உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

மயங்கி விழும் மாணவிகள்!நண்பர் ஒருவர், அரசு மேல்நிலைப் பள்ளியில், முதுகலை பட்டதாரி ஆசிரியராக உள்ளார். காலை இறை வணக்க கூட்டத்தின் போது, அவ்வப்போது, ஒரு சில மாணவிகள் மயக்கமடைவது தொடர்ந்து நடைபெற்றுள்ளது.பெண் ஆசிரியர்கள் மற்றும் நர்ஸ் உதவியுடன் மயங்கி விழும் மாணவிகளை, பரிசோதித்து பார்த்ததில், சிலர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட மாணவிகளின், பெற்றோரை அழைத்து, இச்சம்பவம் குறித்து பெண் ஆசிரியைகளின் மூலமாக அறிவுறுத்தும் செயலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை பகிர்ந்து கொண்டார்.மேலும், இப்படி எல்லை தாண்டும் மாணவிகள், 10 முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்களாக இருக்கின்றனர். அரசுப் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பாடம் நடத்துவது கடும் சிரமமாக இருக்கிறது என்றார்.தம் பிள்ளைகளை கண்காணிக்க முடியாத பெற்றோரின் பிள்ளைகள் தான் பாதை மாறிப் பயணிக்கின்றனர். வயது தப்பு செய்ய வைக்கிறது. செய்த தவறை மறைக்க தெரியாமல் தலைகுனிய வேண்டிய நிலை. பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள், பருவ வயதுப் பெண்களுக்கு எய்ட்ஸ், செக்ஸ் பற்றி இலைமறைக் காயாகக் கற்றுத் தரவேண்டிய காலம் இது. பள்ளி மாணவியர், புத்தகம் சுமக்க வேண்டிய வயதில், கருவைச் சுமக்கலாமா?பள்ளிகளில் பாலியல் கல்வி கட்டாயம் வர வேண்டும். மாணவியரின் நடவடிக்கைகளை பெற்றோர், உறவினர் மற்றும் உடன் பிறந்தோர் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் கல்வி இருக்கலாம்; கருக்கலைப்பு இருக்ககூடாது. தெளிந்த மனதுடன் மாணவ - மாணவியர் கல்வி பயில, சரியான வழி காட்டுதலும், ஆலோசனையும் காலத்தின் கட்டாயம்.— ஆ. தங்கப்பன், திண்டுக்கல்.புதுமையான விருந்தோம்பல்!சமீபத்தில், என் தோழியின் தங்கைக்கு, திருமணம் நடந்தது, திருமணப்பத்திரிகையில், 'ரயிலில் அல்லது பஸ்சில் வருபவர்கள், இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட பின் கிளம்பவும்' என்று அச்சிடப்பட்டிருந்தது. நான் ரயிலுக்கு கிளம்பும் முன், அந்த நம்பருக்கு போன் போட்டு, நான் கிளம்பும் விவரத்தை சொன்னேன். 'திருமண மண்ட பம் நகரின் அவுட்டரில் இருப்பதால், ரயிலில் இருந்து இறங்கியதும், எங்கள் வண்டிகள் நிற்கும், அதில் ஒன்றில் ஏறி வாருங்கள்...' என்று, போனில் விவரம் கூறினர்.அது போலவே, ரயில்வே ஸ்டேஷன் வாசலில், மணமக்கள் பெயர் எழுதிய ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. அதில், எங்களுடன் திருமணத்துக்கு வந்த இன்னும் சிலரும் ஏறிக் கொண்டனர். திருமணம் இனிதே முடிந்து, விருந்தினர்கள் கிளம்பும் போதும், தங்கள் வண்டிகளிலேயே ஏற்றி போய் பஸ், ரயில் நிலையங்களில் இறக்கி, வழியனுப்பினர்.சில திருமணங்களுக்குப் போய் வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருப் போம். அந்த சங்கடங்களைத் தவிர்க்க, அழகாக ஏற்பாடு செய்திருந்தனர். விருந்தினர்களை மதித்து, அழைத்து வந்து, வழியனுப்பிய திருமண வீட்டாரின் முயற்சி பாராட்டுக்குரியது. இந்த புதுமையான விருந்தோம் பலால், திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பளீரிட்டது. மணமக்களை மணமார வாழ்த்திச் சென்றனர்!— உ.குர்ஷீத் பாத்திமா, ராமநாதபுரம்.மொபைல் போன் பரிசளிக்க போகிறீர்களா?என் நண்பனின், இளைய சகோதரர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இறுதி ஆண்டின், பிரிவு உபச்சார விழாவின் போது, பிறந்த நாள் கொண்டாடிய தன் வகுப்பு சிநேகிதிக்கு, பிறந்த நாள் பரிசாக, ஒரு விலையுயர்ந்த மொபைல் போனை வாங்கி, தன் பெயரிலேயே ஒரு புது, 'போஸ்ட் பெய்டு' கனெக்ஷன் பதிவு செய்து, புல்பேட்டரி சார்ஜ் ஏற்றி, அந்த சிம் ஆக்டிவேட் ஆன பின், அதை கிப்ட் பேக் செய்து, அப்பெண்ணிற்கு பரிசளித்தான். மொபைலில் இருந்து, தன்னை அழைத்து, நன்றியை விடிய விடிய சொல்வாள் என்ற பேராவல்.இவன், பரிசளித்து விட்டு வீட்டிற்கு வந்து, பூட்டிய தன் அறையில் விடிய விடிய காத்திருந்ததுதான் மிச்சம்; பிறந்த நாள் பெண்ணிடம் இருந்து, ஒரு மிஸ்டு கால் கூட வரவில்லை.ஒரு வாரம் பொறுத்து பொறுத்து பார்த்த இவன், கடைசியாக, அந்த சிநேகிதியின் நம்பரை அழைத்து, இதுபற்றி விசாரிக்க, அவள் அவளுடைய பரிசை, அன்று பிற மாணவ, மாணவியரின் மற்ற பரிசுகளோடு சேர்த்து வைத்ததாகவும் ஆனால், விலையுயர்ந்த எந்த மொபைலுமே, தனக்கு பரிசாக வரவே இல்லை என்றும் கூறிவிட்டாள்.இவன், உடனே தான் புதிதாக பதிவு செய்த, மொபைல் நம்பருக்கு அழைத்தால், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. விழா நடந்தது, ஒரு தனியார் கான்டீனில். பிரிவு நாள் விழா அன்று, யாரோ மொபைலை திருடி விட்டனர் போலும். ஒரு சில நாட்களில், இவன் வீட்டிற்கு, அந்த புதிய மொபைல் நம்பருக்கு உரிய பில் வந்தது. அதிகமில்லை சிற்சில ஆயிரங்கள் தான்.அரண்டு போய் இவன், பில்லில் இருந்து, சரியாக ஆறு நாட்களில் அழைக்கப்பட்ட நம்பர்களை மீண்டும் அழைத்துப் பேசினான், அனைத்து நம்பர்களும், பலான பெண்களின் நம்பர்கள். திருடியவன், அந்த பெண்களுடன் விடிய விடிய உரையாடி இருக்கிறான்.மேலும், பிரச்னைகளை தவிர்க்க இவன், விதியை நொந்து கொண்டு பில்லை கட்டி விட்டு, அந்த மொபைல் நம்பரை, உடனே மாற்றி விட்டான். வாசகர்களே... மொபைலை பரிசளிக்கும் போது சர்வ ஜாக்கிரதையாக இருங்கள்!— இ.ராஜராஜன், விருதுநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !