உள்ளூர் செய்திகள்

சம்மர் ஸ்பெஷல்! - வீட்டிலேயே குளிர்பானம் தயாரிக்கலாம்!

வெயிலில் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைந்தவுடன், 'உஸ்... அப்பாடா, என்ன வெயில்...' என, பலரும் பெருமூச்சு விடுவர். பெருமூச்சு விட்ட கொஞ்ச நேரத்திலேயே குளுமையான, சுவையான ஒரு டம்ளர் ஜூஸ் கையில் கிடைத்தால், கொண்டாட்டம் தான். அதில் சத்தும் நிறைந்திருந்தால், இரட்டிப்பு சந்தோஷம் தானே!கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குளிர்ச்சியான ஐட்டங்களை தயாரித்து பரிமாறினால், உறவு, நட்பு வட்டத்தில் நீங்கள் தான், 'கூல் குயின்!'பன்னாதேவையான பொருட்கள்: புளிப்பில்லாத மாங்காய் - 2, சர்க்கரை - அரை கப், கொரகொரப்பாய் பொடித்த முந்திரி - 2 தேக்கரண்டி, ஏலக்காய் துாள்.செய்முறை: மாங்காயை கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு, குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியவுடன், தோலை உரித்து, கொட்டையை நீக்கி, மசிக்கவும். இதனுடன், இரண்டு கப் தண்ணீர், சர்க்கரை, பொடித்த முந்திரி, ஏலக்காய் துாள் கலந்து, 'பிரிஜ்'ஜில் வைத்து, 'ஜில்'லென பரிமாறவும்.ஹெர்பல் காக்டெயில்தேவையான பொருட்கள்: எலுமிச்சை இலைகள் - ஒரு கப், அருகம்புல் - ஒரு கப், இளம் சிவப்பாக உள்ள மா இலை - 10, துளசி இலை - ஒரு கப், எலுமிச்சை - 2, சுக்கு பொடி - அரை தேக்கரண்டி, இஞ்சி துருவல் - 2 தேக்கரண்டி, பொடித்த வெல்லம் - ஒரு கப், எலுமிச்சை தோல் துருவல் - கால் தேக்கரண்டி, உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: எலுமிச்சை இலைகள், அருகம்புல், மா இலை, துளசி இலை ஆகியவற்றை சுத்தம் செய்து, பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து, 2 கப் நீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும்.வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, ஒரு கப் நீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி, கொதிக்க வைத்த ஹெர்பல் கலவையுடன் சேர்த்து, சுக்கு பொடி, எலுமிச்சை சாறு, இஞ்சி துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சை தோல் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.இதை பானையில் ஊற்றி வைத்து குளிர்ந்ததும் அருந்தினால், கூடுதல் மணம், சுவையுடன்இருக்கும். எலுமிச்சை தோலில் அதிக சத்துகள் உள்ளதால், தேவையெனில் சேர்க்கவும்.ராகி கூழ்!தேவையான பொருட்கள்: ராகி மாவு - அரை கப், கடைந்த மோர் - 2 கப், சீரக துாள் - ஒரு தேக்கரண்டி, சின்ன வெங்காயம் - 5, வெள்ளரிக்காய் துருவல் - 2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 1, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு.செய்முறை: அரை கப் தண்ணீர் தள தளவென கொதிக்கும்போது, உப்பு, ராகி மாவு சேர்த்து வேகும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும். ஆறியதும், உருண்டைகளாக உருட்டி, எட்டு மணி நேரம் தண்ணீரில் வைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.ராகி உருண்டையை தண்ணீரிலிருந்து எடுத்து கரைக்கவும். இதனுடன் அரைத்த கலவையை சேர்த்து, சீரக துாள், கடைந்த மோர், துருவிய வெள்ளரிக்காய் சேர்க்கவும். இதில், ராகி உருண்டைகளை ஊற வைத்த தண்ணீரை சேர்த்து, மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து பரிமாறவும்.உடலுக்கு குளிர்ச்சி, வயிற்றுக்கு இதம் கொடுக்கும் இந்த ராகி கூழ், நீண்ட நேரம் பசி தாங்கவல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !