உள்ளூர் செய்திகள்

திண்ணை

மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார், ஒரு விஞ்ஞானி.அன்றைக்கு அவர் பேசிய பேச்சு, கடவுள் குறித்ததாக இருந்தது.விஞ்ஞானியிடம் ஒரு மாணவன் இப்படி கேட்டார்...'கடவுள் எங்கே? ஐயா, கடவுள் இருக்கிறாரா... இல்லையா?'அந்த விஞ்ஞானியோ அசரவில்லை. கேள்வி கேட்ட மாணவரிடம், பதில் கேள்வியாக ஒன்றை கேட்டார்.'பூமி, தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எவ்வளவு நேரம் ஆகும்?''24 மணி நேரம்...' என, அந்த மாணவரோடு சேர்ந்து, வகுப்பில் இருந்தோர் அனைவரும் கூறினர். 'சூரியன், நாமிருக்கும் பால்வீதியைச் சுற்றி வர எவ்வளவு காலம் ஆகும்?'அந்த வகுப்பிலிருந்த யாராலும் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.'சூரியன் பால்வீதியைச் சுற்றி வர, 21.5 கோடி ஆண்டுகள் ஆகும். ஒரு பால்வீதியை நம் கண்ணுக்குத் தெரியும் சூரியன் சுற்றி வரவே இவ்வளவு காலம் ஆகிறது.'இந்த பால்வீதி போல் கோடிக்கணக்கில் இருக்கின்றன. இவையெல்லாம் அண்டத்தில் ஒரு குறிப்பிட்ட துாரத்தில், காலத்தில் மிகச் சரியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் துல்லியமான இயக்கத்தை உருவாக்கியது யார்... இந்த அற்புதமான இயக்கத்தை நிர்ணயித்தது யார்... சொல்லுங்கள்...' எனக் கேட்டார், விஞ்ஞானி.யாரும் பதில் சொல்லவில்லை.விஞ்ஞானியே தொடர்ந்து, 'ஆக, நம் கண்ணுக்கு முன் தெரியும் ஒரு சக்தி, சூரியன். நம் கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் சக்தி, கடவுள்...' என்றார்.இப்படி சொன்னவர், டாக்டர் அப்துல் கலாம்.இந்த பதிலை கேட்ட மாணவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பினர்.***கடந்த 2002 - 2007 வரை, ஜனாதிபதியாக பணியாற்றினார், கலாம்.எளிமையின் சின்னமாக திகழ்ந்தார். விருந்து, வீண் ஆடம்பரங்களை தவிர்த்து, இரண்டே பெட்டிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் குடிபெயர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு பின், அதே இரண்டு பெட்டிகளுடன் வெளியேறிய ஒரே ஜனாதிபதி, அப்துல் கலாம் தான்.மாணவர்களுக்கு, 'கனவு காணுங்கள்' என கூறிய அறிவுரை, தலையாயது.'கனவு என்பது துாங்கும்போது வருவதல்ல. நம்மை துாங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள், அதிலிருந்து எண்ணங்கள் வெளிப்படும். எண்ணத்திலிருந்து செயல்கள் பிறக்கும். நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்று பெரியவர்கள், 90 ஆண்டுகளாக கண்ட கனவு எண்ணங்களாகி, 1947ல் செயல் வடிவம் பெற்றது.'உங்களுக்கு இறக்கைகள் உள்ளன தவழ முயற்சிக்காதீர்கள்; பறக்கக் கற்றுக் கொள்ளுங்கள் உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.'இது, அவர் எழுதிய கவிதை. புத்தகங்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். கண்ணீரை துடைப்பதற்கும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் துணையாக இருக்கும்...' என்றார், அப்துல் கலாம்.***- நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !