உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —எனக்கு, 35 வயதாகிறது. பள்ளிப் படிப்பை முடித்தவுடன், 19 வயதில், திருமணம் செய்து வைத்தனர். திருமணமான இரண்டாவது ஆண்டே, மகன் பிறந்தான். என் கணவர் கட்டட வேலை பார்க்கிறார். நானும், கூலி வேலைக்கு செல்கிறேன். மாமியாரும், நாத்தனாரும் எங்களுடன் உள்ளனர். மாமனார் இறந்து விட்டார். கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சொந்த வீட்டிலேயே அவ்வப்போது பணத்தை திருடுவார்.மகனை நன்றாக படிக்க வைப்பதற்காக, அவனுக்கு, 2 வயது ஆன உடனே, சிறுக சிறுக பணம் சேமிக்க ஆரம்பித்தேன். சேமிப்பு மற்றும் அப்பா கொடுத்த தொகையையும் சேர்த்து, பெட்டியில் வைத்திருந்தேன்.ஒருநாள், வேலைக்கு சென்று திரும்பியபோது, பெட்டி திறந்திருக்க, பணம் காணவில்லை. பதறி, மாமியாரிடம் கேட்டேன். 'எனக்கு எதுவும் தெரியாது...' என்று கூறினார்.கணவர் வந்ததும், பணம் காணாமல் போனதை கூற, மாமியாரும், நாத்தனாரும், பேய் ஆட்டம் ஆடி, என்னை தரக்குறைவாக பேசினர்; இரவு என்றும் பாராமல், வீட்டிற்கு வெளியே தள்ளி, கதவை சாத்தினர். என் கணவரும் தடுக்கவில்லை. வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்து, விடிந்ததும், மகனுடன், தாய் வீட்டிற்கு வந்து விட்டேன். என் பெற்றோர், எவ்வளவோ சமாதானம் கூறியும், புகுந்த வீடு செல்ல மறுத்து விட்டேன். என் கணவர், வேறொரு திருமணம் செய்து கொண்டார்.ஒரு கம்பெனியில், டிரைவராக இருக்கும், தந்தையின் உதவியுடன், மகனை படிக்க வைக்கிறேன். இப்போது, அவன், 10ம் வகுப்பு படிக்கிறான்.தற்சமயம், கட்டட கூலி வேலைக்கு செல்வதை விட்டு, மருத்துவமனை ஒன்றில் ஆயாவாக சேர்ந்துள்ளேன்.என் வாழ்க்கை இப்படியே போய் விடுமா... என் பெற்றோருக்கு பின், எங்கள் நிலை என்ன ஆகுமோ என்று பயமாக இருக்கிறது.வாழ்க்கையில் உயர விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —இன்றைய இணைய தலைமுறை பெண்கள், கல்வி சான்றிதழ் முதல், அரசு வழங்கிய ஆதார் அட்டை, ரேஷன் கார்டு வரை, அனைத்து, 'ரிக்கார்டு'களையும், தன் பொறுப்பில், பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். இவற்றுக்கும் மேலாக, நிலையான தொலைபேசி எண் உள்ள, சாதாரண கைபேசி கட்டாயம். எல்லா ஆவணங்களையும் ஒளிநகல் எடுத்து வைத்திருப்பது, கூடுதல் சிறப்பு. மகளே... இனி, செய்ய வேண்டியதை பட்டியலிடுகிறேன்...* துணை ஒப்பந்ததாரர் ஆகி, கட்டடம் கட்டும் பணிகளை, ஆட்கள் வைத்து செய்து, பணம் சம்பாதிக்கலாம்* உனக்கு வயது, 35 ஆகிறது. மனதையும், உடலையும் கேள், மறுமணம் தேவையா என்று. தேவை என்று தோன்றினால், பெற்றோரையும், மகனையும் கலந்து பேசி, ஒரு முடிவுக்கு வா. குடிப்பழக்கம் இல்லாத ஆண் கிடைத்தால், மறுமணம் செய்து கொள்* மறுமணம் தேவையில்லை என, நீ முடிவெடுத்தால், மகனின் படிப்பில் முழு கவனம் செலுத்து. அடித்தட்டு மக்களில் சிலர், அபூர்வமாய் படித்து, வேலைக்கு போய் விடுகின்றனர். பெரும்பாலானோர், அறியாமையிலும், வன்முறையிலும், சமூகவிரோத செயல்களிலும் அமிழ்ந்து கிடக்கின்றனர். மகனுக்கு, கல்வியின் முக்கியவத்துவத்தை வலியுறுத்தி, அவனை உள்ளும், புறமும் மேம்படுத்து* பள்ளி படிப்பை முடித்திருக்கும் நீ, மேற்கொண்டு தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் படிக்கலாம். உனக்கு மேலே படிக்க விருப்பம் இருந்து, மகனும் சம்மதித்து, உன் பெற்றோரும் உனக்கான கல்வி செலவை செய்ய விரும்பினால், பி.எஸ்சி., நர்சிங்கோ, டிப்ளமோ இன் நர்சிங்கோ, கல்லுாரியில் சேர்ந்து படி * கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பிரிவில், உனக்கு எளிதாக சேர அனுமதி கிடைக்கும். நர்சிங் படித்து முடித்து விட்டால், நீ ராணி. உன் வாழ்க்கையும், மகனின் வாழ்க்கையும், உயரிய நிலைக்கு மாறி விடும். செவிலியர் நங்கை பணி, சில விஷயங்களில் மருத்துவர் பணியை விட உயர்வானது. நோயாளிகளுக்கு செய்யும் சேவை, தெய்வத்திற்கு செய்யும் சேவைக்கு சமமானது.'வீழ்வேன் என்று நினைத்தாயோ...' என, வானம் வெடிக்க குரல் உயர்த்தி, வெற்றிக்கான போர் பிரகடனம் செய்; வெற்றி உனதே!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !