வாடிகன்!
கிறிஸ்துமஸ் அன்று, உலகின் பல்வேறு இடங்களிலிருந்து கிறிஸ்தவர்கள் வாடிகன் நகருக்கு செல்வதுண்டு. காரணம், அது கத்தோலிக்க மதத்தின் தலைமையகம்.இத்தாலியின் தலைநகரம் ரோம்; அதற்குள் அமைந்திருக்கும் நகரம் தான் வாடிகன்.வாடிகனுக்கு ஏன் இந்த சிறப்பு என்றால், இது, தூய பீட்டரின் புகழை சொல்லும் இடம். 'எனக்கு பின், நீ தான் சர்ச்சை வழி நடத்த வேண்டும்...' என்று, தூய பீட்டரிடம் குறிப்பிட்டாராம், இயேசுநாதர். ரோம் நாட்டின் முதல் போப் ஆண்டவர், தூய பீட்டர்.ரோம் நகரம் பற்றி எரிந்த போது, பிடில் வாசித்ததாக கூறப்படும் மன்னரான நீரோவால் கொல்லப்பட்டார், தூய பீட்டர். அவர் இறந்த இடத்தில், அவருக்கு கல்லறையை எழுப்பினர், அவரது சீடர்கள்.பின், இத்தாலியில் அரசியலும், மதமும் மாறி மாறி ஆட்சி புரிந்த நிலையில், 'இத்தாலியின் தலைநகரம் ரோம் என்பதை போப் ஒப்புக் கொள்வார். பதிலுக்கு, வாடிகன் தனி நாடாக இத்தாலியால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அது போப்புக்கு முழுமையாக அளிக்கப்படும்...' என்ற உடன்படிக்கையில், இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.வாடிகனுக்கு பல நுழைவு வாயில்கள் உண்டு. அவற்றை, காவல் காப்பது சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த காவலர்கள். இவர்கள், கண் கவர் உடைகளை அணிந்திருப்பர்.வாடிகனின் உள்ள மியூசியங்கள், மனதை கொள்ளை கொள்கின்றன. இங்குள்ள, 'பியடா' எனும் சிற்பம், மிக சிறப்பு. இந்த சிற்பத்தில், மேரி மாதா, இயேசுவை, மடியில் வைத்திருப்பது போன்றும், சிலுவையில் அறையப்பட்டு, இறந்த மகனை, சுமந்தபடி இருக்கும் மேரி மாதாவின் சோகமும், அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் மட்டும் தான், பிரபல சிற்பியான, மைக்கேல் ஆஞ்சலோ, தன் கையெழுத்தை பொறித்துள்ளார்.அதேபோன்று, வாடிகனிலுள்ள, 'சிஸ்டைன்' பேராலயத்தின் கூரையில், வரையப்பட்டுள்ள அழகான ஓவியங் களைப் பார்க்கும் போது, 'எப்படித் தான் இந்த கோள வடிவ மேற்புறங்களில் வரைந்தனரோ...' என்ற வியப்பு ஏற்படுகிறது.நீண்ட தாடியும், வெள்ளை உடையும் கொண்ட கடவுளின் கை விரல், உலகின் முதல் மனிதனான ஆதாமின் கை விரலை தொடுவது போன்ற ஓவியம், உலகப் புகழ் பெற்றது.மேலும், வாடிகன் அரண் மனையில், ஒவியர், ரபேலின் கை வண்ணத்தில் காணப்படும் ஓவியங்களும் மனதை மயக்குகின்றன. உயரமான தூண்கள் அமைந்த நீண்ட மண்டபத்தை, 'பசிலிகா' என்பர். உலகின் மிகப் பெரிய கிறிஸ்தவ பசிலிகா, வாடிகனிலுள்ள தூய பீட்டர் பசிலிகா தான்.முதலாவது போப்பான, தூய பீட்டர் புதைக்கப்பட்ட இடம், 96 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. அங்கு அமர்ந்து ஜபம் செய்யும் உரிமை, நிகழ் கால போப்புக்கு மட்டுமே உண்டு.கிறிஸ்துமஸ் அன்று இரவு, வாடிகனிலுள்ள தூய பசிலிகாவின் உட்புறம், பிரமாண்டமான பிரார்த்தனை கூட்டம் நடைபெறம். அப்போது, பசிலிகாவின் பால்கனியில் தோன்றி, நல்வாக்குகளை கூறுவார், போப்; அது, வெளியே, மிகப் பெரிய திரை கொண்ட, 'டிவி'க்களில் ஒளிபரப்பாக, மக்கள் அதைக் கேட்டு குதூகலம் கொள்வர்!உலகிலேயே, மிக அதிகமான வசூலை குவிக்கும் மத தலம், வாடிகன்; அடுத்தது தான் திருப்பதி.அருண் சரண்யா