எருமை தந்த பெருமை!
கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்துாருக்கு பலமுறை சென்று, சூரனை, வேலன் வெல்லும் சூரசம்ஹார காட்சியைத் தரிசித்திருப்பீர்கள். சூரனுக்கு சாகா வரம் அளித்து, அவனை ஆட்கொண்டது போல, நம்மையும் ஆட்கொள்வார் என்று நம்பியிருப்பீர்.சம்ஹாரம் என்பதில், 'சம்' என்றால், அழகு என்று பொருள். 'ஹாரம்' என்றால் மாலை. சூரனை, தன்னுடன் மாலை போல் சூடிக் கொண்டவர் அல்லது சூரனை வென்று, தெய்வானைக்கு மாலை சூடியவர் என்றெல்லாம் அறிந்திருப்பீர் ஆனால், செந்துாரானின் அருளை, அவனது கொடி மரமே பெற்றுத் தந்து விடும் என்பதை, நீங்கள் அறிவீர்களா! மனித உடம்பில் உள்ள, ஆறு ஆதாரங்களின் அடிப்படையில், அதற்குரிய ஆறு தலங்களை, யோகிகள் உருவாக்கி அமைத்தனர். அதில், முருகனின் படை வீடுகளில் திருச்செந்துார் இரண்டாவது இடமாக திகழ்கிறது.நக்கீரர் இயற்றிய, 'திருமுருகாற்றுப் படை' நுாலில், இத்தலத்தை, 'திருச்சீரலைவாய்' என்று குறிப்பிட்டுள்ளார். சீராக அலைகள் வந்து மோதுமிடம் இது. அரசன், படைகளோடு தங்குமிடமே, படை வீடு. அந்த வகையில், முருகன், சூரசம்ஹாரம் செய்வதற்காக, படையோடு தங்கிய தலம் இது. 'ஜெயம்' என்பதற்கு, வெற்றி என்று பொருள். போர் நிகழ்த்திய முருகன், இங்கு வெற்றி பெற்றதால், திருச்செந்துாருக்கு,'ஜெயந்திபுரம்' என்று பெயர் இருந்தது. 'ஜெயந்திபுர மகாத்மியம்' என்ற நுாலில், இத்தலத்தின் மகிமை வரையறுக்கப்பட்டுள்ளது. முருகனைத் தரிசித்தவர்கள், வாழ்வில், வெற்றி வாகை சூடுவர் என்பது, ஐதீகம். ஒரு கோவிலுக்குள் நுழைந்ததும், பலி பீடம், அந்த தெய்வத்துக்குரிய வாகனம் மற்றும் கொடி மரம் என, வரிசையாக இருக்கும். இதில், கொடி மர தரிசனம் விசேஷமானது.குடும்பஸ்தர்கள், வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கவும், துறவிகள் மேலான உலகத்தை அடையவும், கொடி மரத்தை வணங்குவர். திருச்செந்துாரில், கொடி மரம் அமைய, எமதர்மனின் வாகனமான, எருமை காரணமாக இருந்தது. ஒரு சமயம், திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம், முறிந்து விட்டது. பக்தர்கள் வருந்திய நேரத்தில், எருமை ஒன்று, கடலுக்குள் நீந்திச் சென்று, அதில் மிதந்த, சந்தன மரக்கிளையைத் தள்ளி வந்தது. அதை வியப்புடன் பார்த்த பக்தர்கள், அந்த மரக்கிளையை பயன்படுத்தி, புதிய கொடி மரம் செய்து, பிரதிஷ்டை செய்தனர்.இந்த கொடி மரத்தை வணங்குவோருக்கு, மரண பயம் இருக்காது. பயம் இல்லாதவன், எதிலும் வெற்றிபெறுவான்.இந்த வரலாறு, பகழிக்கூத்தரின், 'திருச்செந்துார் முருகன் பிள்ளைத்தமிழ்' நுாலில் இடம் பெற்றுள்ளது.திருச்செந்துாருக்கும், சந்தனத்துக்கும் முக்கிய தொடர்பு உண்டு. ஒரு நாடோடி பாடலில், 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...' என்னும் பாடல் வரி இடம் பெற்றுள்ளது. முருகன் வீற்றிருக்கும் இப்பகுதிக்கு, சந்தன மலை என்றும் பெயர் இருக்கிறது.பதினைந்தாம் நுாற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர், திருப்புகழில், 'சந்தனப் பைம்பொழில் தண் செந்தில்' என்று, சந்தன சோலையாக, திருச்செந்துார் இருந்ததைக் குறிப்பிடுகிறார். தற்போது, சந்தன மரம் எதுவும் இல்லை. ஆனால், பிரசாதத்தில் திருநீறு போல், சந்தனத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு.திருச்செந்துாரில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வோர், கோவில் எல்லையைத் தாண்டக் கூடாது என்பதும், விசேஷ தகவல். கிழக்கில் கடற்கரை, மேற்கில் துாண்டு கை விநாயகர் சன்னிதி, வடக்கில் வள்ளியம்மன் குகை, தெற்கில் நாழிக் கிணறு ஆகியவற்றை, ஆறு நாட்களுக்கு கடக்கக் கூடாது.உண்ணா நோன்பு, பேசா நோன்பு, பகலில் ஒருவேளை உண்பது ஆகிய வழிமுறைகளை, பக்தர்கள் பின்பற்றுகின்றனர். சூரசம்ஹாரம் முடிந்த பின், பழச்சாறு அருந்தி, விரதம் முடிக்க வேண்டும்.திருச்செந்துார் சென்று, கொடி மரத்தை வணங்கி, தீர்க்காயுளுடன் வாழுங்கள்.- தி. செல்லப்பா