உள்ளூர் செய்திகள்

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (6)

முன் கதைச்சுருக்கம்: 'டாக்சி' டிரைவர் மகுடபதியை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லுமாறு கான்ஸ்டபிளிடம் உத்தரவிட்டு, தருண் மற்றும் புவனேஷை, 'சைபர் க்ரைம் பிராஞ்ச்'சுக்கு அழைத்து போனார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன். அங்கிருந்த, நேத்ரா, முகிலாவின் மொபைல் போனின் ஐ.எம்.ஈ.ஐ., எண்ணை புவனேஷிடம் கேட்க, அவன் கூறினான். அதை வைத்து, முகிலா இருக்கும் இடத்தை கண்டறிய முயன்றாள், நேத்ரா. சூழ்நிலையை இயல்பான நிலைமைக்கு கொண்டு வர, புவனேஷை ஒரு சிறு புன்னகையோடு பார்த்தாள், நேத்ரா.''முகிலாவோட மொபைல் போனின், ஐ.எம்.ஈ.ஐ., எண்ணை நீங்க, 'சேவ்' பண்ணி வெச்சிருந்தது, பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஏன்னா பொதுவா நம் நாட்ல, 100 கோடிக்கும் மேலான மொபைல் போன்கள் உபயோகத்தில் இருந்தாலும் அதை உபயோகிக்கிற பல பேருக்கு, போனின், ஐ.எம்.ஈ.ஐ., நம்பர் தெரியாது.''அந்த நம்பர் இருந்தாத்தான் காணாமல் போன ஒரு போனையோ, நபரையோ கண்டுபிடிக்க முடியும் என்ற உண்மையும், அவங்களுக்குத் தெரியாது. மேலும், முகிலாவோட மொபைல்போன், ஐ.எம்.ஈ.ஐ., நம்பரை நீங்க, 'சேவ்' பண்ணி வெச்சிருக்கிறதுக்கு, ஏதாவது காரணம் இருக்கா?''கண்கள் கலங்க தலையசைத்தான், புவனேஷ்.''இருக்கு மேடம்... கடந்த மூணு வருஷத்துல, முகிலா ரெண்டு மொபைல் போன்களைத் தொலைச்சிருக்கா... ஆறு மாசத்துக்கு முன், முகிலாவோட, 'பர்த்டே' அன்னிக்கு புது மொபைல்போன் வாங்கி பரிசா கொடுத்தேன். ''கொடுக்கும்போதே, 'இந்த மொபைல் போனை நீ தொலைச்சாலும், அதைக் கண்டுபிடிச்சுடலாம்'ன்னு சொல்லி, போனோட ஐ.எம்.ஈ.ஐ., நம்பரை என் மொபைல்போன்ல, 'சேவ்' பண்ணி வெச்சுகிட்டேன்... அப்படி நான், 'சேவ்' பண்ணி வெச்சது, இன்னிக்கு இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு உதவும்ன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை.''ஒரு பெருமூச்சோடு கையமர்த்தினாள், நேத்ரா.''மிஸ்டர் புவனேஷ்... நீங்க கவலையேபடாதீங்க... இன்னிக்கு தொலை தொடர்புத்துறை ரொம்ப நவீனமாகி இருக்கு. முகிலாவும் அவங்களோட மொபைல்போனும் இருக்கிற இடம் எதுன்னு இன்னும் ஒரு சில நிமிஷங்களில் நமக்கு தெரிஞ்சுடும்.''முத்துக்குமரன் திறமையான போலீஸ் அதிகாரி. உங்க முகிலாவை எப்படியும் கண்டுபிடிச்சு கொடுத்துடுவார். நீங்க கவலையே படவேண்டாம்.''தயக்கமான குரலோடு குறுக்கிட்டான், தருண்.''மேடம்... இந்த, ஐ.எம்.ஈ.ஐ., நம்பரைப் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன். என் மொபைல்போனுக்கான இந்த ஐடென்டி நம்பர் வேணும்ன்னா நான் என்ன செய்யணும்?''''வெரி சிம்பிள்... உங்க மொபைல்போனிலிருந்து, 'ஸ்டார், ஹேஷ்டாக், ஜீரோ, சிக்ஸ், ஹேஷ்டாக்'ன்னு, 'டைப்' பண்ணினா போதும். உங்களுக்கான, ஐ.எம்.ஈ.ஐ., ஐடென்டி நம்பர் வந்துடும். ஒரு 10 நிமிஷ வேலைதான் இது. ஆனா, இதைப் பண்றதுக்கு யாருக்குமே நேரம் இருக்காது,'' என, நேத்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கம்ப்யூட்டருக்குப் பக்கத்தில் இருந்த, நெட்வொர்க் மொபைல்போன், 'பீப்' சத்தத்தை தொடர்ச்சியாய் வெளிப்படுத்தியது.மொபைல்போனை எடுத்து, 'ஸ்பீக்கரை ஆன்' செய்து பேசினாள், நேத்ரா.''திஸ் ஈஸ் சைபர் க்ரைம் மொபைல்.''''மேடம்... மொபைல் ஜி.பி.எஸ்., டவர் நெட்வொர்க் ஆபரேட்டர் சத்யன் பேசறேன்.''''சொல்லுங்க சத்யன்... முகிலாவோட மொபைல் போன் எங்கேயிருக்குன்னு, 'ட்ரேஸ்' பண்ண முடிஞ்சுதா?''''சாரி மேடம்.''''சாரியா... ஏன், என்னாச்சு?''''மேடம்... அந்த மொபைல் போன் இப்ப எங்கே இருக்குன்னு, 'ட்ரேஸ்' பண்ண ஜி.பி.எஸ்., மூலமாய் எல்லா டவர்களையும், 'க்ளோஸ் சர்க்யூட்டு'க்கு கொண்டு வந்து பார்த்துட்டேன்.''முகிலாவோட போன் எந்த டவரோடும், 'கனெக்ட்' ஆகலை... எனக்கே ஆச்சரியமாய் இருக்கு. அந்த ஐடென்டி நம்பரை மறுபடியும் ஒரு தடவை சொல்லுங்க, எதுக்கும், 'செக்' பண்ணிக்கிறேன்.''தனக்குப் பக்கத்தில் இருந்த துண்டுச்சீட்டை எடுத்து ஒவ்வொரு எண்ணாய் படித்தாள், நேத்ரா.''நம்பர் சரிதான் மேடம்... ஆனா, டவரோட, 'கனெக்ட்' ஆக மாட்டேங்குது.''''மிஸ்டர் சத்யன்...''''சொல்லுங்க மேடம்.''''கொஞ்சம் தாமதமானாலும் பரவாயில்லை... ஜி.பி.எஸ்., சிக்னல்சை கொஞ்சம் பொறுமையா பாருங்க. சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் தான் ஆச்சு... எப்படியும், 'ட்ரேஸ் - அவுட்' பண்ணிடலாம்.''மொபைல்போன் மட்டும் காணாம போயிருந்தா பரவாயில்லை... அந்தப் பெண்ணையும் காணோம்; நிலைமை உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.'' ''புரியுது மேடம்.''''நான் உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன்,'' என்றவள், தனக்கு முன் உட்கார்ந்திருந்த மூவரையும் பார்த்தபடி மொபைல்போனை அணைத்தாள். கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், ''சத்யன் சொன்னதைக் கேட்டு, 'அப்செட்' ஆயிடாதீங்க. அவர் மிகவும் திறமைசாலி. எப்படியும் முகிலாவோட போனை, 'ட்ரேஸ் - அவுட்' பண்ணிடுவார்...''சில இடங்கள்ல மொபைல்போன் டவரின், 'நெட்வொர்க் கவரேஜ், கெபாசிடி' மோசமாய் இருக்கலாம். காத்திருக்கலாம், நல்ல செய்தி கிடைக்கும்.''புவனேஷ் கண்ணீரை அடக்கியபடி, தலைகுனிந்து கொள்ள, அவன் தோள் மீது ஆதரவாக கை வைத்தான், தருண்.''இது மாதிரியான நேரங்கள்லதான் நாம தைரியமா இருக்கணும், புவனேஷ்.''''என்னால முடிலை தருண்... அந்த டாக்சி டிரைவராலத்தான் முகிலாவுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கணும். அவனை விசாரிக்கிற விதத்துல விசாரிச்சாலே போதும், முகிலா எங்கே இருக்கான்னு தெரிஞ்சுடும்.''அதுவரைக்கும் எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், புவனேஷை ஏறிட்டார்.''யூ ஆர் கரெக்ட்... என் மனசுக்குள்ளேயும் அந்த எண்ணம்தான் ஓடிகிட்டிருக்கு. முகிலாவோட மொபைல்போன் எந்த ஏரியாவில் இருக்குன்னு, 'லொகேட்' பண்ணிட்டா டிரைவரை விசாரிக்கும்போது, அந்தத் தகவல் நமக்கு உதவியாய் இருக்கும்.''முத்துக்குமரன் மேற்கொண்டு பேசும்முன் அவருடைய மொபைல்போன் ஒலித்தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.மறுமுனையில் கான்ஸ்டபிள் சிவராமன்.மொபைல்போனை இடது காதுக்கு ஒற்றி, ''சொல்லு,'' என்றார்.''சார்... நீங்க இப்ப, 'சைபர் க்ரைம்ஸ் ஆபீஸ்'லதானே இருக்கீங்க?''''ஆமா.''''நீங்க முக்கியமான மீட்டிங்ல இருந்தா அப்புறமா பேசறேன், சார்.''''விஷயம் என்னான்னு சொல்லுய்யா.''''சார்... உங்க, 'வாய்ஸ் ப்ரேக்' ஆகுது.''''இப்ப கேக்குதா?''''மறுபடியும், 'ப்ரேக்' ஆகுது சார்.''''மொதல்ல உன் மொபைல்போனை மாத்தித் தொலை... நோக்கியா காலத்து போனை நீ என்னிக்குத்தான் துாக்கியெறிவியோ?''''சார்... நீங்க பேசறது கேட்கலை.''''இருய்யா... நான் வெளியே வந்து பேசறேன்,'' என்றபடி முத்துக்குமரன், நாற்காலியிலிருந்து எழுந்து, நேத்ராவிடம் ஒரு, 'சாரி' சொல்லி, வெளியே வந்தார்.''இப்ப கேட்குதாய்யா?''''இப்ப... 'வாய்ஸ் க்ளீயரா' இருக்கு சார்.''''உன் ஓட்டை மொபைல்போனுக்காக நான் வீதியில் வந்து பேச வேண்டியிருக்கு... விஷயம் என்னான்னு சொல்லுய்யா.''''சார்... அந்த டிரைவர் மகுடபதியை விசாரிக்கிற விதத்தில், நாம கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்.''''ஏன், இப்ப என்ன பிரச்னை?''''பிரச்னையாகும் போலிருக்கு சார்.''''விஷயத்தை சொல்லுய்யா.''''சார்... அந்த, 'லிட்டில் ஸ்டார் டாக்சி' உரிமையாளர், வேறு யாருமில்லை. பழைய எம்.எல்.ஏ., இதயச்சந்திரன். மகுடபதியை நாம கைது பண்ணி ஸ்டேஷனுக்கு கூட்டி வந்த தகவல் தெரிஞ்சதுமே, போன் பண்ணினார். போனை நான் தான், 'அட்டெண்ட்' பண்ணினேன். கண்டபடி திட்டிட்டார். காது குடுத்து கேட்க முடியலை.''''நீ பதிலுக்கு ஏதும் பேசலையா?''''பேசாம இருப்பேனா... டிரைவர் மகுடபதிகிட்டே ஏதோ தப்பு இருக்குன்னு சொன்னேன். அவர் அதை ஒத்துக்கலை. இன்னும் அரைமணி நேரத்துக்குள்ளே ஸ்டேஷனுக்கு வர்றதா சொல்லியிருக்கார். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை, சார்.''''இப்ப அந்த இதயச்சந்திரன் எந்த கட்சியில் இருக்கார்?''''ஆளுங்கட்சி சார்.''''நிச்சயமா தெரியுமா?''''தெரியும் சார்... போன மாசம், சி.எம்., கோயமுத்துார் வந்தப்ப, அவர் கழுத்துல ஆளுயர மாலையைப் போட்டு, கட்டிப்பிடிச்சு புகைப்படத்துக்கு, 'போஸ்' கொடுத்தாரே.''''சரி... அந்த முன்னாள் எம்.எல்.ஏ., வந்தார்ன்னா, சேரைப் போட்டு உட்கார வை... நான் வந்துடறேன்.''''சீக்கிரமா வந்துடுங்க சார்... அந்த இதயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., மட்டுமில்லை... எம்.ஏ., - எம்.எல்., படிச்சுட்டு வக்கீலா வேற, 'ப்ராக்டீஸ்' பண்ணியிருக்கார்.''''ஏன்ய்யா இப்படி பயப்படறே!''''எப்படி சார் பயப்படாம இருக்க முடியும்... அந்தப் பொண்ணு முகிலா காணாம போனது, 'சாதாரண மிஸ்சிங்' பிரச்னை மாதிரி எனக்குத் தெரியலை... இது ஒரு பெரிய விவகாரமா மாறப் போகுது.''''யோவ் புலம்பாதே... போய் வேலையைப் பாரு.'' மொபைல்போனை அணைத்து, சட்டை பாக்கெட்டுக்குள் போட்டு, மறுபடியும், 'சைபர் க்ரைம்' ஆபிசில் நுழைந்து நாற்காலியில் சாய்ந்தார், முத்துக்குமரன்.தனக்கு முன்பிருந்த கம்ப்யூட்டரில் எதையோ உன்னிப்பாய் பார்த்தபடி, 'மானிட்டரிங்' செய்து கொண்டிருந்தாள், நேத்ரா.''மேடம்... முகிலாவோட மொபைல்போன் இருக்கிற இடத்தை, 'ட்ரேஸ் - அவுட்' பண்ண இன்னும் எவ்வளவு நேரமாகும்?'' கேட்டார், முத்துக்குமரன்.''எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீங்க காத்திருக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு ஸ்டேஷனில் ஏதாவது முக்கியமான வேலை இருக்குதா?'' என்றாள், நேத்ரா.''எஸ் மேடம்,'' என்று தலையசைத்த முத்துக்குமரன், நிதானமான குரலில், ''அந்த, 'லிட்டில் ஸ்டார் டாக்சி' உரிமையாளர், இன்னும் ஒரு அரைமணி நேரத்துல ஸ்டேஷனுக்கு வரப்போறதாய் தகவல் கொடுத்திருக்காராம். அவர் ஒரு, முன்னாள் எம்.எல்.ஏ.,''இப்ப ஆளுங்கட்சியில் இருக்கார். அவர், ஏதாவது பிரச்னை பண்ணலாம்ன்னு கான்ஸ்டபிள் சந்தேகப்பட்டு போன் பண்ணினார். புவனேஷும், தருணும் இங்கேயே இருக்கட்டும்... நான் போயிட்டு வந்துடறேன்.''இதைக்கேட்டதும், பதட்டப்பட்டு எழுந்தான், புவனேஷ்.''நோ சார்... நானும், தருணும் உங்க கூட வர்றோம். அந்த டாக்சி உரிமையாளருக்கும், முகிலா காணாம போன விஷயத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.''தருணும் தலையாட்டி, ''ஆமா சார்... எனக்கும் அந்த சந்தேகம் வருது. நாம மூணு பேரும் ஸ்டேஷனுக்கு போவோம். டிரைவரை காப்பாத்தறதுக்காக, டாக்சி உரிமையாளரே போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றார்ன்னா வலுவான காரணம் இருக்கணும்.''''உங்களுக்கு அந்த சந்தேகம் இருந்தா, என் கூட ஸ்டேஷனுக்கு வாங்க... அவர் என்ன சொல்றார்ன்னு கேட்போம்.''இருபது நிமிட பயணத்தில், ஸ்டேஷன் வாசலில் ஜீப் நிற்க, மூவரும் இறங்கினர்.முன்புற அறையில் உட்கார்ந்திருந்த கான்ஸ்டபிள் சிவராமன், முத்துக்குமரனைப் பார்த்ததும் வேகமாய் வந்து, 'கிசுகிசு'ப்பான குரலில், ''சார்... அந்த இதயச்சந்திரனும் இப்பத்தான் வந்தார். உங்க அறையில உட்கார வெச்சிருக்கேன்.''புவனேஷும், தருணும் பின் தொடர்ந்து வர, வேக நடையில் தன் அறைக்குள் நுழைந்தார், முத்துக்குமரன்.பளீரென்ற வெள்ளை வேஷ்டியிலும், சட்டையிலும் நிரம்பியிருந்த அந்த நடுத்தர வயது இதயச்சந்திரன், நாற்காலியிலிருந்து எழுந்து மரியாதை நிமித்தமாக, ''வணக்கம் இன்ஸ்பெக்டர்,'' என்றார்.பதிலுக்கு வணக்கம் சொன்ன முத்துக்குமரன், தன் நாற்காலியில் சாய்ந்தார். புவனேஷும், தருணும் அறையின் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த நீளமான பெஞ்சில் உட்கார்ந்தனர்.சில விநாடிகளுக்குப் பின், ''சொல்லுங்க சார்,'' என்றார், முத்துக்குமரன்.'டை' அடித்த மீசைக்கு கீழே, ஒரு வெள்ளைக்கோடு போட்ட மாதிரி பல் வரிசை தெரிய சிரித்தார், இதயச்சந்திரன். ''சொல்றதுக்கு என்ன இருக்கு, இன்ஸ்பெக்டர். முகிலாங்கிற பெண் காணாம போன விஷயத்துல, டிரைவர் மகுடபதி மேல வீணா சந்தேகப்பட்டு அவனை அடிச்சதோடு அல்லாம, 'லாக் - அப்'புக்கும் அழைத்து வந்துட்டீங்க. இது எந்த வகையில் நியாயம்... ஒருத்தரை கைது பண்றதுக்கு முந்தி முழுமையா விசாரிக்க வேண்டாமா?''''விசாரிச்சோம்... ஆனா, உங்க டிரைவர் மகுடபதி சொன்னது நம்பும்படியாய் இல்லையே!''''அவன்தான் முகிலாவை ஏதாவது பண்ணி இருக்கணும்ன்னு நினைக்கிறீங்களா?''''ஆமா.''''மகுடபதி மேல சந்தேகப்பட்ட நீங்க, முகிலா மேல ஏன் சந்தேகப்படலை?''''முகிலாவை எதுக்காக சந்தேகப்படணும்?''இதயச்சந்திரனின் பார்வை புவனேஷ், தருண் பக்கமாய் திரும்பியது.''உங்க ரெண்டு பேர்ல யார் புவனேஷ்?''''நான் தான்,'' என்றான், புவனேஷ்.''தம்பி... முகிலாவுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுல இஷ்டமா?''''இது என்ன கேள்வி... இஷ்டமில்லாமலா புறப்பட்டு வந்தா?''இதயச்சந்திரன் சிறு சிரிப்போடு குரலைத் தாழ்த்தி, ''தம்பி... நான் ஒரு உண்மை சொன்னா, நீ தப்பா நினைச்சுக்க மாட்டியே?''அவரை உஷ்ணமாய்ப் பார்த்தான், புவனேஷ்.''என்ன சொல்லப் போறீங்க?''இதயச்சந்திரன் இன்னமும் குரலைத் தாழ்த்தி சொன்னதைக் கேட்ட, புவனேஷின் இதயம் தடம் புரண்டது.— தொடரும்ராஜேஷ்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !