உள்ளூர் செய்திகள்

உயிரோடு உறவாடு... (23)

முன்கதை சுருக்கம்: ரிஷியை எதுவும் செய்யாமல், அமைதியாக இருக்கும்படி முனிராஜிடம் கூறினார், ஜனா. தமிழ்ச்செல்விக்கு போன் செய்த சுகுமார், ரிஷியுடனான நட்பை துண்டிக்குமாறு கூறினான். இந்நிலையில், 'பீச்'சில், மைத்ரேயியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, 'வாட்ஸ் - ஆப்'பில் வந்த செய்தியை பார்த்த ரிஷிக்கு, 'பகீர்' என்றது - 'வாட்ஸ் ஆப்' திரையில், ரிஷியின் அம்மா சிவகாமி, ஆஸ்பத்திரி பெட்டில், காலில் கட்டுடன் படுத்திருக்கிறாள். கீழே, 'உடன் புறப்பட்டு வரவும் - அம்மாவுக்கு ஆக்சிடென்ட்' என்கிற செய்தி. புகைப்படம் எடுத்து போட்டிருந்தார், அவன் மாமா.ஏராளமான, 'மிஸ்டு கால்கள்' இருந்தன. 'சைலன்ட் மோடில்' போட்டிருந்த போனை, 'பீச்'சுக்கு வந்த பிறகே, 'மோட் சேஞ்ஜ்' செய்தது நினைவுக்கு வந்தது. அதை நினைத்து தனக்குதானே தலையில் அடித்துக் கொண்டான், ரிஷி.''என்னாச்சு?'' என்று கேட்டாள், மைத்ரேயி.''ஒண்ணு மாத்தி ஒண்ணு, தப்பாவே நடக்குதே...''''தப்பாவா... என்ன சொல்றே?''''எங்கம்மாவுக்கு விபத்து. கால்ல கட்டோட ஆஸ்பத்திரியில இருக்காங்க. பலமுறை போன் பண்ணியிருக்கார், மாமா. 'சைலன்ட் மோட்'ல போட்டிருந்ததால காதுல விழலை. இங்க வந்த பிறகும், 'கால்ஸ்'ல கவனம் போகல... இப்ப, 'வாட்ஸ் ஆப்'ல படத்தோட, 'மெசேஜ்' அனுப்பியிருக்கார், என் மாமா.''''மாமாவா... உங்க அப்பா இல்லையா?''''அப்பாவா... அவர் போய் சேர்ந்து பல வருஷமாச்சு. அம்மா, ஒரு உயர்நிலை பள்ளியில டீச்சர்.''''இப்ப உடனே போகணுமா?''''ஆமாம்... அப்புறம் மாமியோட உங்க, 'மீட்டிங்'கை, ஊர்ல இருந்து நான் வந்த பின் வெச்சுக்கலாமா?''''ஒண்ணும் பிரச்னையில்லை. இதுதான் இப்ப முக்கியம். ஊருக்கு போயிட்டு அம்மா, 'ஹெல்த்' பத்தி போன் பண்ணுங்க.''''ஷ்யூர்...'' என, சொல்லிக் கொண்டே பைக்கை நோக்கி நடந்தான், ரிஷி.''ஆமா, அம்மா இப்ப எந்த ஊர்ல இருக்காங்க?'' அவள், உடன் நடந்து வந்தபடியே கேட்டாள்.''என் சொந்த ஊர் கோயம்புத்துார். படிச்சது, வளர்ந்ததெல்லாம் அங்கதான். ஓ.கே., பை...''சீட்டில் ஏறி அமர்ந்து, இரும்புச் சட்டியை மாட்டி, 'கிக் ஸ்டார்ட்' செய்தான். அந்த இரும்புக் குதிரை செருமியபடி ஓடத் துவங்கியது.பைக்கை ஓரமாக நிறுத்தி, மேலே கவரை போட்டு மூடுவதை பார்த்தாள், மாமி.''என்ன ரிஷி... எதுக்கு மூடறே, ஊருக்கு போகப் போறியா?'' என்றார்.''மாமி, உங்க, 'ஐக்யூ' எப்பவுமே அபாரம். சரியா சொல்லிட்டீங்க...'' என்றவன், 'வாட்ஸ் - ஆப்'பை திறந்து, அம்மா போட்டோவை காட்டி விபரம் சொன்னான்.''அப்ப இப்பவே கிளம்பறியா?''''ஆமா மாமி... கிடைக்கிற பஸ்ல ஏறி போய்கிட்டே இருக்க வேண்டியது தான்.''''சீரியஸா ஏதும் இல்லையே?''''இனிமே தான் மாமாகிட்ட பேசணும். மைத்ரேயியை பார்த்து, விபரத்தை சொன்னேன், மாமி. ரொம்ப சந்தோஷப்பட்டா. அப்புறம், அந்த வீட்லயே தொடர்ந்து இருக்கப் போறாளாம். அந்த ப்ரெண்ட் காலி பண்ணிட்டு போயிட்டானாம்.''''அப்ப, அவ வரையில வீட்டு பிரச்னை தீர்ந்ததுன்னு சொல்.''''இப்போதைக்கு அப்படி தான்... சரி மாமி, நான் உடை மாத்திட்டு கிளம்பறேன்,'' என்றபடியே மாடிப் படிகளில் ஏறினான். ஐந்து நிமிடத்தில் முதுகில் பேக்குடன் துள்ளிக் கொண்டு இறங்கினான்.ஹாலில் புத்தகம் படித்தபடி இருந்த நடராஜன், ''பார்த்து போயிட்டு வா ரிஷி... போன் பண்ணு,'' என்று சற்று உரத்த குரலில் சொன்னார்.''சரிங்க சார்...'' என்றபடியே தெருவில் இறங்கி, ஆட்டோவை பிடித்தான். அதில் அமர்ந்த நொடி, ''மாமா, நான் இப்ப கோயம்புத்துார் வந்துகிட்டிருக்கேன். ஆமா, அம்மாவுக்கு வலியெல்லாம் பெருசா இல்லையே?''''நீ நேர்ல வந்து பார் தெரியும்.''''எப்படி மாமா இப்படி ஆச்சு?''''சமையல் கட்டுல, புதுசா கார்பெட் வாங்கி போட்டிருக்கா. அது தண்ணி பட்டா உறிஞ்சுக்காது போல. வேகமா வந்து காலை வைக்கவும், இழுத்து விட்ருச்சு. விழும்போது தண்ணி குடம் மேல கை பட்டு, அதுவும் கால் மேலயே விழுந்து, ஒரே களேபரம்.''''ப்ராக்சரா?''''ஆமாம்ப்பா... மூணு மாசமாவது ஓய்வுல இருக்கணும். நிற்கவும் முடியாது, நடக்கவும் முடியாது.''''என்ன மாமா இது... இப்படி கூடவா நடக்கும்?''''நேரம் நல்லா இல்லேன்னா, எப்படி வேணா நடக்கும். நீ சீக்கிரம் வா, உன்னை பார்த்தா உங்கம்மா கொஞ்சம் நார்மல் ஆயிடுவா,'' பேச்சை முடித்தார், மாமா.கோயம்பேடு நோக்கி போய்க் கொண்டிருந்தது, ஆட்டோ. அடுத்து, தமிழ்ச்செல்விக்கு போன் செய்தான், ரிஷி.''சொல்லுப்பா...'' என்றாள் சுரத்தேயில்லாமல்.''முதல்ல, நீ உங்கம்மாவுக்கு சீரியஸ்ன்னு போனே... நான் இப்ப எங்கம்மாவுக்காக போய்கிட்டு இருக்கேன். என்ன ஒரு ஒத்துமை பார்த்தியா?'' என்று, கோயம்புத்துார் சென்று கொண்டிருப்பதை காரண காரியங்களோடு சொல்லி முடித்தான். ''ஆமாம் ரிஷி... அதிகபட்சம், 15 நாள். நம் வாழ்க்கைல என்னென்னவோ நடந்துருச்சில்ல?'' தழைந்த குரலில் கேட்டாள், தமிழ்.''சரியா சொன்னே... சுஜித் சார், சுகுமார், மைத்ரேயின்னு புதுப்புது கேரக்டர்கள் அறிமுகம். நடுவுல ஆனந்த் சாரோட மரணம், ஜனா சாரோட சதி, முனிராஜ்ங்கிற ரவுடியோட சந்திப்புன்னு, நம் வாழ்க்கையிலதான் எவ்வளவு எதிர்பாராத விஷயங்கள்?''''உண்மைதான்... இதுல பல விஷயங்கள் நம்ப கைலயே இல்லை. வாழ்க்கை இழுத்துகிட்டே போகுது, நாமளும் ஓடறோம்... இல்ல?''''ஆமாம்... அப்புறம் தமிழ், நான் வர இரண்டு மூன்று நாள் ஆகலாம். என் விடுமுறை கடிதத்தை, 'மெயில்' பண்ணிடறேன். நீயும் எம்.டி.,யை பார்க்க நேர்ந்தா சொல்லிடு.''''அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ, அம்மாவ கிட்டயிருந்து கவனிச்சுக்கோ. பல மாசமா பிரிஞ்சுருக்கே. நீ அவங்க கூட இருக்கறதே ஒரு மருந்தா வேலை செய்யும்.''''ஷ்யூர்... எனக்கும் சொந்த ஊருக்கு போறோம்கற உடனேயே, ஒரு இனம் புரியாத சந்தோஷம். அப்புறம், ஒரு முக்கிய விஷயம், மைத்ரேயியை பார்த்து பேசிட்டேன். இப்ப அவளுக்கு, வீடு ஒரு பிரச்னையில்லை. அவளோட ப்ரெண்ட், அவனா ஒதுங்கி, அந்த ப்ளாட்ல இருந்துக்க சொல்லிட்டான்.''உன்ன பத்தியும், மாமி பத்தியும் சொன்னேன். 'அடடே... எனக்காக பேசக்கூட இரண்டு பேர் இருக்காங்களா'ன்னு ரொம்ப சந்தோஷப்பட்டா. உங்களை உடனே சந்திக்கவும் ஆசைப்பட்டா. அப்பதான் என் மாமாகிட்ட இருந்து, 'வாட்ஸ் ஆப்'ல செய்தி வந்தது. அதனால, ஊருக்கு கிளம்ப வேண்டியதா போச்சு. நான் சென்னை திரும்பியதும், மைத்ரேயியை நீ சந்திக்க வேண்டியிருக்கும்.''''அதுக்கென்ன... சந்திச்சுட்டா போச்சு.''''அப்புறம், முக்கியமான விஷயத்தை கேட்காம எது எதையோ பேசிகிட்டு இருக்கேன் பார்...''''அது என்னன்னு எனக்கு தெரியும்... சுகுமார் விஷயம்தானே?''''கரெக்ட்... நீ போன் பண்ணினியா, இல்ல அவரே பண்ணாரா?''''அவரே பண்ணார்... போன் பண்ணாருங்கறதை விட, போன்ல எனக்கு நல்லா அர்ச்சனை பண்ணாருன்னு சொல்லலாம்.''''அது தெரிஞ்ச விஷயம் தானே?''''போகப்போக எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல, ரிஷி.''''ஏன், ரொம்ப பேசிட்டாரா?''''ஆமா... உன்னை எதனாலயோ கொஞ்சம் கூட பிடிக்கல. உன் கூட நான் பழகக் கூடாதாம். வேலையையும் விட்டுடணுமாம்.''''நீ என்ன சொன்னே?''''எங்க சொல்ல விட்டாரு... இடையிலயே, 'கட்' ஆயிடுச்சு.''''சரி, என்ன செய்யப் போறே?''''நான் நானா இருக்கேன். இந்த மாதிரி, ஆணாதிக்கத்தை என்னால ஏத்துக்க முடியாது. என்னால மட்டுமல்ல, எந்த பெண்ணும் ஏத்துக்க மாட்டா,'' என்றாள்.''சுகுமாருக்கு நிறைய காம்ப்ளக்ஸ் இருக்கு... எல்லாம் அது படுத்தற பாடு...'' என்றான்.''அதே தான்... அவரை கேபிள் சுகுமார்னு தான் எல்லாரும் சொல்வாங்களாம். இப்ப, 'டிவி'ல என்னை பார்த்துட்டு, தமிழ்ச்செல்வியை கட்டிக்கப் போற சுகுமாரான்னு சிலர் கேட்டுட்டாங்களாம். மனுஷன் பொங்கிட்டாரு.''''கல்யாணத்துக்கு முன்பே இந்த பாடுன்னா, கல்யாணமாயிட்டா எப்படி தமிழ் சமாளிப்பே?''''தெரியல ரிஷி... அவரை நினைச்சாலே, 'மூட் ஸ்பாயில்' ஆகிடுது. எதுலயும் கவனம் செலுத்த முடியல.''''சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே... நிச்சயதார்த்தமும் முடிஞ்சுடுச்சு. பேசாம அவர் விருப்பப்படியே நடந்துக்கயேன்.''''அடப்பாவி... நீயா இப்படி சொல்றே?''''என்னால, உங்க உறவுல வருத்தம் உருவாகறத, நான் விரும்பல தமிழ்.''''லுாஸ் மாதிரி பேசாதே... நீ என்ன செய்தே... நீ பாட்டுக்கு இருக்கே. இவர், 'காம்ப்ளக்ஸ்'சுக்கு நீ காரணமில்லை. இதுல, உன் பங்கு கொஞ்சமும் இல்லை.''''அது எனக்கும் தெரியும். ஆனா, அது அவருக்கு புரியணுமே?''''பார்ப்போம்... நான் புரிய வைக்க முயற்சி செய்றேன். முடியலன்னா அப்ப பார்த்துக்கலாம்.''''வேண்டாம்... எனக்காக அவரோட மோதாதே. நான் ஒதுங்கிக்கறேன். நான் ஒதுங்கிட்டாலே எல்லாம் சரியாயிடும்.''''என்ன ரிஷி... நீ தியாகியாகி என்னை மாட்டிவிட பார்க்கறியா?''''தமிழ், என்ன சொல்றே... உன்னை நான் மாட்டி விடறேனா?''''ஆமாம்... இப்படி ஒதுங்கினா என்ன அர்த்தம்? நீ ஒரு பிரச்னையே இல்லை. அதாவது, நம் நட்பு ஒரு பிரச்னையே இல்லைன்னு, நான் சொல்றேன். தப்பு யார்கிட்ட இருக்கோ அவங்கதான் திருத்திக்கணும். நாம நம்மை திருத்திக்க, நம்மகிட்ட எந்த தப்பும் இல்லை, ரிஷி.''''கல்யாணம்ங்கறது ஒரு சந்தோஷமான சம்பவம். ஆனா, உன் கல்யாணம் அப்படி இல்லாம போயிடுமோன்னு எனக்கு பயமாயிருக்கு. அதனால தான், நான் ஒதுங்கிக்கறேன்னு சொன்னேன்.''''திரும்ப திரும்ப அதையே சொல்லாதே... என் வரையில சுகுமாரை விட நீ நல்லவன்; எனக்கு ரொம்ப பிரியமானவன். குழப்பமான சுகுமாருக்காக, உன்னை பிரியவோ, விட்டுத்தரவோ என்னால முடியாது. ஞாபகத்துல வெச்சுக்கோ.''''அப்ப என்னதான் முடிவு?''''போகப் போகதான் அது தெரியும். நீ இப்பவே இதை நினைச்சு வருத்தப்படாதே... உனக்கு இப்ப உன் அம்மாவோட, 'ஹெல்த்' தான் முக்கியம். ஒரு இரண்டு மூணு நாளைக்காவது சேனல், தமிழ்ச்செல்வி, மாமிங்கற எல்லாத்தையும் மறந்து, நல்ல அம்மா பிள்ளையா நடந்துக்கோ என் இனிய சினேகிதா, பை...''போனை, 'கட்' செய்தாள், தமிழ்.ஆட்டோவும் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தது.முப்பது நிமிடம் போனதே தெரியவில்லை. ஆட்டோவை அனுப்பி, கோயம்புத்துார் பஸ்சை தேடி ஏறி, டிக்கெட் வாங்கி அமர்ந்தான். பஸ் நிரம்பியிருந்தது. எல்லார் கைகளிலும், 'ஆண்ட்ராய்டு போன்' காதுகளில், 'இயர்போன்' என, உள்ளங்கைக்குள் பலவிதமான காட்சிகள்.யாராவது எதற்காவது கத்தினால் கூட காதில் விழாது. அப்படியொரு லயிப்பு. தன் கல்லுாரி பருவத்தில், சுஜாதா எழுதி, படித்த ஒரு கதைதான் ஞாபகம் வந்தது. அதில், 'வரும் நாளில், ஒரு மின் வலைக்குள் மனிதர்கள் சிக்கியது தெரியாமலே சிக்கி இருப்பர்...' என்று எழுதிய வரியும், ஞாபகம் வந்தது.புதிய நுாற்றாண்டில் குறிப்பாக, இந்த, 20 ஆண்டுகளில் தான் எவ்வளவு பெரிய மாற்றங்கள். மனிதர்களை ஒட்டுமொத்தமாய் மொபைல்போன் விழுங்கி, தனக்குள் வைத்துக் கொண்டிருப்பதை, ஒரு நிதர்சன காட்சியாக பார்த்தவன், இந்த மொபைல் போனை மையமாக வைத்தே, ஒரு, 'டாக் ஷோ'வை ஏன் நிகழ்த்தக் கூடாது என்கிற சிந்தனைக்குள் விழுந்தான்.பொதுவாக, இப்படி ஏதாவது தோன்றினால், உடனே தமிழிற்குதான் போன் செய்வான். அப்போதும் கை, மொபைல் போனை எடுத்தது. ஆனால், வேண்டாம் என்று கருதி அடக்கிக் கொண்டான். அப்போது, அதனிடம் மைத்ரேயியால் சிணுங்கல்.''சொல்லுங்க மைத்ரேயி...''''இப்ப எங்க இருக்கீங்க ரிஷி?''''கோயம்புத்துார் போற பஸ்ல... பஸ் புறப்படப் போகுது... என்ன விஷயம் மைத்ரேயி?''''சும்மாதான் கூப்பிட்டேன். எனக்கு தான் ஒரு நல்ல ப்ரெண்டா நீங்க கிடைச்சிருக்கீங்களே...''''மொத்தத்துல, மூன்று முறை தான் சந்திச்சிருப்பேன். அதுக்குள்ள நான் நல்ல ப்ரெண்டுன்னு தெரிஞ்சிடுச்சா? நானும் சராசரி மனுஷன் தான் மைத்ரேயி...''''எனக்கு சராசரியே போதும், ரிஷி. ரொம்ப, 'பர்பெக்ட்' கேரக்டர்களோட என்னாலயும் பழக முடியாது. நான் தான் சொன்னேனே, நான் ஒரு டைப்புன்னு...''''இதையெல்லாம் சொல்லத்தான் இப்ப கூப்பிட்டீங்களா?''''இல்லை ரிஷி. அதை எப்படி சொல்றதுன்னு தான் எனக்கு தெரியல.''''எதை?''''இங்க, 'ஹவுஸ் ஓனர்' இப்ப வாடகை வாங்க வந்தார். நான் தனியா இருக்கப் போறதா சொன்னேன். வீட்டுக்குள்ள இருந்ததால கொஞ்சம், 'கேஷுவல் டிரெஸ்'ல இருந்தேன். டேபிள் மேல, 'பீர்' பாட்டிலும் இருந்தது. என்னையும், அதையும் மாறி மாறி பார்த்த அந்த ஆள், 'உனக்கு கம்பெனி வேணுமா... நான் தரேன், வயசானவன்னு நினைக்காதே... என், 'ஆக் ஷனை' பார்த்துட்டு சொல்லு'ன்னு வழிய ஆரம்பிச்சான்.''ஓங்கி ஒரு அறை விட்டேன். 'உனக்கு, 24 மணி நேரம் தான் டைம். காலி பண்ணலை, சாமானை எல்லாம் துாக்கி வெளியில எறிஞ்சிருவேன்; என்னை படுக்க கூப்பிட்டதா சொல்லி, மானத்தை வாங்கிடுவேன்'னு மிரட்டிட்டு போயிட்டான்... நான் என்ன செய்யறது, ரிஷி?''மைத்ரேயி கேட்கவும், பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே வந்த பஸ், வேகமெடுக்கவும் சரியாக இருந்தது. ரிஷிக்குள் சிறிதாய் ஒரு புயல்!— தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !