அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரி —என் வயது: 65; இல்லத்தரசி. அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற கணவரின் வயது: 70. எங்களுக்கு இரண்டு மகன்கள். அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியில் உள்ளான், மூத்த மகன். திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. மனைவி, இரண்டு மகள்களுடன் அமெரிக்காவிலேயே வசிக்கிறான். வாய் துடுக்கானவள், மூத்த மருமகள். சென்ற ஆண்டு, எங்கள் செலவில், மூத்த மகன் குடும்பத்தை பார்க்க அமெரிக்கா போனோம். வார்த்தைகளாலேயே எங்களை மானசீகமாக கொன்று விட்டாள், மூத்த மருமகள். மூத்த மகன் வீட்டில் நடப்பது, மதுரை மீனாட்சி ஆட்சி. வீட்டு சமையலிலிருந்து, குழந்தைகள் வளர்ப்பு வரை, எல்லாம் என் மகன் தான்.இளைய மகன் படித்து முடித்து, சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறான். இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு, நான்கு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.நானும், கணவரும் சொந்த வீட்டில் வசிக்கிறோம். கணவரின் ஓய்வூதியத்தில் சிறப்பாகவே வாழ்ந்து வருகிறோம். இளைய மகனின் திருமணத்தின் போது, மூத்த மருமகளுக்கு, 25 பவுன் நகையும்; இளைய மருமகளுக்கு, 25 பவுன் நகையும் கொடுத்தோம்.தினமும் மகன்களிடம் ஒருமுறையாவது போனில் பேசி விடுவேன். மூத்த மருமகளோடு ஒப்பிடுகையில், இளைய மருமகள் சொக்கத் தங்கம். சிறப்பாக சமைப்பவள், எனக்கு நிறைய சமையல் குறிப்புகள் கொடுத்து அசத்துவாள்.கோவிலுக்கு சென்றால், இரண்டு மகன்களின் குடும்பங்களும் நன்றாக இருக்க, வேண்டிக் கொள்வேன்.சில வாரங்களுக்கு முன், மூத்த சம்பந்தி போனில் பேசினார். அவருடைய மகனுக்கு ஆறு மாதங்களுக்கு முன்தான் திருமணம் செய்து வைத்தார்.திருமணத்துக்கு எங்களுக்கு முறையான அழைப்பில்லை. மேலும், 'கொரோனா' காரணமாக, நாங்கள் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. என் மகன்களும், திருமணத்துக்கு வரவில்லை.நலம் விசாரித்து விட்டு, 'அக்கா... உங்க மூத்த மகன், குடும்பத்தோடு அமெரிக்காவில் இருக்கிறாரே... மகன் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என, உங்களுக்கு ஆசை இல்லையா?' என்றார்.'எனக்கு இருக்கலாம். அவன் பார்க்கும் வேலை, இந்தியாவில் இல்லை. அதனால், அமெரிக்காவில் இருக்கிறான். என் வசதிக்காக, அவனுடைய சவுகரியத்தை நான் கெடுக்க வேண்டுமா...' என்றேன்.'அக்கா... 10 ஆண்டுகள், என் மருமகன், அமெரிக்காவில் குப்பை கொட்டினது போதும். அவர்களை இந்தியாவுக்கு வரவழைத்து விடுங்கள். வேலை இல்லாவிட்டாலும் நான் கஞ்சி ஊத்திக் கொள்கிறேன்...' என்றார்.'அதை நீங்களே அவங்ககிட்ட சொல்லுங்க...' என்றேன்.'இல்லை, இல்லை... நான் சொன்னா மருமகன் கேட்க மாட்டார். நீங்க தான் ஒரு நாடகம் ஆடணும். உங்களுக்கோ அல்லது கணவருக்கோ, 'சீரியஸ்'ன்னு பொய் சொல்லி, மருமகன் குடும்பத்தை இந்தியாவுக்கு வரவழைங்க. வந்தவங்களை அப்படியே கூடைக்குள்ள அமுக்கி போட்டுருவோம்...'இங்கேயே மருமகனுக்கு ஒரு, 'டிபார்ட்மென்டல் ஸ்டோர்' ஆரம்பிச்சு தந்திடுறேன். உங்க பேத்திகளோடு நீங்க சந்தோஷமா இருக்கலாம், என்ன சொல்றீங்க?' என்றார்.எனக்கும் ஒரு நப்பாசை. ராஜ வாழ்க்கை வாழ்பவர்களை, நம் சுயநலத்துக்காக, இந்தியாவுக்கு வரவழைக்க வேண்டுமா என்கிறது, இன்னொரு மனம். என்ன செய்யலாம் சகோதரி, உங்கள் ஆலோசனைக்காக காத்திருக்கிறேன்.— இப்படிக்கு, அன்பு சகோதரி.அன்பு சகோதரிக்கு —சில விஷயங்களை, தீர ஆராய்வது நல்லது!1. பத்து ஆண்டுகளாக சும்மா இருந்துவிட்டு, திடீரென, உன் சம்பந்தி, மருமகனை இந்தியாவுக்கு நிரந்தரமாய் இழுக்க விரும்புவது ஏன்... புதிதாய் திருமணமான மகன், மருமகளுடன் ஏதேனும் உறவு சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். அதனால், மகள் குடும்பத்தையாவது தன்னுடன் இணைத்துக் கொள்வோம் என, திட்டமிடுகிறாரோ என்னவோ...2. தனக்கோ, தன் மனைவிக்கோ உடல் நலம் சரியில்லை எனக் கூறி, மருமகனை இந்தியாவுக்கு வரவழைக்க வேண்டியதுதானே... எதற்கு உனக்கோ, உன் கணவருக்கோ உடல் நலம் சரியில்லை எனக் கூறி, வரவழைக்க வேண்டும்... வருபவர்கள், உண்மை தெரிந்து சண்டை போட்டால், உன்னிடம் போடட்டும் என்கிற நல்லெண்ணமா, உன் சம்பந்திக்கு.3. துாரத்தில் இருந்தே உன் மூத்த மருமகளின் வெம்மை தாங்க முடியவில்லையே... பக்கத்தில் கூட்டி வந்து வைத்தால், உன்னை, உன் கணவரை சுட்டெரித்து விடுவாள்.4. உன் இரு மகன்கள் குடும்பத்துடன், தினம், 'வீடியோகால்' மூலம் பேசிக்கொண்டு தானே இருக்கிறாய். அந்தளவு உறவு பரிமாற்றம் போதுமானது. அம்மாவானாலும், பிள்ளையானாலும் வாயும், வயிறும் வேறு என்பர். உன் மூத்த மகனுக்கு, மனைவியை பிடித்துதானே அலுவலக பணியுடன், வீட்டு வேலையை சேர்த்து செய்கிறான்.அவர்களுக்குள் சந்தோஷமாகதானே இருக்கின்றனர். அருகில் இருந்து முட்டி மோதி கொள்ளாமல், பாதுகாப்பான துாரத்திலிருந்து கைபேசி மூலம், கை குலுக்கி கொள்வது உத்தமமானது.5. உன் சம்பந்தி, மகள் - மருமகன் - பேத்திகளின் அசுரதேவைகளை நிறைவேற்றி தருவது, குதிரை முட்டை. இந்தியா வந்த ஒரே மாதத்தில் உள்நாட்டு போர் ஆரம்பித்துவிடும்.6. வேண்டுமானால், உன் மகனுக்கு போன் போட்டு, 'உன்னை இந்தியாவுக்கு நிரந்தரமாய் அழைக்கிறார், மாமனார். எங்களுக்கு உடல்நிலை சரியில்லை என, பொய் கூற சொல்கிறார். நீ விரும்பினால் இந்தியா வா அல்லது அமெரிக்க வாழ்க்கை அலுத்து போகும்போது வா.'உன் மாமனாருடன் அன்பாய் பேசி, அவரது மகனால் காயப்பட்டிருந்தார் என்றால், ஆறுதல் வார்த்தை கூறு. இன்னென்ன காரணங்களுக்காக உன்னால் இப்போது இந்தியா வர முடியாது என்பதை ஆற அமர விளக்கி சொல்...' எனக் கூறு.7. ஆண்டிற்கு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மூத்த மகன் குடும்பத்தை இந்தியாவுக்கு வரசொல்லி, உன் வீட்டில், 10 நாள், சம்பந்தி வீட்டில், 10 நாள் தங்க சொல்.8. அமெரிக்க வாழ் பேத்திகளுக்கு, தினம் ஒருமணி நேரம், 'டியூஷன்' வைத்து, தமிழ் கற்று கொள்ள சொல்.9. மாதம் ஒருமுறை, சின்ன மகன் குடும்பத்தை, உன் வீட்டுக்கு வரவழைத்து அளவளாவு. விருந்து சமைத்து போடு.10. நீயும், கணவரும், மீதி ஆயுளை அர்த்தப்பூர்வமாய் செலவழியுங்கள். மகன்களின் சந்தோஷங்களையே பெரிதாய் விரும்பும் தாயுள்ளமே, நீ வாழ்க வாழ்க!— என்றும் பாசத்துடன் சகுந்தலா கோபிநாத்