உள்ளூர் செய்திகள்

சாண்டோ சின்னப்பா தேவர்! (4)

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —'பாம்பு பாம்பு...' என்று கத்தி, எல்லாரையும் கூப்பிட முயன்றவருக்கு, நாக்கு உலர்ந்து, தொண்டை அடைத்து, குரல் தொலைந்து போயிருந்தது.கிளையிலிருந்து, 'தொப்'பென்று கீழே விழுந்த நாகம், சின்னப்பா முன் படம் எடுத்து நின்றது. கம்பை எடுத்து தலையில் தட்டவும் அவகாசம் இல்லை. 'முருகா... எங்கதி அவ்வளவு தானா... சாயங்காலம் உமாராணி டாக்கீஸ்ல, டுபான் குயின் பாக்க போகலாம்ன்னு இருந்தேனே...' என்று நினைத்தவர், சற்றே பின் வாங்கினார். ஏதாவது, கற்கள் தென்படாதா என்று தேடினார். அதற்குள், நாய் முந்திக் கொண்டது. சினிமாவில் கூட அத்தனை வேகமான சண்டையைப் பார்த்ததில்லை.'அய்யோ... வேணாம்டா முருகா... அது பாம்பு; உடம்பெல்லாம் விஷம். நீ செத்துடுவே; போ ஓடிப் போ...' என்றபடியே அருகில் கிடந்த சிறிய கற்களை எடுத்து வீசினார். ஊஹூம்... பாம்பைக் கொன்று, தானும் நீலம் பாய்ந்து இறந்தது நாய்.சிறு பிள்ளை போல் கேவிக் கேவி அழுத சின்னப்பா, 'அட முருகா... இதுக்குத் தானா எம் பின்னாலேயே அலைஞ்சே... உங்கண்ணுக்கு மட்டும் எமன் வர்றது முன்கூட்டியே தெரியும்ன்னு சொல்வாங்களே... முருகா... படுபாவி ஆண்டவா! எதுக்கு இந்த அப்பாவி ஜீவனை அந்தப் பாடுபடுத்தினே... அது உசுரே போயிடுச்சே...' என்று அழுதார்.அன்று முழுதும், அவர் மனசு ஆறவே இல்லை. 'முருகா... இனி நானும், விலங்குகளோட பெருமையை நாலு பேர் கிட்ட கதையா சொல்றேன். அதற்கு, எனக்கொரு சந்தர்ப்பத்தை கொடுப்பியா...' என, மனம் உடைந்த நிலையில் இறைவனிடம் கோரிக்கை வைத்தவருக்கு, வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது.டூரிங் டாக்கீசில் சினிமா பார்ப்பது என்றால், சின்னப்பாவுக்கு ரொம்ப குஷி. கூலி வாங்கியதும் அவர் ஓடுகிற ஒரே இடம் டூரிங் டாக்கீஸ் தான். ஊமைப்படங்கள் மட்டுமே வெளியான காலக்கட்டம் அது. தரை டிக்கெட் அரை அணா; பெஞ்ச் ஓர் அணா. நாற்காலி ஒன்றரை அணா. சம்பளம் வாங்கும் முதல் தேதி சமயங்களில் அங்கு அவர் குத்தகைக்காரர்.கையில், தரை டிக்கெட்; வாயில் பீடி. வேட்டியைத் தூக்கி இடுப்பில் செருகி, உள் டிராயருடன் மணலில் அமர்வார். அன்றைய காலகட்டங்களில், ஒரு காசுக்கு, முழு தேங்காய்; ஒரு படி பொரி, ஒரு பைசா; அரைப்படி பொட்டுக் கடலை ஒரு பைசா. மொத்தச் செலவும் ஐந்து பைசாவுக்குள் அடங்கி விடும். கொறித்துக் கொண்டே படம் பார்ப்பார்; அதுவும் சண்டைப் படங்கள் என்றால், கேட்கவே வேண்டாம்.அதிலும், எட்டி போலோ, எல்மோ டங்கன் நடித்த படங்கள் என்றால் அவருக்கு வெறியே வந்துவிடும். மறுநாள், மில்லில் பஞ்சு பேல்களைச் சுற்றி வரும் கம்பித் தகடுகள் கேடயமாகும். நண்பர்களின் வசம் அதைக் கொடுத்து விட்டு, அட்டைக் கத்தியை வீசி, ஆக்ரோஷமாகப் பாய்ந்து குத்துவார் சின்னப்பா. குதிரை ஏறிப் பறக்க ஆசை பிறக்கும்; ஆற்றங்கரை கழுதைகள் அல்லல்படும். கிணற்று நீர் இறைக்கப் பயன்படும் தாம்புக்கயிறு, சின்னப்பாவை மரத்துக்கு மரம் தாவும் டார்ஜானாக மாற்றும்.சினிமா குறித்த பேச்சுகள், 1931ல் ஆரம்பித்தது. தினமணி உள்ளிட்ட நாளிதழ்கள் மற்றும் சினிமா பத்திரிகைகளில், நடிகர் - நடிகையர் தேவை என்ற விளம்பரங்களும், பிரபல திரைப்பட நிறுவனங்களின் முகவரிகளும் வெளிவர ஆரம்பித்தன. இவற்றைப் பார்த்து அந்நிறுவனங்களுக்கு, 'அன்புள்ள அய்யா, எனக்கு குஸ்தி தெரியும், குதிரைச் சவாரியும் பழகி வருகிறேன். கதைகளும் நன்றாக எழுதுவேன். எங்கள் வட்டாரத் தெருக்கூத்துகளில் நான் மிகப் பிரபலமானவன். ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். மருதமலை முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்...' என, கடிதங்கள் எழுதி, வாய்ப்பு கேட்டார்.அப்போது, அவருக்கு வயது, 16; வீர மாருதி தேகப் பயிற்சி சாலை அவரால் அமர்க்களப்பட்டது. சிலம்பம், மல்யுத்தம், வாள் பயிற்சி மற்றும் சுருள் கத்தி என, அனைத்து பயிற்சிகளையும் கற்றார்; மற்றவர்களுக்கும் கற்றுத் தந்தார்.மில் ஊதியத்தில் சேமித்து, புத்தம் புது ஹெர்குலிஸ் சைக்கிள் வாங்கினார். தான் முதன் முதலில் வாங்கிய சொத்தை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தார். சுற்றுப்புறமெங்கும் சைக்கிள் போட்டி நடக்கும்; சின்னப்பாவுக்கே எப்போதும் முதல் பரிசு. 41 ரூபாய் கொடுத்து வாங்கிய சைக்கிள், 1943 வரை பந்தயக் குதிரையாகப் பறந்தது.'சின்னப்பா... உன் வாழ்வு தொழிலாளியாகவே முடிந்து விடாது; சீக்கிரத்தில் அதிர்ஷ்டத்தின் சாவி உன் கைக்கு கிடைக்கும்...' என்று அவர் உள் மனதில் ஒரு தேவதை அவரை ஆசிர்வதித்தபடியே இருந்தது.ஆனால், அவ்வப்போது நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள், அவரது சினிமா ஆசையை முடக்கின. 'ஜெய ஜெய கோகுல பாலா' என்று இரவு நேரங்களில், தெருக்கூத்துகளில் ஆடிப் பாடுவதில், ஆத்ம திருப்தி அடைந்தார். கிட்டப்பா, விஸ்வநாத அய்யர் குரல்களில், சின்னப்பாவும் உலாவுவார். சின்னப்பாவிற்கு, அடிப்படை சங்கீதம், ராகம், பாவம் தெரியாது. கேள்வி ஞானத்தில் சொற்களைச் சேர்த்து, இஷ்டத்துக்குப் பாடுவார். அதற்கே கைதட்டல்கள் அள்ளும். இசையின் அருமை அறிய மாட்டார்கள் பாமர மக்கள். சத்தம் கூடக் காற்றில் சந்தோஷமாகவே ஒலிக்கும்.ஆலைச் சங்கு ஊதியது. வீட்டுக்கு சிட்டாகப் பறந்த சின்னப்பா, மனைவி தந்த தேநீரை வேகமாக உறிஞ்சியவர், அரை நிஜாருடன் கால்பந்து விளையாடப் புறப்பட்டார்.'கல்யாணமாகி நாலு வருஷம் ஆகுது; சினிமா, நாடகம், கூத்து, குஸ்தின்னு ராத்திரி பொழுத கழிக்கிறானே... குழந்தை பெத்துக்கணும்ன்னு கூட இவனுக்கு தோணலியே...' என்று அவரது தாயாரும், அண்ணியும் கவலைப்பட்டனர்.கால் பந்தாட்டப் போட்டி; ஆடுகளம் யுத்த பூமியாக தோன்றியது. 'பாத்தா நாட்டுப்புறத்தான்களாக இருக்கிறாங்க... இந்தப் போடு போடுறாங்களே...' என்று வியந்தார் நடிகர் சாரங்கபாணி. இரண்டு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் மோதின. 'இருட்டினாலும் பரவாயில்ல; யாரு வெற்றியடையிறாங்கன்னு பாத்துடணும்...' என நினைத்தார் சாரங்கபாணி.திலோத்தமை பட ஷூட்டிங்குக்காக கோவை வந்திருந்தார் சாரங்கபாணி. படம் முடிகிற தருவாயில், இரண்டு ஸ்டன்ட் வீரர்கள் கிடைக்காமல் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியிருந்தனர்.விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், யானையின் பலத்தோடும், குதிரையின் வேத்துடனும், இளங்காளையின் தோற்றத்துடனும் வியர்வை வழிய ஜொலித்தனர்.இளைஞர்களின் உடற் கட்டில் மனத்தைப் பறி கொடுத்த சாரங்கபாணி, 'முண்டா பனியனை மீறி நின்ற அகன்ற மார்பும், மலை போன்ற தோள்களும், படகின் துடுப்பாகத் தோன்றிய நீண்ட கைகளும் இங்கேயே இருக்கிறதே... எதற்காக டைரக்டர் சின்ஹா சென்னைக்கு தகவல் சொன்னார்...' என நினைத்தார்.சின்னப்பா அணி வெற்றி பெற்றது. தோள்களில் சின்னப்பாவைச் சுமந்தபடி வாலிபர்கள் ஆடினர். அவரை அழைத்து விசாரித்த சாரங்கபாணி, ஸ்டுடியோவுக்கு திரும்பி, தான் பார்த்ததை சின்ஹாவிடம் கூறினார்.அக்காலத்தில், கோவை இன்னொரு கோடம்பாக்கமாக உருவான சூழல் அது. பிரிமியர் ஸ்டுடியோ, சென்ட்ரல் ஸ்டுடியோ என, புதிது புதிதாக படப்பிடிப்பு நிலையங்கள் கோவையில் தோன்றின. மில் வேலை முடிந்த பின், சினிமா ஸ்டார்களை தூர இருந்து கண்டுகளிப்பது சின்னப்பாவின் தினசரி பொழுதுபோக்கு.எம்.என்.நம்பியார், எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி, டி.எஸ்.பாலையா மற்றும் கே.ஆர்.ராமசாமி என்று பலரும், ராமநாதபுரத்தில் ஜூபிடர் ஸ்டுடியோவின் குடியிருப்பில் இருந்தனர்.— தொடரும்.நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,சென்னை.பா. தீனதயாளன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !