உள்ளூர் செய்திகள்

பணத்துக்கு கோவில்!

தெய்வங்களுக்கு கோவில் இருப்பது, இயற்கை. பணத்துக்கு கோவில்கள் இருக்கிறதா என்றால், தமிழகத்தில் அதுவும் இருக்கிறது. செல்வத்தை ஒன்பது வகையாக பிரித்து, நவநிதிகள் என்பர். இவர்களில், குபேரனின் கணக்குப் பிள்ளைகளான, சங்கநிதி, பதுமநிதியை பெரம்பலுார் மாவட்டம், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்களில் தரிசிக்கலாம். பிரம்மாவின் மகன் விச்ரவசு, சந்தர்ப்பவசத்தால், கேகயி என்ற அரக்கியை மணந்தார். இவர்களுக்கு ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை, விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர். முதல் மூவரிடமும், தாய்க்குரிய அரக்க குணம் மேலோங்கி இருந்தது. மற்றவர்கள், தந்தையைப் போல் சாத்வீகமாக இருந்தனர்.இவர்களில், குபேரன் சிவபக்தனாகி, அவரது அன்பைப் பெற்றான். இருவரும் நண்பர்கள் ஆகும் அளவுக்கு பக்தி முற்றியது. தன் நண்பனுக்கு, சங்கநிதி, பதுமநிதி, நீலநிதி, மச்ச நிதி, முகுந்த நிதி, கஸ்யப நிதி, நந்த நிதி, கற்பக விருட்சம், காமதேனு ஆகிய நவநிதிகளை வழங்கினார், சிவன்.சங்கநிதி - பணம்; பதுமநிதி - கல்வி அறிவு; நீல நிதி - கடல் வளம்; மச்ச நிதி - அதிர்ஷ்டம்; முகுந்த நிதி - நெய், வெண்ணெய், தயிர் வளம்; நந்த நிதி - பசு வளத்தை குறிக்கும். கற்பக விருட்சம் - மரங்கள், செல்வத்தையும், காமதேனு - லட்சுமி கடாட்சத்தையும் தரும். கஸ்யப நிதி - இந்த செல்வங்களை முறையாக செலவிட அருள்புரியும்.இவர்களில், சங்கநிதி, பதுமநிதிக்கு முக்கிய கோவில்களில் சிலை இருக்கும். இவர்கள், குபேரனின் இருபுறமும் அமர்ந்திருப்பர். குபேரனின் கணக்குப்பிள்ளைகள் என, வர்ணிக்கப்படுவர். சங்கநிதியின் கையில், உழைத்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு ஆதாரமான வெற்றிச்சங்கும், பதுமநிதியின் கையில், படித்தவர்களுக்கு பரந்த மனம் வேண்டும் என்பதற்குரிய, விரிந்த தாமரையும் உள்ளன. இந்த நிதிகளை அடைவது அவ்வளவு எளிதல்ல. கடும் உழைப்பும், புத்திசாலித்தனமும், வள்ளல் தன்மையும் உள்ளவர்களே, இதை அடையலாம்.பெரம்பலுார் - திருச்சி சாலையில், 15 கி.மீ., துாரத்தில் ஆலத்துார். அங்கிருந்து பிரியும் சாலையில், 8 கி.மீ., துாரத்தில் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, குபேரன் அவரது மனைவி சித்ரலேகா மற்றும் கணக்குப்பிள்ளைகளுடன் தரிசனம் தருகிறார். தவிர, இங்குள்ள துாண்களில், 12 ராசிகளுக்கும் உரிய, குபேர சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.சங்கநிதி, பதுமநிதியை பெரிய சிலை வடிவில், கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் தரிசிக்கலாம்.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !