முதல் மனிதன் வணங்கிய லிங்கம்!
நாம் எத்தனையோ சிவலிங்கங்களை பார்த்திருக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு. எனினும், முதல் மனிதன் ஸ்தாபித்து வணங்கிய லிங்கத்தைக் காணும் பாக்கியம் தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கிறது என்றால், அதுவும் பாக்கியம் தானே! இந்த அபூர்வ லிங்கத்தையும், ருத்ராட்சத்தில் உருவாக்கப்பட்ட கோமதி அம்மனையும் தரிசிக்க வேண்டும் என்றால், திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதுார் நாறும்பூநாத சுவாமி கோவிலுக்கு வர வேண்டும்.மனு என்பவனே, இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதன். மனு என்ற சொல்லில் இருந்து தான், மனிதன் என்ற சொல்லே பிறந்தது.ஒரு பிரச்னைக்கு தீர்வு வேண்டுமெனில், முதலில் சம்பந்தப்பட்டவருக்கு மனு போட வேண்டும். பிறகு தான், அது பரிசீலிக்கப்பட்டு தீர்வு கிடைக்கும். ஆக மனு என்றால், 'முதன் முதலில்' என, அர்த்தம். இதனால், முதல் மனிதனுக்கு மனு என்று பெயர் சூட்டப்பட்டது.இமய மலையில் உள்ள கோமா என்ற சிகரத்தில், இவன் ஒரு லிங்கத்தைக் கண்டெடுத்தான். அந்த லிங்கத்துடன் பல இடங்களுக்கும் அலைந்தான். செல்லும் வழியெல்லாம் பூஜை செய்தான்.தெற்கிலுள்ள ஒரு காட்டிற்கு வந்து, அதை அங்கேயே ஸ்தாபித்து வழிபட்டு, அங்கேயே விட்டுச் சென்று விட்டான். பிறகு, அந்த லிங்கத்தை புதர் மூடி விட்டது.பிற்காலத்தில், வீரமார்த்தாண்ட பாண்டியன் என்ற மன்னர், மான் வேட்டைக்காக, இங்கு வந்தார். அம்பு எய்த போது, அது லிங்கம் இருந்த புதரில் பட்டது. அங்கு வந்து பார்த்தபோது, புதருக்குள் இருந்த லிங்கத்தின் மீது அம்பு பட்டு, சிறிது சேதமடைந்தது தெரிய வந்தது.அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து, கோவிலும் எழுப்பினான், மன்னன். இந்த சிவனுக்கு புடார்ஜுனர் என, பெயர் சூட்டப்பட்டது. சிவாலயங்களில் மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்ஜுனம் ஆகிய மூன்று கோவில்கள், மருதத்தை தல விருட்சமாகக் கொண்டவை. இங்குள்ள சிவனை, மல்லிகார்ஜுனர், மத்தியார்ஜுனர், புடார்ஜுனர் என்பர்.வடக்கே ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலத்தில், மல்லிகார்ஜுனர்; மத்தியிலுள்ள, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரர்; தெற்கிலுள்ள திருப்புடைமருதுார், புடார்ஜுனர் கோவில்கள் மூன்றிலும், மருத மரமே தல விருட்சம். திருப்புடைமருதுாரின் பெருமையறிந்த கரூர் சித்தர், சிவனை வழிபட வந்த போது, தாமிரபரணியின் மறு கரையில் இருந்த கோவிலுக்கு செல்ல வழியின்றி, வெள்ளம் ஓடியது. அப்போது கோவில் பக்கமிருந்து பூக்களின் நறுமணம் கமழ்ந்து வந்தது. உடனே அவர், 'நாறும்பூநாதா' என அழைத்து, பாடல் பாடினார்.அந்த இனிய கீதத்தைக் கேட்க, சிவன் தலை சாய்த்தாராம். இதனால், இந்த லிங்கம் சாய்வாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அம்பாள் கோமதியின் சிலை, ருத்ராட்சத்தால் ஆனது மற்றொரு விசேஷம்.திருநெல்வேலி - பாபநாசம் சாலையில், 30 கி.மீ., துாரத்திலுள்ளது வீரவநல்லுார். இங்கிருந்து பிரியும் சாலையில், 6 கி.மீ., சென்றால், திருப்புடைமருதுாரை அடையலாம்.தி. செல்லப்பா