பொறுமை, பெருமை தரும்!
பொறுமையை இழப்பதால், ஏற்படும் விபரீதங்களை அளவிட முடியாது. விரும்புகிறோமோ இல்லையோ... பிடிக்கிறதோ இல்லையோ... வேறு வழியில்லை, இருக்கும் சிறிதளவு நிம்மதியையாவது தக்க வைக்க வேண்டுமென்றால், பொறுமையை கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். அனைத்தும் உணர்ந்த ஆன்றோர் கூட, பொறுமையை கடைப்பிடித்து இருக்கின்றனர் எனும்போது, நாம் எந்த மூலை...போதிசத்துவர், ஒரு காட்டெருமையாக பிறந்திருந்த நேரம் அது. அந்த காட்டெருமையின் பெரும் வடிவத்தையும், பலத்தையும், பளபளத்த அதன் கொம்புகளையும் கண்டு, மற்ற மிருகங்கள் எல்லாம் மிகவும் பயந்தன.அதற்காக, போதிசத்துவர், மறந்தும் கூட, தன் ஆற்றலை காண்பிக்கவோ அல்லது, 'நான் யார் தெரியுமா?' என்பதை போலவோ நடந்து கொள்ளவில்லை; மிகவும் சாதுவாக இருந்தார்; பொறுமையின் இருப்பிடமாகவே திகழ்ந்தார்.இருந்தாலும், போதிசத்துவரின் பொறுமையை சோதிப்பதை போல, ஒரு குரங்கு, எப்போதும் அவரை சீண்டியபடியே இருந்தது. காட்டெருமையின் முதுகில் ஏறி, சவாரி செய்யும்; வாலை பிடித்து முறுக்கும்; கொம்புகளைப் பிடித்து ஆட்டும்; காதுகளில் விரல்களை விட்டு குடையும்; விரல்களால் கண்களை குத்தும்.அது என்ன செய்தாலும், காட்டெருமையாக பிறந்திருந்த, போதிசத்துவர், அதன் செயல்களை எல்லாம் பொறுத்துக் கொண்டார். எந்த வகையிலும் தன் கோபத்தைக் காட்டவில்லை. அவர் பொறுமையாக இருக்கலாம்; தேவர்களால் பொறுமை காட்ட முடியவில்லை. போதிசத்துவரிடம், 'கருணாமூர்த்தியே... பொல்லாத குரங்கு, இந்த பாடு படுத்துகிறது... மிகவும் அமைதியாக இருக்கிறீர்களே... தாங்கள் அதை தண்டிக்கக் கூடாதா... ஒருவேளை, தாங்கள் அதை கண்டு பயப்படுகிறீர்களா...' எனக் கேட்டனர், தேவர்கள். 'அந்த குரங்கை கண்டு பயப்படவில்லை. என் தலையை, ஓர் ஆட்டு ஆட்டினால் போதும்; குரங்கு, சிதறி போய் விடும். இருந்தும், அது, எனக்கு செய்யும் தொந்தரவுகளை பொறுத்துக் கொள்கிறேன். காரணம்...'தங்களை விட பலசாலிகள், தங்களுக்கு தீங்கு செய்யும் போது, வேறு வழியில்லை என்பதால் பொறுத்துக் கொள்கின்றனர். ஆனால், நம்மை விட பலம் குறைந்தவர்கள், தீங்கு செய்தால், அதைப் பொறுத்துக் கொள்வது தானே பொறுமை... அதனால் தான், நான் பொறுமையாக இருக்கிறேன்...' என்று பதில் சொன்னார், போதிசத்துவர்.அவரின் பொறுமையை, மனமுவந்து பாராட்டினர், தேவர்கள்.பொறுமை என்றும் போற்றுதலுக்கு உரியது. எவ்வளவோ உயர்ந்தவர்கள் எல்லாம் பொறுமையாக இருந்து வழிகாட்டி போயிருக்கின்றனர். பொறுமையாக இருப்போம்; ஒருபோதும் கெட்டுப் போக மாட்டோம்.பி.என்.பரசுராமன் ஆலய அதிசயங்கள்!சென்னி மலை முருகனுக்கு, அபிஷேகம் செய்யும் தயிர், புளிப்பதில்லை.