உள்ளூர் செய்திகள்

மொட்டுகள் நாளை மலரும்!

பார்வதியின் கைகள், அவரைக்காயை நறுக்கிக் கொண்டிருந்தன. மனம் அதில் இல்லை; மகளின் கல்யாணத்தையே சுற்றி வந்தது.கணவரை நினைத்ததும், உள்ளம் நெகிழ்ந்தது. இந்த நீண்ட வாழ்க்கையில், உழைப்பதைத் தவிர அவர் எதைக் கண்டார் என்று, ஒரு எண்ணம் தோன்றி, கண்கள் கலங்கின.''இன்னொரு காபி கொடு பார்வதி,'' என்ற, தயாளனின் குரல் கேட்டது.உடனே, பாலை அடுப்பில் ஏற்றி, ''இதோ கொண்டு வரேன்,'' என்று, இரண்டு நிமிடங்களில் ஆவி பறக்கும் நறுமணக் காபியை தயாரித்து, ''இந்தாங்க... இன்னிக்கும் போகணுமா? வேணுகோபால், ராஜேந்திரன்னு வட்டிக்கு கடன் கொடுக்கிறவங்கன்னு சொன்னீங்களே,'' என்று காபியை நீட்டினாள்.''ஆமாம் பார்வதி... உமர் தான் விலாசம் கொடுத்தாரு. அவர் சிபாரிசு தான், கண்டிப்பா கிடைச்சுடும்.''''ஏற்கனவே கழுத்து வரைக்கும் இருக்கு கடன். மஞ்சு கல்யாணம் முடியறதுக்குள்ள, தலை முழுகிடும் போல இருக்கு.''''அட விடு பார்வதி... ஒரே பொண்ணு, கஷ்டம் தெரிஞ்சு வளர்ந்தவ. ஆனாலும், கல்யாணம் நல்லா ஆடம்பரமா நடக்கணும்ன்னு ஆசைப்படறா, சின்னப்பொண்ணு. ஒண்ணும் தப்பில்லே; நீ, அவகிட்ட எதையும் கேக்காதே... சரியா?''''கேக்கல. ஆனா, எனக்கு கஷ்டமா இருக்கு. நல்ல படிப்பு, வேலை, குணம்ன்னு அருமையா வரன் கிடைச்சுதேன்னு சந்தோஷப்பட்டேன். அம்மா, பையன்னு ரெண்டே பேர். அம்மா இன்னும் தலைமை ஆசிரியரா நல்ல பேரோட இருக்காங்க...''மஞ்சுவைப் பாத்ததும், நல்லா பேசி, சிரிச்சு, தன்மையா இருந்தாங்க. பையனைப் பத்தி விசாரிச்சப்போ, எல்லாருமே நல்ல, 'ரிப்போர்ட்' தான் கொடுக்கறாங்க. போதாததற்கு நகை, பணம், டிரஸ்னு எந்த நிபந்தனையும் போடலே அவங்க...''இப்படி எல்லாமே அருமையா போகும் போது, இந்தப் பொண்ணு இப்படி புதுசா லட்ச ரூபாய்க்கு செலவை இழுத்து விடறாளே... நம் விரலே நம்ம கண்ணைக் குத்தின மாதிரி... அதுதாங்க ரொம்ப கஷ்டமா இருக்கு.''புன்னகையுடன், மனைவியின் தோளை மெல்ல தட்டி, ''நாலு தங்கச்சிகளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சேன்; நல்லபடியா வாழறாங்க. உனக்குத் தெரியாததா, ஒவ்வொரு கல்யாணமும் ஒவ்வொரு மாதிரி தானே நடந்துது. இதையும் எப்படியாவது நல்லவிதமா முடிக்கலாம்.''கவலைப்படாம சந்தோஷமா வேலைகளை கவனிம்மா... நாளைக்கு ஜவுளி எடுக்கப் போகலாம். உனக்கு, மஞ்சள் பார்டர் பட்டுப்புடவை; 20 வருஷ உன் ஆசை அது.''''அப்பப்பா... அதெல்லாம் வேணாம்ங்க. எப்ப இவ அலங்காரம், ஆடம்பரம்ன்னு ஆரம்பிச்சாளோ, அப்பவே என் பட்டுப்புடவை ஆசையை மூட்டை கட்டி வெச்சுட்டேன். அந்த நாலாயிரம் ரூபாய் இருந்தா, இவளோட ஒருநாள் பியூட்டி பார்லர் செலவுக்கு ஆகும்.''''சரி... வந்து பேசிக்கறேன்,'' என்று, கிளம்பினார்.''அப்பா கிளம்பிட்டாரா, எங்க ஆபிஸ்ல லீவு சொல்லத்தானே... நேர்ல போய்த் தான் சொல்லணுமா? ஸ்கூட்டில, 'டிராப்' பண்ணியிருப்பேன்ல,'' என்றபடி வந்தாள், மஞ்சு.மகளையே பார்த்தாள், பார்வதி.'என்ன வனப்பு, எவ்வளவு அழகு, துயில் முடித்து வானில் பறக்கும் புதுப்பறவை போல எவ்வளவு புத்துணர்ச்சி அந்த முகத்தில்? ஓவியம் போல இருக்கிறாள். இளமை கொடுக்கும் கொடை. இத்தனைக்கும் ஒரு க்ரீம் கூட போடவில்லை. 'இப்படியே மணப்பெண் புடவை கட்டி, ரோஜா மாலை போட்டு, மேடைக்கு அழைத்துப் போய் விடலாம் போல அவ்வளவு எழில். ஆனால், எவ்வளவு ஆசை உள்ளே, இன்னும் இன்னும் பேரழகியாக நின்று, தாலி கட்டிக் கொள்ள வேண்டும் என்று?' என, நினைத்துக் கொண்டாள், பார்வதி.''அம்மா... இன்னிலேர்ந்து எனக்கு எண்ணெய் பதார்த்தங்கள் வேணாம். 'ஸ்கின் லுக்' சரியா இருக்கணுமாம், அப்பதான் போட்டோல அழகா இருக்குமாம். அப்புறம், 'வெட்டிங் மேக் - அப் ரிகர்சல்' ஒண்ணு நடக்குமாம்... அதுக்கு ஸ்டூடியோ போகணும். முன்னாடியே அட்வான்ஸ், 40 ஆயிரம் கட்டணும்; அப்பாகிட்ட சொல்லணும். ''பிரீ ப்ரைடல் வகுப்புகள்ல சேரணும்; அதைப்பத்தி சொல்லணும், உங்க ரெண்டு பேர்கிட்டேயும். குடும்பம், 'ரிலேஷன்ஷிப்ஸ், பெர்டிலிடி'ன்னு ஒரு வாரம் சொல்லித் தர்றாங்களாம். அப்புறம், 'பிரீ வெட்டிங் போட்டோ, வீடியோ' இருக்கு... 'ஹை டெபனிஷன்' கேமரால அழகா விழணும்ல்ல, அதுக்கு தனியா, 'க்ரூம்' பண்ண ஒரு வாரம், அதுக்கும் தனியா, 40 ஆயிரம்...'' அவள் சொல்லிக் கொண்டே போனாள்.''மஞ்சு.''''சொல்லும்மா.''''இதெல்லாம் பண்ணிக்கிட்டே ஆகணுமா? அந்தக் காலத்துல...'' என்று பார்வதி முடிக்கும் முன், படபடத்தாள், மஞ்சு.''என்னம்மா, பொண்ணா இருந்துக்கிட்டு நீயே இப்படிக் கேக்குற... கல்யாணம் என்கிறது வாழ்வின் ஒரே திருநாள் இல்லையா? நமக்கு மட்டுமேயான ஸ்பெஷல் நாள். காலம் பூரா அந்த நாளை நினைத்து நினைத்துப் பார்ப்போம் தானே?''உன் கல்யாண ஆல்பம் கறுப்பு - வெள்ளை தான். ஆனா, அதுதானே உன்னைப் பொறுத்தவரைக்கும், 'பெஸ்ட்' உன் வாழ்க்கையில். எல்லா பெண்களுக்கும் அப்படித்தாம்மா. ப்ளீஸ்... பாரு, எப்படி சூப்பரா பொற்சிலை மாதிரி மின்னப் போறேன்னு... நீயே வாய் பிளந்து பார்க்கப் போறே...''சரிம்மா, தோழிகள் எல்லாருக்கும் இன்னிக்கு பத்திரிகை கொடுக்கப் போறேன். வர, 4:00 மணி ஆயிடும்; 'டென்ஷன்' ஆயிடாதே. செல்ல அம்மா, பை பை...'' என, ஓடினாள் மஞ்சு.பெருமூச்சு ஒன்று அனலாகத் தகித்தது பார்வதிக்கு. வேலையே ஓடவில்லை.'பாவம்... பணத்திற்கு அவர் எங்கெல்லாம் அலைகிறாரோ...' என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தது, மனது. 'இருமல் வேறு, சளி கட்ட ஆரம்பித்திருக்கிறதோ என்று பயமாக இருக்கிறது. 'கல்யாணம் முடியணும், கல்யாணம் முடியணும்' என்று, அந்த ஒன்றே தவம் போல நினைத்து, அலைகிறார். இந்தப் பெண் என்னடாவென்றால் நாளைக்கொரு புதுச் செலவு கொண்டு வருகிறாள்.'நல்ல குழந்தை தான். சண்டித்தனம், முன்கோபம் எதுவும் இல்லாத பிள்ளை தான். இப்போது ஏதோ அழகு பைத்தியம் பிடித்திருக்கிறது புதிதாக. சிறுபிள்ளைத்தனம் தான். ஆனால், விலைவாசி விண்ணைத் தாண்டி போய்விட்ட காலத்தில், ஏன் இப்படி இழுத்து விடுகிறாள்?' என, வருந்தினாள்.''ராத்திரிக்கு ரவா உப்புமாவா? இஞ்சி வாசனை துாக்குது,'' என்றபடியே உள்ளே வந்தார், தயாளன்.''ஆமாம்... இப்பத்தான் கிளறி முடிச்சேன். தரவா?''''இல்லம்மா, கொஞ்சம் போகட்டும்.''''போன காரியம் என்ன ஆச்சு?''''அது ஏன் உனக்கு, வீண் கவலையை விடு. பாப்பா எங்க, வண்டிய காணமே?''''அவ காலைலயே கிளம்பிப் போயிட்டா. தோழிங்களுக்கு பத்திரிகை வைக்கிறாளாம்.''''அட, என்ன பார்வதி நீ... கல்யாணப் பொண்ணு அவ... இப்பிடி வெயில்ல அலையலாமா, அதுவும் சாப்பாடு இல்லாம?''கதவு திறந்து வந்தாள், மஞ்சு.''கண்ணு... உன்னைப் பத்தி தான் பேசிட்டிருந்தோம்டா. வெயில்ல ஏன்டா வண்டில அலையுற... ஆட்டோ வெச்சுக்கிட்டு போயிருக்கலாமில்ல?'' என்று, மகளை வாஞ்சையாகப் பார்த்தார், தயாளன்.அவள் அமைதியாக இருந்தாள், ஓரிரண்டு நொடிகள். பின், அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.''உப்புமா ரெடி. சாப்பிடறியாடி மஞ்சு?'' என்றாள், பார்வதி.''கொண்டு வா பார்வதி... ஏன் புள்ளய கேட்டுக்கிட்டு?''''எண்ணெய் வேணாம்ன்னு சொன்னியேன்னு, ரொம்ப கம்மியா போட்டு பண்ணியிருக்கேன்.''நிமிர்ந்து இருவரையும் பார்த்தாள், மஞ்சு.''அப்பா, என்னை மன்னிச்சிடுங்க. கொஞ்சம் முட்டாளா இருந்துட்டேன். கொஞ்சம் என்ன, நெறையவே,'' என்றாள். குரல் வழுக்கியது.''ஏன் கண்ணு, இப்படில்லாம் பேசறே... அம்மா சொன்னாளா பணம் அது இதுன்னு.''''இல்லப்பா, தோழிகளுக்கு பத்திரிகை கொடுக்கப் போனேன். புதுசா ஒரு விஷயம் கத்துகிட்டேன். ஐ மீன், வாழ்க்கைப் பாடம் அப்பா.''''என்னம்மா சொல்ற?''''ஆமாம்பா நல்லவேளை, இன்னும் ஆடம்பரச் செலவு எதையும் ஆரம்பிக்கலே. கிட்டத்தட்ட லட்ச ரூபா கடன் குறைஞ்சதுப்பா.''மகளையே பார்த்தாள், பார்வதி.''இன்னிக்கு சந்திச்ச, 10 தோழிகள்ல, எட்டு பேருக்கு கல்யாணம் ஆகியிருந்தது. அதுல எல்லா வகை வாழ்க்கையும் இருக்கு. 'மிடில் கிளாஸ், பிசினஸ் கிளாஸ், ஒர்க்கிங் கிளாஸ்!' அதே போல, கல்யாணம் நடந்த மண்டபம், நடந்த விதம், செலவு எல்லாம்.''நான் எல்லா கல்யாணத்துக்கும் போயிருக்கேன். சிட்டியிலயே சிறந்த மண்டபத்துல ரொம்ப, 'கிராண்டா' நடந்துச்சே, ஷாமாவோட கல்யாணம். மாப்பிள்ளை கூட ஹெலிகாப்டர்ல வந்தாரே... அது, இப்ப தோத்துப் போச்சுப்பா. ரெண்டு பேருக்கும் மனப் பொருத்தமே இல்லையாம், எப்பவும், 'ஈகோ' பிரச்னையாம்; விவாகரத்து வரை போயாச்சு. 'ஷாக்கிங்'பா... ''அப்புறம், மாலினி கல்யாணம். அவங்கப்பா டெலிபோன் துறைல கடைநிலை ஊழியர். கல்யாணம் கூட திருத்தணி கோவில்ல நடந்து, அங்கேயே சின்ன ஹோட்டல்ல சாப்பாடு. இப்போ, மாலினியும், அவள் கணவரும் சேர்ந்து, 'கேட்டரிங்' ஆரம்பிச்சு, பெரிய, 'கான்டிராக்ட்' எல்லாம் எடுக்கறாங்கப்பா...''ஆறு மாசத்துக்கு, 'டேட்டே' இல்ல. கேட்ட பணம் கொடுத்து, 'புக்கிங்' நடக்குது. வீடு, கார், 100 பேருக்கு வேலைன்னு மகிழ்ச்சியா இருக்கா, மாலினி.''எனக்கு ஏதோ புதுசா கண் திறந்த மாதிரி இருக்கும்மா. திருமண நாள் என்பது, அழகான நினைவுகளைக் கொடுக்கப் போகிற நாள் தான். அதுக்காக, ஆடம்பரத்தோட பணத்தைக் கொட்டணும்ன்னு எந்த விதியும் இல்ல. ''கல்யாணத்தோட நோக்கம், இரண்டு பேரும் அன்பா, அந்நியோன்யமா, நட்பா வாழறது; விட்டுக் கொடுத்து சந்தோஷப்படுத்தறது; ரெண்டு பேரும் மனசார உழைக்கிறது; தாங்களும் உயர்ந்து, தன் கூட இருக்கறவங்களையும் உயர்த்தறது. அதுக்கு வேண்டியது, நல்ல பரந்த மனதும், வெளிப்படைத் தன்மையும், உறுதியான எண்ணமும் தான். ''அம்மா... எனக்கே அழகா, 'மேக் - அப்' போட்டுக்கத் தெரியும். சிம்பிளா, பேசிக் கிரீம், காஜல், புருவம்ன்னு பண்ணிக்குறேன். லிசி இருக்காளே, அவள் நல்ல ஆர்டிஸ்ட். காலரி வெச்சிருக்கா அகாடமில. எனக்கு அழகா, 'ஸ்டைலா' லெகங்கா அல்லது குஜராத்தி, 'ஸ்டைல்'ல போட உதவி பண்ணுவா... போதும்.''இப்போதும் மகள் பேசிக் கொண்டேயிருந்தாள். ஆனந்தக் கண்ணீரில் நனைந்து கொண்டிருந்தாள், பார்வதி.வி. உஷா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !