உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

சித்த மருத்துவத்தில் போலிகள்... உஷார்!கடந்த வாரம், எங்கள் ஊரில் உள்ள, 'அலோபதி' மருத்துவரை சந்தித்தேன். அப்போது அவர், சித்த மருத்துவம் என்ற பெயரில், போலி மருத்துவர்கள் உலவி வருவதாக கூறி, 'நான் இல்லாத போது, என், 'அலோபதி' கிளினீக்கிற்கு வந்த ஒரு நபர் செவிலியரிடம், குறிப்பிட்ட வலி நிவாரண மாத்திரைகள் நிறைய தேவைப்படுவதாக கூறியுள்ளார். சந்தேகமடைந்த செவிலியர், இரு நாட்கள் கழித்து வருமாறு கூறி, நான் வந்தவுடன் விஷயத்தை என்னிடம் கூறினர். 'இரு நாட்களுக்கு பின் வந்த அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர், சித்த மருத்துவம் என்ற பெயரில், 'அலோபதி' மாத்திரைகளை வாங்கிச் சென்று, கலப்படம் செய்து விற்று வந்தது தெரிய வந்தது. அந்நபரை எச்சரித்து, அனுப்பினோம்...' என்றார். வாசகர்களே... சித்த மருந்துவம் மேற்கொள்ள நினைத்தால், உண்மையான சித்த மருத்துவரை அணுகுங்கள்!— அ.செந்தில்குமார்,சூலூர்.இப்படியும் ஒரு கடைக்காரர்!சமீபத்தில், ஆதார் அட்டையையும், ரேஷன் கார்டையும் நகல் எடுக்க, போட்டோ காபி கடைக்கு சென்றிருந்தேன். அங்கு அமர்ந்திருந்தவர், ஒரு பதிவேட்டை நீட்டி, என் கணவர் பெயரையும், அவரின் கைபேசி எண்ணையும் எழுதச் சொன்னார். எழுதிய பின் தான், நகல் எடுத்து தந்தார்.அதற்கான காரணத்தை கேட்ட போது, 'இங்க, நகல் எடுக்க வர்றவங்க, அவசரத்துல, 'ஒரிஜினலை' இங்கேயே மறந்துட்டு போயிடறாங்க. அந்த மாதிரி நேரங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் சொல்லி, திருப்பிக் கொடுக்கத் தான், போன் நம்பர் வாங்குறேன். ஆண்கள்ன்னா அவங்க போன் நம்பரையும், பெண்கள்ன்னா, அவங்க வீட்டு ஆண்கள் போன் நம்பரையும் எழுதச் சொல்றேன்...' என்றார். மற்ற, கடைக்காரர்களும், இதை கடைப் பிடிக்கலாமே!— நர்மதா விஜயன், உளுந்தூர்பேட்டை.முன் யோசனை முத்தண்ணாவாக இருக்கலாமே!என் உறவினர் ஒருவர், கோவில்களுக்கு பாத யாத்திரை செல்வது, வழக்கம். நடக்கும் போது, ஊன்றுகோலாக, ஒரு மூங்கில் கழியை பயன்படுத்துவார். இம்முறை அவர் பயன் படுத்திய ஊன்றுகோல் வித்தியாசமாக இருக்கவே, அதைப் பற்றி விசாரித்த போது, அவர் கூறியது... 'பல வண்ணங்களில் உள்ள ரிப் ௌக்டர் ஸ்டிக்கர்களை இந்த ஊன்று கோலில் ஒட்டியுள்ளேன். பாத யாத்திரையின் போது, பகலில் சாலையின் ஓரங்களில், எதிர்புறம் தான் நடப்பேன்; அப்போது தான், எதிரே வரும் வாகனங்களை பார்த்து, ஜாக்கிரதையாக நடக்க முடியும்; ஆனால், இரவு நேரங்களில், அப்படி நடக்க முடியாது. முகப்பு விளக்குகளால், கண்கள் கூசும். இடது புறம் தான் நடக்க முடியும். அப்போது, பின்னால் இருந்து வரும் வாகனங்களை, நாம் பார்க்க முடியாது. அச்சமயத்தில், இந்த கைத்தடியில் உள்ள, ரிப் ௌக்டர் ஸ்டிக்கர்கள், நம்மை வாகனங்களுக்கு காட்டிக் கொடுத்து, காப்பாற்றும். அதுமட்டுமல்லாது, இதேமுறையில், கால்நடைகளுக்கும், இப்போது கழுத்துப் பட்டைகள் அணிவிக்கின்றனர்...' என்றார்.இது, நல்ல விஷயமாக தோன்றியது. பாதசாரிகள் மட்டுமின்றி, இரு சக்கர வாகன ஓட்டிகளும், விளக்குகளை மட்டும் நம்பாமல், இப்படி 'ஸ்டிக்கர்' ஒட்டி வைத்தால், பெரும் விபத்துகளை தவிர்க்கலாமே!— ப.கீதா, போத்தனூர்.'பார்ட்டி' உளறல்!ஆறு மாதங்களுக்கு முன், அறிமுகமான சிலர், என்னிடம் வந்து, 'நாங்கள் உற்சாகபான, 'பார்ட்டி' ஏற்பாடு செய்துள்ளோம்; நீங்களும் கலந்து கொள்ள வேண்டும்...' என்றனர். முதலில் மறுத்தேன். விடாப்பிடியாக கேட்கவே, இறுதியில், ஒத்துக் கொண்டு, பார்ட்டியில் கலந்து கொண்டேன்.சில நாட்களுக்கு பின், நான் குடித்து விட்டு உளறும், 'வீடியோ' காட்சிகள், 'பேஸ்புக்'கில் வெளியாகின. இதைப் பார்த்து, நெருங்கிய நண்பர்கள் துக்கம் விசாரித்தனர். நான், அந்த நண்பர்களை அழைத்து கண்டித்தேன். இப்போதெல்லாம், நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்கள் யாராவது உ.பா., விருந்துக்கு அழைத்தால், போவதில்லை!— எஸ்.வெங்கடேசன், கடலூர்.பெண் என்றால் மட்டமா?பள்ளியில், உடன் பணியாற்றும் ஆசிரியருக்கு, இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதை கேள்விப்பட்டு, சக ஆசிரியர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்றோம். இன்முகத்துடன் வரவேற்ற ஆசிரியருக்கு வாழ்த்துகளை தெரிவித்த போது, அங்கிருந்த ஒரு சிலர், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததற்கு ஆறுதல் கூறுகிறேன் பேர்வழி என்று, 'இனி, இந்த சொத்தை யார் சாப்பிடப் போறாங்களோ...' என்றும், 'உங்க கஞ்சத்தனத்திற்கு தான் ரெண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது...' என்று கூறி சிரித்தனர். இதைக் கேட்டதும், அவரின் மனைவி வேதனை அடைந்தார்.நண்பர் அமைதியாக, 'பிரசவங்கிறது பெண்ணிற்கு மறுபிறப்பு போல. ஒரு கருவை சுமந்து, ஆரோக்கியமாய் பெற்றெடுப்பதால் தான், எல்லாரும் தாய்மையடைந்த பெண்ணை பார்க்க வர்றாங்க. குழந்தைகள்ல ஆண், பெண் என, பேதம் பார்ப்பது நம் பார்வையில் தான் இருக்கு. இன்று முதியோர் இல்லத்தில் இருக்கிறவர்களுக்கு ஆண் குழந்தையே இல்லையா...' என்றார். கேலி பேசியோர் வாயடைத்து போயினர்.முன்பு, பெண் குழந்தைகளை தாழ்வாய் நினைத்து, கருவில் கண்டறிந்தும், பிறந்த சிசுக்களையும் கொன்றனர். ஆனால், இனறோ, உலக அரங்கில், எல்லாத் துறைகளிலும் சாதிப்பது பெண்கள் தான். இதை, கேலி பேசுவோர் நினைத்துப் பார்க்க வேண்டும்!— ப.மணிகண்ட பிரபு, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !