளவு புத்தகங்களையும் எடுத்துச் செல்கிறேன்...' என்றார், நேரு.இந்திய பிரதமராக இருந்த நேருவும், தொழிலதிபர் டாடாவும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, 'இந்தியாவில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே செல்கிறதே... இது, நாட்டை பாதிக்காதா...' என்று கேட்டார், டாடா. 'பிறக்கும் குழந்தைகள் வயிறுடன் மட்டுமா பிறக்கின்றன. உழைப்பதற்கு இரண்டு கைகளுடனும் அல்லவா பிறக்கின்றன...' என்று, நேரு சொல்ல, சுற்றி இருந்தோர், அவரின் பதிலை ரசித்தனர்.ஆங்கிலேயர் ஆட்சியில், பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார், நேரு.'சிறை வாழ்க்கை, உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லையா...' என்று, நேருவிடம் கேட்டார், ஒருவர்.'சிறையில், பல கடினமான நுால்களை படிக்கிறேன். கற்பனைக் கதைகள் சோம்பலை தரும் என்பதால், அவற்றை தவிர்த்து விடுவேன். படிப்பதில் சோர்வு ஏற்பட்டால், எழுத துவங்கி விடுவேன்.'என் மகளுக்கு, நான் எழுதிய கடிதங்கள், இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது. இப்போது சொல்லுங்கள், சிறை வாழ்க்கை எப்படி கசக்கும்...' என்றார், நேரு.நேரு, பிரதமராக இருந்த சமயம். நாடாளுமன்றத்தில் நேருவிற்கும், பூபேஷ் குப்தா என்பவருக்குமிடையில், கடுமையான வாக்குவாதம் நடந்தது. உணர்ச்சி வேகத்தில், கடுமையான வார்த்தைகளை பேசி விட்டார், நேரு. அதாவது, நாடாளுமன்றத்தின் மரபுகளை மீறியதாக அவரது பேச்சு, அன்று அமைந்து விட்டது.அத்தனை பேரும் கூச்சல் போட, எதிர்க்கட்சிகளும் களத்தில் இறங்க, நேரு, மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டது.அப்போது, துணை குடியரசு தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், நேருவிடம், அவர் பேசிய வார்த்தைகளை, 'வாபஸ்' வாங்கி, வருத்தம் தெரிவிக்க கட்டளையிட்டார்.நேருவும் அப்படியே செய்தார். பின்னாளில், அதே, டாக்டர் ராதாகிருஷ்ணனை, நாட்டின் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தார், நேரு.குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தவர், நேரு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் எல்லா வாய்ப்புகளும், அவர்கள் வளர்ந்து சாதிப்பதற்கு சமமாக கிடைக்க வேண்டும் என்று ஏங்கியவர். ஒருசமயம், அமெரிக்காவில், வாஷிங்டன் நகரிலிருந்த, ஒரு பள்ளிக்கு சென்றிருந்தார், நேரு. அங்கே, ஒரு வகுப்பறையில், மாணவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, 'எங்கள் பள்ளியில், ஒரு மாணவன் இருக்கிறான். அவன், யார் என்ன ஜோக் அடித்தாலும் சிரிக்க மாட்டான்...' என்று கூறினர், அங்கிருந்த மாணவர்கள்.சிரிக்காத அந்த மாணவனை, எப்படியும் சிரிக்க வைக்க எண்ணி, அவன் இருந்த வகுப்பறைக்கு சென்றார், நேரு.அவனோ, உம்மென்று உட்கார்ந்திருந்தான்.பாக்கெட்டிலிருந்த சீப்பை எடுத்து, தன் வழுக்கை தலையை சீவினார், நேரு. உடனே, அந்த மாணவன் மட்டுமல்ல, அனைவருமே சிரித்து, மகிழ்ந்தனர். நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !