மழைக்கால முன்னெச்சரிக்கைள்!
மழை காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:ஈர விரலோடு மின் சுவிட்சை போடக் கூடாது. தண்ணீரும், மின்சாரமும் எதிரிகள். எனவே, வீட்டிலுள்ள மின் இணைப்புகளில் ஏதாவது பழுது ஏற்பட்டிருந்தால், மழைக் காலத்துக்கு முன்பே சரி செய்து விடுங்கள். எல்லாவிதமான மின் சாதனங்களையும், ஈரம் படாமல் மூடி வைத்து விடுங்கள்* சுவர்களில் விரிசல்கள் இருந்தால், அவற்றை சரிப்படுத்தி விடுங்கள். முக்கியமாக இந்த விரிசல்கள் மேற்கூரையில் இருந்தால், உடனடி கவனம் தேவை. ஏனென்றால், நீர்க்கசிவு அதன் வழியாக வீட்டுக்குள் வரலாம்* கரையான்களின் ஆதிக்கம் மழைக்காலத்தில் அதிகமாக இருக்கும். காரணம், மழை காலத்தில் சுவர்கள் நனைந்திருக்கும். இதனால், உள் நுழையும் கரையான்கள் மரச்சாமான்களை அரிக்கத் துவங்கும். வீட்டில் ஒரு கரையானை பார்த்தால் கூட, உடனடியாக அதற்கு எதிரான மருந்தை அடியுங்கள். மரத்தால் ஆன தரை தள வீடு என்றால், மேலும் முன்னெச்சரிக்கை தேவை* சாரல் உள்ளே வரக்கூடாது என்பதற்காக, மழைக் காலத்தின்போது ஜன்னல்களையும், கதவுகளையும் மூடியே வைத்திருப்போம். இதன் காரணமாக அறைக்குள் ஒருவித நாற்றம் உண்டாகலாம். அவ்வப்போது கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வையுங்கள். சூரிய வெளிச்சம் உள்ளே படட்டும்* வேப்பிலைகளை அறையில் வைத்தால், துர்நாற்றம் குறையும்* தரையில் கம்பளம் விரித்திருப்பவர்கள், மழை காலத்தில் அவற்றை நீக்கிவிடுவது நல்லது. இல்லையென்றால் ஈரப்பதமும், அழுக்குகளும் அவற்றில் படிந்து துர்நாற்றத்துக்கு வழிவகுக்கும்; கிருமிகள் பரவவும் வாய்ப்புண்டு* அலமாரிகளில் அவ்வப்போது காற்றோட்டம் இருக்க வேண்டும். நாப்தலின் உருண்டைகளை இவற்றில் வையுங்கள். துர்நாற்றம் குறைவதோடு, கரையான்களின் நடமாட்டமும் குறையும். அதுவும் மர அலமாரி என்றால் இது மிக மிக அவசியம்* அலமாரிகளில் நாளிதழ்களுக்கு கீழே வேப்பிலையை பரப்பி, அதன் மீது துணிகளை வைக்கலாம்* மிதியடிகளை அதிகமாக பயன்படுத்துங்கள். அப்போது தான் வீட்டுக்குள் தண்ணீரும், சேறும் சேராது. அதேசமயம் மிதியடிகளை அடிக்கடி தட்டி அல்லது நனைத்து உலர்த்தி காய வையுங்கள்* சுவருக்கும் சோபா அல்லது கட்டிலுக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருக்கட்டும். அப்போதுதான் சுவர்களின் ஈரப்பதம் சோபாவையோ, கட்டிலையோ பாதிக்காது* மரச் சாமான்களை ஈரத் துணியால் துடைக்கும்போது பர்னிச்சருக்கு பாதிப்பு உண்டாகலாம். எனவே, அவற்றை சுத்தப்படுத்த உலர்ந்த துணிகளை மட்டும் பயன்படுத்துங்கள்* கதவு, ஜன்னல் போன்றவை ஈரப்பதம் காரணமாக கொஞ்சம் விரிவடையலாம். இதன் காரணமாக அவற்றை மூடுவது கடினமாக மாறலாம். எனவே, உராயக் கூடிய பகுதிகளில் சிறிது எண்ணெய் அல்லது மெழுகை பூசி வைக்கலாம்* தண்ணீர் தேங்கினால், கொசுக்களுக்கு கொண்டாட்டம். எனவே, தண்ணீர் தேங்காமல் ஆங்காங்கே வடிகால்களை ஏற்படுத்துங்கள்* மழைக்காலங்களில் வீட்டுக்கு பெயின்ட் அடிப்பதை தவிர்த்திடுங்கள். ஏனென்றால், காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், பெயின்ட் விரைவில் காயாது* மழை காலத்தில் காபி, டீ போன்ற பானங்களை அதிகம் குடிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். அளவு தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த வகை பணி செய்பவராக இருந்தாலும், தண்ணீர் நிறைய குடியுங்கள்* பச்சைக் காய்கறிகள், காய்கறி சாலட் போன்றவற்றை வெளியிடங்களில் வாங்கி உட்கொள்ள வேண்டாம்* மழையில் நனைவதால், சிலருக்கு சருமநோய், ஜலதோஷம் போன்றவற்றை உண்டாக்கலாம். இந்த பாதிப்பு எதுவும் உங்களுக்கு வராத நிலை இருந்தால் மட்டும் மழையை சிறிது நேரம் அனுபவியுங்கள்* மழை காலத்தில், வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழையும் போது, நீங்கள் அதிக அளவு தொற்று கிருமிகளை சுமந்து செல்கிறீர்கள். காரணம், சாக்கடை நீர், மழை நீரோடு கலந்து உங்கள் கால்களை நனைத்திருக்கலாம். எனவே, வீட்டுக்குள் நுழைந்தவுடனே கை, கால்களை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்* வெளியிலிருந்து உள்ளே நுழைந்ததும் உடை மற்றும் காலணிகளை உலர்ந்த பகுதியில் வையுங்கள்* சிலருக்கு சுவரில் சாய்ந்து கொள்ளும் பழக்கம் இருக்கும். மழை காலத்தில் இதை தவிர்க்க வேண்டும். சுவரின் ஈரப்பதம் உங்களையும் பாதிக்கும்* மழை காலத்தில் ஒருமுறை குளிப்பதற்கே பலர் யோசிப்பர். ஆனால், மழை காலத்தில் தினமும் இருமுறை குளித்தல் நல்லது. பச்சை தண்ணீர், வெந்நீர் என, உங்கள் விருப்பம் போல் குளிக்கலாம்* வைட்டமின் சி மாத்திரைகளை உட்கொள்வதால், உங்கள் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும்* கைகளால் உங்கள் கண்களை தொடுவதை தவிருங்கள். காரணம், விரல்களிலுள்ள தொற்றுக் கிருமிகள் கண்களுக்கு பரவி, கண் நோய்உண்டாக்கக் கூடும்* மழை காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அப்படியே விட்டு விடாமல், மருத்துவரை ஆலோசிப்பது நல்லது* சமையலறையில் காற்றோட்டம் இருக்க வேண்டும். எதிரெதிரிலோ, பக்கவாட்டுகளிலோ ஜன்னல்கள் இருந்தால், தினமும் சிறிது நேரமாவது அவற்றை திறந்து வையுங்கள்* முடிந்தவரை சமையலறை ஈரமில்லாமல் இருக்கட்டும். மேடை நன்கு சுத்தம் செய்யப்பட்ட நிலையிலிருப்பது நல்லது. உணவுப் பொருட்களை மூடியே வைக்கவும். இவையெல்லாம் பொதுவான விதிகள். என்றாலும், மழை காலத்தில் இவற்றை மேலும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்* மழை காலத்தில், சமையலறையில் ஒருவித துர்நாற்றம் நிலவ வாய்ப்புண்டு. வாசனை பொருள் சேர்க்கப்பட்ட உப்பு அல்லது நாப்தலின் உருண்டைகளை சமையலறை அலமாரிகளின் கீழ் பகுதியில் போட்டு வைத்தால், துர்நாற்றம் வராது* பருப்புகளை நன்கு உலர வையுங்கள். பின், அவற்றை காற்றுப் புகாத ஜாடிகள் அல்லது டப்பாக்களில் வையுங்கள். அப்போதுதான் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை அவற்றில் பரவாமல் இருக்கும்* சில துளிகள் விளக்கெண்ணெயை, பருப்புகள் அடங்கிய பெட்டிக்குள் தடவி வைத்தால், பூச்சிகள் அண்டாது* தரைப்பகுதியில் ஆங்காங்கே துளைகள் இருந்தால், அவற்றை சிமென்ட் அல்லது மண்ணால் அடைத்து விடுவது நல்லது. அப்போதுதான் அவற்றின் வழியாக பூரான், கரப்பான் பூச்சி போன்றவை வராது. அப்படி அடைத்தபின், அவற்றின் மீது கொஞ்சம் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிப்பது நல்லது* மழை காலத்துக்கு சற்று முன்பே, சமையலறை பொருட்கள் வைத்துள்ள டப்பாக்கள் மற்றும் ஜாடிகளை சூரிய வெளிச்சத்தில் கொஞ்ச நேரம் உலர வையுங்கள்* சிறு மணல் பாக்கெட்களை சமையலறையில் ஆங்காங்கே வைத்தால், அவை ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும்.மா. வர்ஷா