உள்ளூர் செய்திகள்

நவீன தூதுவர்களை நடத்த வேண்டிய விதம்!

'சார்... எங்க முதலாளி, இதை உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க...''வாங்க வாங்க... ரொம்ப சந்தோஷம்; வெயில் நேரத்துல, இதுக்காக மெனக்கெட்டு, இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க; என்ன சாப்பிடுறீங்க... சார்கிட்டே சொல்லுங்க... நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்னு...'இது, காட்சி ஒன்று; அடுத்த காட்சியை பார்ப்போமா...'இப்படி தான் சாவகாசமாக வர்றதா... இதுக்கு போயா, என்னை இவ்வளவு நேரம் காக்க வச்சே...'நடந்த இரு வேறு வரவேற்புகளை பற்றி, ஏதோ ஒன்றை கொண்டு வந்த அந்த நபர்கள், தன் முதலாளியிடம் போய், என்ன சொல்லியிருப்பர் என்று, கற்பனை செய்து பாருங்கள்...இரண்டாம் கட்சிக்காரர், 'இனிமே, அந்த வீட்டுக்கு என்னை அனுப்பாதீங்க சார்... கொஞ்சங் கூட மரியாதை இல்ல; தவிச்ச வாய்க்கு, தண்ணி வேணுமான்னு கூட கேக்கலை. எரிஞ்சு விழறார்...' என்று சொல்வார்.தூதுவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு, உலக அளவில் நிறைய சம்பிரதாயங்கள் உள்ளன.தூதுவனாக சென்ற அனுமனை, ராவணன், கவுரவமாக நடத்தியிருந்தால், ராமாயண கதை, ஒருவேளை வேறு விதமாக முடிந்திருக்குமோ என்னவோ!ஒருவர் சார்பாக வரும் பிரதிநிதிகளை, மூலவர் அளவிற்கு இல்லாவிட்டாலும், அவருக்கு அடுத்தபடியான நிலையில் வைத்து, சிறப்பாக நடத்த வேண்டும். தாங்கிப் பிடிக்கவோ, சிவப்பு கம்பளமோ விரிக்க வேண்டாம். அடிப்படை அன்பை, மனித நேயத்தையாவது, காட்ட வேண்டும்.இப்படி இவர்களுக்கு தரப்படும் அடுத்தபட்ச மரியாதை கூட, பல மடங்கு சிறப்பாக பேசப்படும். இது, இம்மூவருக்கும் இடையிலான நல்லுறவை நன்கு வளர்க்கும்; மாறாக, பிரதிநிதியாக வந்தவர், மட்டமாக நடத்தப்படும் போது, அனுப்பியவருக்கும், அடைந்தவருக்குமான அடிப்படை உறவுகள் கூட, சிதிலப்பட்டு விடும். இது தேவையா?ஒருவருக்கு, மற்றவர் பற்றி ஏற்படும் கருத்துருவாக்கம், பெரும்பாலும், திரிசங்கு சொர்க்கம் போன்றது. அதாவது, அது விண்ணிலும் நில்லாமல், மண்ணிலும் நில்லாமல், இடையில் தொங்கியபடி இருக்கும். மாறாக, இந்த கருத்துருவாக்கத்தை, இத்தூதுவரானவர், மிக அருமையாக உயர்த்தி பிடித்து, உறுதி செய்வார்.'நீங்க அனுப்பி வச்ச இடத்தில போய், வேலையை முடிச்சுக் குடுத்தேன். ரொம்ப தங்கமான மனுஷன் சார்... கேட்ட கூலியை கொடுத்தார். வேலை ரொம்ப திருப்தின்னு இதை அன்பளிப்பாகக் குடுத்தார். நாட்டில இந்த மாதிரி மனுஷங்களும் இருக்காங்கன்னா, நம்ப கூட முடியல...' என்று, ஒரு மேஸ்திரி, தன்னை சிபாரிசு செய்தவரிடம் சொல்லும் போது, அனுப்பி வைத்தவர், இப்படி எண்ணுவார்...'நாம போட்ட கணக்கு சரி; இவரும் நாம நினைச்ச மாதிரியே சொல்றாரே...' என வியப்பார்.'சார்... நீங்க அனுப்பின மேஸ்திரி, சரியான, 'பிராடு!' இவ்வளவு காலமா, அவன்கிட்ட நல்லா ஏமாந்திருக்கீங்க...' என்று, அறிமுகம் செய்து கொண்டவர் சொல்லும் போது, ஒருவரை பற்றிய நம் கருத்துருவாக்கம், இங்கே சிதறிப் போகிறது.இரு நபர்களுக்கு இடையிலான நபர்களிடம், கவனம் தேவை. சம்பந்தப்பட்டவர்களை பற்றிய கருத்துகளை, அப்படியே சொல்வர் என, எதிர்பார்க்க இயலாது. கூட்டியோ, குறைத்தோ, மிகைப்படுத்தியோ சொல்லக்கூடும். ஆனாலும், இவர்களது வாக்குமூலங்களை, மற்றவர்கள் அலட்சியப்படுத்தாமல், சொல்வதை அப்படியே நம்பி விட வாய்ப்பு உள்ளது.இவர்கள் நன்கு, கவுரவமாக நடத்தப்பட்டால், சரிவர உபசரிக்கப்பட்டால், மரியாதை தரப்பட்டால், நம்மை பற்றி, உரியவர்களிடம் பிரமாதப்படுத்துவர்.இந்த, 'அபிப்ராய உருவாக்கி'களை நன்கு பயன்படுத்திக் கொள்பவர்கள், கெட்டிக்காரர்கள்!- லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !