உள்ளூர் செய்திகள்

நான் சுவாசிக்கும் சிவாஜி - ஒய்.ஜி. மகேந்திரன் (13)

கடந்த, 1959ல் வெளி வந்த, பாகப்பிரிவினை ஒரு அற்புதமான படம். தமிழகத்தின் பெரிய ஹீரோவாக, சிவாஜி கொடிக் கட்டி பறந்து கொண்டிருந்த நேரம் அது. ஸ்டைலிஷ் ஹீரோவாக தன்னை நிரூபித்தவர், பாகப்பிரிவினை படத்தில், ஊனமுற்றவர் கதாபாத்திரத்தில், தன்னை விகாரப்படுத்தி, நடித்திருப்பார். எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில், அவர்களிட மிருந்து தன்னை நடிப்பால் வேறுப்படுத்திக் காட்ட வேண்டிய சவாலான ரோல் அது.நாற்பது நாட்கள் நடந்த படப்பிடிப்பில், கை ஊனத்தையும், காலை இழுத்து இழுத்து நடந்து, கால் ஊனத்தை காட்டுவதாகட்டும், கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல், ஒரே மாதிரி நடித்திப்பார். அத்துடன், 'தேரோடும் நம்ம சீரான மதுரையிலே...' என்ற பாடலில், கை, கால் ஊனத்துடனே, நடனமாடி, கை தட்டல் வாங்கியிருப்பார் சிவாஜி.இந்த படத்தை, இந்தியில் ரீ-மேக் செய்தனர். அதுவும், வெற்றிப்படமாக அமைந்தது. சிவாஜி நடித்த ரோலில், இந்தியில் சுனீல் தத் நடித்திருந்தார். 'படப்பிடிப்பின் போது, முந்தின காட்சியில் கையை எப்படி வைத்துக் கொண்டிருந்தோம் என்பது அடிக்கடி மறந்து விடும். ஆனால், சிவாஜி எப்படி தான் ஒரே மாதிரி, கையையும், காலையும் வைத்து, அற்புதமாக நடித்தாரோ...' என்று, வியந்து கூறினார் சுனில் தத்.இப்படத்தின் வெற்றிக்கு, சிவாஜி - கண்ணதாசன் - எம்.எஸ்.வி., - டைரக்டர் பீம்சிங் இணைந்த கூட்டணியே, காரணம். ஹாலிவுட் நடிகர்கள், மார்லன் பிராண்டோ, கிளார்க் கேபிள் ஸ்பென்ஸர் ட்ரேஸி, அலைக் கென்னெஸ், ஜேம்ஸ் காக்னி போன்றவர்களின் நடிப்பை பற்றி, அடிகடி பாராட்டி பேசுவார். ஆதே போல், சக நடிகர்களுக்கு, 'எந்த நடிகரையும், 'இமிடேட்' செய்யாதீங்க, அவங்க நடிப்பிலே, 'இன்ஸ்பயர்' ஆகும் போது, அதை, 'இம்ப்ரூவ்' செய்யுங்க...' என்று அறிவுரை கூறுவார். சிவாஜிக்கு எத்தனையோ ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி ரசிகையாக இருந்து, குடும்ப நண்பர்களாகி, உடன் பிறவா சகோதரிகளாக ஆனவர்கள், லதா மங்கேஷ்கர் மற்றும் அவரது தங்கைகள். சிவாஜியை அவர்கள், 'அண்ணா' என்று பாசத்துடன் அழைப்பதுடன் மட்டுமல்லாமல், ஆண்டுதோறும், ரக்க்ஷா பந்தன் தினந்தன்று, ராக்கி கயிறு, அனுப்புவர். இவரும் தங்கைகளுக்கு சீர் வரிசை மற்றும் பரிசுப் பொருட்களை அனுப்புவார். சிவாஜி இறந்த பின்னரும், இந்த பழக்கம், இன்னும் தொடர்கிறது.சிவாஜி வீட்டில், எந்த முக்கியமான நிகழ்ச்சி நடந்தாலும், லதா குடும்பத்திலிருந்து, ஒருவர் கண்டிப்பாக, கலந்து கொள்வர். சிவாஜி படங்களை, லதா விரும்பிப் பார்த்து ரசிப்பார். பாவமன்னிப்பு படத்தை பார்க்க விரும்புவதாக, லதா மங்கேஷ்கர் கூறியதும், அப்படத்தின் பிரின்ட்டை, பிரத்யேகமாக அனுப்பி வைத்தார் சிவாஜி. பொதுவாக, ஒருவர் நம்மை, 'இடியட்' என்று சொன்னால், உடனே, நமக்கு கோபம் வரும்; குறைந்தபட்சம் வருத்தமாவது வரும். ஆனால், என்னை ஒருவர், 'இடியட்' என்று குறிப்பிட்ட போது, நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன். என்னை, அவ்வாறு குறிப்பிட்டவர், லதா மங்கேஷ்கர் தான்.ஒரு சமயம், சிவாஜியின் வீட்டுக்கு, லதா மற்றும் அவரது தங்கைகள் உஷா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போன்ஸ்லே என, மூவரும் வந்திருந்தனர். சிவாஜி காலமாகிய பின், நடந்த நிகழ்ச்சி, அது. சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், போனில் என்னிடம், லதா மங்கேஷ்கர் வந்திருப்பதாக கூறினார். என் மனைவி சுதா, என் சித்தி சீதாவுடன் சிவாஜி வீட்டுக்கு சென்றேன்.ராம்குமார், லதாவிடம் என்னை அறிமுகப்படுத்திய போது, 'அப்பாவுடன் நிறைய படங்களில், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்திருக்கிறார்...' என்று சொல்லி, பரிட்சைக்கு நேரமாச்சு படத்தை பற்றி குறிப்பிட்டார். 'அந்த முட்டாள் பையன் கதைதானே?' என்று கேட்டார் லதா. 'ஆமாம் லதாஜி. நான் தான், அந்த இடியட்...' என்று, பெருமையோடு சொன்னேன். 'அந்த ரோலில் நன்றாக நடித்திருக்கிறீர்கள்...' என்று பாராட்டினார். இந்த பாராட்டுக்கு முழு காரணம், சிவாஜிதான். லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் பாடகி என்பதோடு, சிறந்த ஓவியரும் கூட. சிவாஜியை, மிக அழகாக, தத்ரூபமாக வண்ண ஓவியமாக தீட்டி, சிவாஜிக்கு அன்பளிப்பாக வழங்கினார். கையில் புகைப்படம் வைத்துக் கொள்ளாமல், தன் மனதில், சிவாஜியின் முகத்தை வைத்து, வரைந்த படம் அது.மும்பையிலிருந்து வெளியான பிரபல ஆங்கில வாரப்பத்திரிகை, 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி!' அதில், கலைப் பகுதியை எழுதி வந்த ராஜூ பரதன் என்ற பிரபல பத்திரிகையாளர், மும்பை, ஷண்முகானந்தா அரங்கில் நடைபெற்ற, சிவாஜி நாடக விழா பற்றி எழுதியிருந்த கட்டுரையில், 'வியட்நாம் வீடு' தமிழ் நாடகம் நடைபெற்றது. முதல் வரிசையில், பிருத்வி ராஜ்கபூர், ராஜ்கபூர், சசி கபூர் மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் அமர்திருந்தனர். தமிழ் தெரியாவிட்டாலும், சிவாஜி நாடகங்களை பார்ப்பதற்காகவே அவர்கள் வந்திருந்தனர். 'விழாவில் பயங்கர கூட்டம். என்ன தான் இருக்கப் போகிறது என்ற மனநிலையில் தான், சிவாஜியின் நாடகத்தை பார்க்கச் சென்றேன். அவரது நடிப்பு என்னை உலுக்கி விட்டது. நாடக அரங்கிலிருந்து வெளியே வரும்போது, சிவாஜியின், பரம ரசிகனாக வந்தேன். நாடகத்தில் பல இடங்களில், என்னையும் அறியாமல், அழுதேன்...' என்று எழுதியிருந்தார் ராஜூ பரதன்.பிரபல இந்தி நடிகரும், தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற சாதனையாளரும் ஆன நடிகர் பிரானுக்கு, சிவாஜி மீது அளவு கடந்த மரியாதை உண்டு. ஏக் முட்டி ஆஸ்மான் என்ற இந்தி படத்தில், விஜய் அரோரா, ஹீரோ. எனக்கு கவுரவ வேடம். இந்தியாவின் போர் கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்த்தில், படமாக்கினர். விஜய் அரோராவும், நானும் கப்பற்படை வீரர்கள்; பிரான் எங்கள் தளபதி. படப்பிடிப்பின் போது, பிரானிடம் என்னை அறிமுகம் செய்தனர்.'உங்களுக்கு சிவாஜியை தெரியுமா?' என்று கேட்டார் பிரான். 'நன்றாகவே தெரியும். அவர், எங்களுடைய குடும்ப நண்பர். அவரோடு நான், சில படங்கள் நடித்திருக்கிறேன்...' என்றேன்.'நான் சிவாஜி சாரின் தீவிர ரசிகன். சிவாஜி நடித்த எமோஷனலான படத்தை, இந்தியில் ரீ-மேக் செய்ய கேட்டனர். (பிரான் சொன்ன, ஓரிரு காட்சிகளை வைத்து, அவர் குறிப்பிடுவது, ஞான ஒளி படம் என்பது புரிந்தது.) என்னால் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகளை, கண்டிப்பாக செய்ய முடியாது. வேண்டாம் என்று சொல்லி விட்டேன்...' என்று கூறினார் பிரான். நடிகர் விஜய் அரோரா, புனே திரைப்படக் கல்லூரியில், நடிப்புக்கான படிப்பில், தங்கப் பதக்கம் பெற்றவர். 'சமீபத்தில், சிவாஜி படம் பார்த்தேன். அப்படத்தில், ரொம்ப கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வருவார். படத்தின் பெயர் கூட, கோல்டு மெடல். (தங்கப்பதக்கம்) அதில், தன் மனைவி இறந்ததும், சிவாஜி கொடுத்திருக்கும், 'எக்ஸ்பிரஷன்ஸ்' ரொம்ப சிறப்பானவை. என் வயிற்றில் யாரோ குத்துவது போன்ற வலி எனக்குள் ஏற்பட்டது. வீட்டுக்கு சென்றதும். அந்த காட்சியில், சிவாஜி நடித்தது போல, கண்ணாடி முன் நின்று நடித்துப் பார்த்தேன். அவர் செய்ததில், ஒரு சதவீதம் கூட செய்ய என்னால் முடியவில்லை...' என்றார் விஜய் அரோரா.— தொடரும்.எஸ்.ரஜத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !