தேவை: தோழமைத் தோரணை!
ஒரு பெட்ரோல், 'பங்க்'கில், நானும், என் உறவினரும் கணக்கு வைத்திருந்தோம். பெட்ரோல் போடும் போதெல்லாம், அவர்கள் நீட்டும் பில்லில் கையெழுத்து இடவேண்டும்; மாத முடிவில் பில் வரும்.இது சாத்தியப்பட காரணம், பெட்ரோல் பங்க் உரிமையாளர், என் கல்லூரி நண்பர்; என் அறிமுகத்தில் தான், என் உறவினருக்கும் அங்கு கணக்கு துவங்கப்பட்டது.ஆனால், உறவினரோ, 'அது சரியில்ல; இது சரியில்ல...' என, ஏதேதோ புகார் சொல்லி, இதிலிருந்து கழன்று கொண்டார். அத்துடன், 'எப்படி அந்த இடத்தில் தொடர்ந்து கணக்கு வைத்திருக்கிறீர்கள்...' என்று வியப்பாக கேட்டார்.இவர் செய்த தவறை, நான் செய்யவில்லை என்பது தான் காரணம். எனக்கு நண்பரான பங்க் உரிமையாளர், தமக்கும் நண்பர் என்ற வகையில், அதிகாரத் தோரணையுடன் நடந்து கொள்வார்; கோபமாகப் பேசுவார். பார்த்தனர் ஊழியர்கள்; இவர் வந்தாலே போதும், பிரச்னை செய்வது என்ற முடிவிற்கு வந்தனர். முட்டல்கள், மோதல்களாக ஆகிவிடவே, மனிதர் விலகிப் போய் விட்டார்.ஆனால், பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் நான் அனுசரித்ததெல்லாம், தோழமைத் தோரணை தான். முதலாளிக்கு மிக வேண்டியவர் என்றாலும், நம்முடன் இயல்பாகப் பழகுகிறார் என்கிற அபிப்பிராயம் வரும்படி பார்த்துக் கொண்டேன்; இது, மிக உதவியாக இருந்தது.நண்பரின் காரை, ஓட்டுனரோடு இரவல் கேட்டார் ஒருவர். ஓட்டுனர் தாமதமாக வரவே, இரவல் கேட்டவர், ஏதோ சொல்லி விட்டார். 'ஓசியில் கார் கேட்ட உனக்கு, இவ்வளவு ஏத்தமா...' என்று கோபமடைந்த ஓட்டுனர், நாள் முழுக்க முரண்டு பிடிக்க, இருவரும் அன்று இரவு, வாகன உரிமையாளரிடம் பல்வேறு புகார்களை முன்வைக்க, 'உதவ முன் வந்த எனக்கு, இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்...' என்று மனம் சலித்து போனார் நண்பர்.சொல் பொறுக்காத இக்காலத்து ஊழியர்களைக் கையாள்வதே தனிக்கலை! இது, இரவல் கார் கேட்டவருக்கு தெரியவில்லை. வந்த உடனேயே ஓட்டுனரை கண்டித்திருக்கக் கூடாது; தோழமையை ஏற்படுத்தி, பின் விசாரித்தால் நாமே இரக்கப்படும்படியான (குழந்தைக்கு முடியலை சார்) காரணம் வெளிப்படும்.'ஓசியில் வண்டி கேட்கிற உனக்கே இவ்வளவு எகத்தாளமா...' என்கிற சலிப்பு ஓட்டுனருக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள, தோழமை உணர்வு உதவியிருக்கக் கூடும். இரவல் நண்பர் பின்பற்றியதோ, அதிகாரத் தோரணை!பேருந்து, ரயில், விமானம் என்று பயணிக்கும் போது, சக பயணிகளுடன் மோதவே பெரும்பாலானோர் காரணம் தேடுவர். 'எல்லா இடத்திலயும் உங்க, 'லக்கேஜை' வச்சுக்கிட்டா, நாங்க எங்க, 'லக்கேஜை' தலையிலயா வச்சுக்கிறது... ரயில் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா...' என்று முதல் அணுகுமுறையிலேயே மோதுகின்றனர்.'உங்க, 'லக்கேஜை' இலேசா நகர்த்திக்கட்டுமா...' என்று கேட்டுப் பாருங்கள்... 'தாராளமா...' என எழுந்து வந்து, அவர்களே நகர்த்துகின்றனரா இல்லையா என்று! ஓர் இனிய பயணத்தைக் கூட, சக பயணியுடன் சண்டையிட்டு பயணிப்பவர்கள், வாழ்க்கைப் பயணத்தை எப்படி மேற்கொள்வர்!'தோளுக்கு மிஞ்சினால் தோழன்' என்கிற அற்புதப் பழமொழியை செயல்படுத்தாத காரணத்தினாலேயே, பல தந்தை - மகன் உறவுகள் வாசலுக்கும், வீதிக்கும், நீதிமன்றக் கூண்டுகளுக்கும் வந்துவிட்டன.பெற்றோர், உடன் பிறப்புகள், சொந்த பந்தங்கள், வாழ்ந்த ஊர், வீடு, சவுகரியங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, கணவனின் அன்பிற்காக, அவனை நம்பி வாழ்கிற பெண்ணிடம், இவன் ஏன் குறைந்தபட்ச பங்களிப்பாக அன்புடன் கூடிய தோழமை உணர்வைக் காட்டக் கூடாது. மாறாக, ஆண்டான் அடிமை போல் அல்லவா நடத்துகிறான்! அவள் இல்லாவிட்டால், அவள் சலித்துப் போனால், உன் பிழைப்பு நாறிப் போகும் என்று யார் தான் இவனுக்கு எடுத்துச் சொல்வது!சக ஊழியர்களுடன், தோழமை உணர்வோடு பழகிப் பார்த்தால், தொழில் செய்யும், பணிபுரியும் இடம் வண்ணப் பூங்காவாக மாறும்; சண்டைக் குணம் கொண்டு அணுகினால், பணிக்களம் முள் காடாகத் தோன்றும்.நம்மைக் கடந்து போகிற பல்வேறு விதமான பணியாளர்களிடம், தோழமை காட்டிப் பாருங்கள். ஒத்துழைப்பு 100 சதவீதமாகி விடும்; உழைப்புக் கூலியில் தள்ளுபடி தருவர்.தொழிற் பங்குதாரரிடம், வாழ்வில் சந்திக்கிற சக மனிதர்களிடம் பொது இடங்களில் கடந்து போகிறவர்களிடம் தோழமை காட்டிப் பாருங்கள்; ஒரு புதிய உலகம் நம் கைவசமாகும்.மனிதர்கள் கண்ணாடிகள்; வெறும் பிரதிபலிப்பு பிம்பங்கள். அவர்களைப் பற்றி புகார்கள் செய்தால், அவை, நம்மிடம் உள்ள கோளாறுகளை பிறருக்கு பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கும் செயலே தவிர, வேறு என்ன ரகத்தில் சேர்க்கச் சொல்கிறீர்கள்!லேனா தமிழ்வாணன்