இது உங்கள் இடம்!
கலிகாலம்!சமீபத்தில், நண்பர் ஒருவரின் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால், திருமண நிகழ்ச்சிகளை அகன்ற திரையில், ஒளிபரப்பினர். தொடர்ந்து, மணமக்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, கை கோர்த்தபடி நடப்பது, ஓடுவது மற்றும் ஒருவரையொருவர் தள்ளி, கீழே விழுவது என, இது மாதிரியான சேட்டைகளை ஒளிபரப்பினர். இதைப் பார்த்து, பலரும் முகம் சுளித்தனர்.திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன், இதை படம் பிடித்துள்ளனர். ஒருவேளை ஏதாவது காரணத்தால், திருமணம் நின்று விட்டால், அப்பெண்ணின் கதி? அப்படி ஏதும் நடக்கக் கூடாது என்பதுதான் எல்லாருடைய விருப்பம். விதி மாற்றி எழுதிவிட்டால்...நாகரிகம் என்ற பெயரில் நடந்த இந்த அநாகரிகத்தை என்ன சொல்வது?பெரியவர்களாவது யோசித்திருக்கலாமே!— எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.முன் யோசனையோடு செயல்பட்ட மனைவி!அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற என் நண்பருக்கு, குழந்தைகள் கிடையாது. சமீபத்தில் அவரைப் பார்க்க, அவரது வீட்டுக்குச் சென்றிருந்த போது, அவர் மனைவி, அவரிடம், 'அரிசியை களைஞ்சு வையுங்க. புளிய கரைச்சு வச்சுட்டீங்களா... காய் நறுக்கியாச்சா...' என, பல வித உத்தரவுகளை போட்டுக் கொண்டிருந்தார்.இதை கவனித்த நான், சிரித்துக் கொண்டே, 'என்ன நடக்கிறது இங்கே?' என்றேன். அதற்கு அவர் மனைவி, 'எங்க ரெண்டு பேருக்கும் வயசாகிடுச்சு. எந்த நேரத்தில, என்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாது. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகிட்டா, இவரை யார் கவனிச்சுப்பா... குறைந்தபட்சம், சமையல் தெரிஞ்சாலாவது யாரையும் எதிர்பார்க்காம, மிச்ச காலத்தை நிம்மதியா ஓட்டிட முடியும். அதான், சமையல் செய்ய கத்துக் கொடுக்கிறேன்...' என்றார்.அவரது முன் யோசனையை பாராட்டியதோடு, என் மனைவியிடமும், எனக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுக்குமாறு கூறியுள்ளேன்.இந்த யோசனை, எந்தளவுக்கு உதவுமென்பதை அனுபவத்தில் தான், உணர முடியும். தேவைப்பட்டவர்கள் இதைக் கடைப்பிடிக்கலாமே!— எஸ்.பி.பாலு, சென்னை.மின்சார பகிர்மான பெட்டிக்கு வலை!எங்கள் பகுதியில், பல மின்சார பகிர்மான பெட்டிகள் உள்ளன. அவைகளின் எல்லா பக்கங்களிலும், விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுவதுடன், அப்பில்லர்களில் எழுதியுள்ள, 'அபாயம்' எச்சரிக்கை அறிவிப்பின் மீதும் ஒட்டுகின்றனர். இதனால், 'சுவிட்'சை இயக்குவதற்கோ அல்லது பழுது நீக்குவதற்கோ வரும் மின்சார தொழிலாளர்கள், ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை கிழிக்கும் போது, எச்சரிக்கை வார்த்தைகளும், அப்பகிர்மான பெட்டியில் அடித்துள்ள, பெயின்ட்டும் உரிந்து விடுகிறது. எதற்காக பெயின்ட் அடித்தனரோ, எச்சரிக்கை செய்தனரோ, அது, பயனற்று போய் விடுகிறது.இதனால், சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க, நல்ல எண்ணம் கொண்ட எங்கள் ஏரியாவைச் சேர்ந்த ஒருவர், மின்வாரியத்தின் அனுமதி பெற்று, பெட்டியிலிருந்து, ஒரு அங்குல இடைவெளியில், எல்லா பக்கத்திலும், தனித் தனி வலை கதவை போட்டு விட்டார். இந்த வலைக்கு மேல் காகிதம் ஒட்டாது; அப்படியே ஒட்டினாலும், பிய்ந்து விடும். அதோடு, எச்சரிக்கை தகவலும், பெயின்ட்டும் பாதிப்பு அடையாது.இதுதான், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போலும்! இதை, எல்லா மின் பகிர்மான பெட்டிகளிலும் செய்யலாமே!— என்.சுப்ரமணியம், சென்னை.