உள்ளூர் செய்திகள்

திண்ணை!

விடுதலை போராட்ட காலத்தில், கவிக்குயில் சரோஜினி நாயுடு உரையாற்றிட பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது. அவர், மேடை ஏறுவதற்கு முன், மின் விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டன.கூட்டத்தில் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது. என்ன செய்வதென்று தெரியாது, கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தவித்தனர்.துணிச்சலுடன் மேடை ஏறினார், நெஞ்சுருதி மிக்க சரோஜினி நாயுடு.சிம்மக் குரலில், 'விளக்கு விளக்கு என்று கூச்சலிடுகிறீர்களே, விளக்கு இல்லை என்றால், மாற்று ஏற்பாடு குறித்து யோசிக்காமல் இருக்கிறீர்களே... உங்களுக்காக நான் ஒரு விளக்கு கொண்டு வந்துள்ளேன். அது, நம் அரசியல் ஆசான் மகாத்மா காந்திஜி தந்துள்ள அறிவு விளக்கு...' என்று, பேச்சை துவக்கினார். அமைதியானது, கூட்டம்.ராமகிருஷ்ண மடத்தில் நடக்க இருந்த ஒரு விழாவிற்காக, நிறைய லட்டுகளை தயாரித்து வைத்திருந்தனர். எறும்புகளிடமிருந்து அவற்றை எப்படி பாதுகாப்பது என்று யோசித்தனர். கடைசியில், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் யோசனை கேட்டனர்.லட்டு வைத்திருந்த பாத்திரத்தை சுற்றி, சர்க்கரையால் வட்டம் போட்டார், அவர். இரவில் வந்த எறும்புகள், சர்க்கரையை மட்டும் சுவைத்து சென்று விட்டன. லட்டு பாத்திரத்தை நெருங்கவே இல்லை. காலையில், அதை பார்த்து விட்டு, ராமகிருஷ்ணரிடம், லட்டு பாத்திரத்தை எறும்புகள் நெருங்காததை தெரிவித்தனர்.அப்போது, ராமகிருஷ்ண பரமஹம்சர், 'எறும்புகள் முன்னேறி சென்றிருந்தால், அவற்றுக்கு லட்டுகளே கிடைத்திருக்கும். இந்த எறும்புகளை போல தான், பல மனிதர்கள் உள்ளனர். சிறு வெற்றியே போதும் என, பெரும் வெற்றிகளை கோட்டை விட்டு விடுகின்றனர்...' என்றார்.முயற்சி திருவினையாக்கி, வாழ்க்கையில் முன்னேறி, உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தவர், ராக்பெல்லர். ஒருமுறை, விமானத்தில் உயரே பறந்து கொண்டிருந்த போது, அருகில் அமர்ந்திருந்தவர், '10 தலைமுறைக்கு, உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து சேர்த்து விட்டீர்கள். இன்னும் ஏன் அலைந்து, திரிந்து, பணம் சம்பாதிக்க வேண்டும்...' என்று கேட்டார்.'நாம் பயணிக்கும் விமானம் உச்சிக்கு வந்து விட்டதே. இப்போது, இன்ஜினை அணைத்தால் என்ன ஆகும்...' என்றார், ராக்பெல்லர்.'தரையில் விழுந்து சிதறி அழிந்து விடுவோம்...' என்றார், அந்த மனிதர்.'உழைப்பும், முயற்சியும், அது போல தான். மேலே வந்து விட்டோம் என்று, கை விட்டு விட்டால், வீழ்ச்சி தான் மிஞ்சும்...' என்றார், ராக்பெல்லர்.கவியரசர் கண்ணதாசனிடம், 'என் மகனை, வக்கீலுக்கு படிக்க வைக்க விரும்புகிறேன். அவனோ, கதை, கவிதை என்று, தமிழ் இலக்கியம் படிக்கப் போவதாக சொல்கிறான்...' என்றார், அவரது நண்பர்.வருத்தப்பட்ட நண்பருக்கு, ஆறுதலாக, 'ஒருவனது உள்ளுணர்வில் என்ன தோன்றுகிறதோ, அதே வழியில் அவனை விட்டுவிட வேண்டும். ஆட்டுக்கு, இலை, தழைகள் பிடிக்கும்.'மாட்டுக்கு, வைக்கோல், புண்ணாக்கு பிடிக்கும். குரங்குக்கு, வாழைப்பழம் பிடிக்கும். புண்ணாக்கு தின்னும்படி குரங்கை வற்புறுத்தக் கூடாது. அதைப்போல, அவன் விரும்பும் படிப்பை படிக்கட்டும்...' என்றார், கண்ணதாசன். நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !