நவ., 14 - நேரு பிறந்த நாள்க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து:
இந்தியா சுதந்திரம் பெறுமுன், தலைநகர் டில்லியிலுள்ள காசிதாபாத் ரயில் நிலையத்தில் வந்திறங்கினார், நேரு. கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம், கடல் அலையென திரண்டிருந்தது.ரயிலில் வந்து இறங்கிய அந்த தலைவரை நேரில் காணவும், மாலையிட்டு மரியாதையுடன் வரவேற்க, முண்டியடித்து முன்னேறினர், மக்கள். அந்நிலையில், ரயில் நிலையத்தை கூட்டிப் பெருக்கும் ஒரு தொழிலாளி, தலைவரை காண, மாபெரும் கூட்டத்திடையே நெருக்கி தள்ளி முன்னேற முனைந்தார். அப்போது, 'இழிந்த வேலை செய்யும் தோட்டி நீ, முடிந்தால், தனியாக ஒதுங்கி நின்று பார். எங்களுடன் வராதே...' என்று அதட்டினார், ஒருவர்.சற்று ஒதுங்கி நின்று, தலைவரின் முகத்தையாவது பார்க்கலாம் என, நினைத்துக் கொண்டிருந்தான்.பெரிய கூட்டத்தில், அன்பு வெள்ளத்தில் அகப்பட்டு, வணக்கத்தை தெரிவித்துக் கொண்டிருந்த நேரு, ஒதுக்குப்புறமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த தோட்டியை கவனித்து விட்டார். அடுத்த நொடி, கூட்டத்தையும், சாரணர், போலீசையும் தள்ளி, வேகமாக அந்த தொழிலாளி நின்ற இடத்தை நோக்கிச் சென்றார்.அவரருகே சென்று, 'என் இனிய இந்திய சகோதர நண்பனே, என்னைப் பார்க்க விரும்பிய நீ, ஏன் ஒதுக்குப்புறமாக ஒதுங்குகிறாய். இதோ உன் அருகில் நான். இப்போது, உன் ஆசை தீர என்னைப் பார்...' என்றவர், பெருமிதத்துடன், அவரது தோளில் கையை போட்டு அணைத்தபடி நின்றார், நேரு.மேலும், தம்மை படம் பிடிக்க விரும்பிய புகைப்படக்காரர்களை அழைத்து, தாமும், அந்த தொழிலாளியும் நிற்பதை படம் எடுக்குமாறு செய்தார்.***
மு.அப்பாஸ்மந்திரி எழுதிய, '200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள்' நுாலிலிருந்து:
இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது, சிறையில் இருந்தவர்களுக்கு, ஆங்கிலேய அரசு வழங்கிய ரொட்டியில், மண் கலந்திருந்தது.அதைக் கண்ட ஜவஹர்லால் நேரு, கோபத்துடன், 'மண் இல்லாத ரொட்டி வேண்டும்...' என்றார்.மண் இல்லாத ரொட்டி கேட்டதும், கோபம் கொண்டார், சிறை அதிகாரி.உடனே, நேருவை பார்த்து, 'ரொட்டியில் கலந்திருப்பதும், உங்கள் தாய் நாட்டு மண் தான். சாப்பிடுங்கள்; அது உங்களுக்கு சுவையாக இருக்கும்...' என்றார்.'நாங்கள் போராடுவது, எங்கள் மண்ணை மீட்பதற்கு தான்; தின்பதற்கு அல்ல...' என்றார், நேரு.வாயடைத்து போனார், சிறை அதிகாரி.- நடுத்தெரு நாராயணன்