எழுபது அடி சுவரில், பிடிமானம் இல்லாமல் ஏறும் பெண்!
சீனாவின், ஜிகான்சு மாகாணத்தை சேர்ந்த பெண், 70 அடி உயரமுள்ள, செங்குத்தான கோட்டைச் சுவரில், எந்தவித பிடிமானமும் இல்லாமல், அனாசயமாக ஏறி, அனைவரையும் வியக்க வைக்கிறார். இவர் பெயர், நிம்பிள் மா ஜோய்.ஜிகான்சு மாகாணத்தில் உள்ள, ஜோங்காவ் அரண்மனையும், அதன் கோட்டைச் சுவரும், மிகவும் பிரபலமானவை. பழங்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோட்டைச் சுவர், 70 அடி உயரம் உடையது.மா ஜோயின் வீடு, அரண்மனை அருகே இருப்பதால், குழந்தை பருவத்திலிருந்தே, இந்த கோட்டைச் சுவரில் ஏறி, இறங்குவதை, அவர் வழக்கமாக கொண்டிருந்தார். நாளடைவில், இதுவே அவரது முழு நேர வேலையாகி விட்டது.இப்போது, செங்குத்தான இந்த சுவரில், எந்தவித பிடிமானமும் இல்லாமல், ஸ்பைடர்மேன் போல், சர சரவென ஏறுகிறார். இவர், சுவரில் ஏறி, சாகசம் செய்வதை பார்ப்பதற்கே, கோட்டைச் சுவரைச் சுற்றி பெருங்கூட்டம் கூடி விடுகிறது. புலியைப் பார்த்து, பூனை சூடு போட்டுக் கொண்ட கதை போல், நிம்பிள் மா ஜோயைப் பார்த்து, பார்வையாளர்கள் சிலரும், சுவரில் ஏற முயற்சித்து கீழே விழுந்து, காயமடையும் சம்பவங்களும் நடக்கின்றன. — ஜோல்னா பையன்.