உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

அன்பான அணுகுமுறை!உடல் நலமில்லாது, மருத்துவமனையில் இருந்த என் மாமியாருடன் தங்கி இருந்தேன். பொதுவாக, மருத்துவமனைகளில், மன இறுக்கம், வருத்தம் மற்றும் கவலை படிந்த முகங்களைத் தான் பார்க்க முடியும். இதற்கு நேர்மாறாக, அன்பாக பேசுவதும், இனிமையாக பழகுவதுமாக இருந்தார், நர்ஸ் ஒருவர்.ஒவ்வொரு நாளும் அன்றலர்ந்த மலராய் உள்ளே வந்து, 'ராத்திரி நல்லா தூங்கினீங்களா?' என்று, நோயாளியை மட்டுமல்ல, உடன் தங்கியிருப்பவர்களையும் அக்கறையான குரலில் விசாரிப்பார்.நோயாளியின் தோளை அணைத்து, மலர்ந்த முகத்துடன், 'எப்படிம்மா இருக்கீங்க... சரியா தூங்க முடியலயா... இப்ப, நான் தர்ற மருந்தை சாப்பிடுங்க; வலி குறைஞ்சு, நல்ல தூக்கம் வரும்...' என, மென்மையாக, நம்பிக்கை ஊட்டும் விதமாய் பேசுவார்.வசூல் ராஜா படத்தில் வருவது போன்ற கட்டிப்பிடி வைத்தியத்தை, இங்கு கண்கூடாக பார்த்தேன். வெறுமனே, கடமைக்காக மாத்திரைகள் தராது, அதை எதற்கு தருகின்றனர் என விளக்கி, நம்பிக்கை ஊட்டி, 'உங்கள சுத்தி இத்தனை நல்லவங்க இருக்கும் போது கவலைப்படலாமா... நம்பிக்கையா இருங்க; நல்லதே நடக்கும்...' என, ஒவ்வொரு நோயாளியிடமும் சொல்வார்.மருந்து, மாத்திரை மட்டுமே நோயை குணப்படுத்தாது; அன்பான அணுகுமுறையும், 'பாசிடிவான' வார்த்தைகளும் தான், நோயின் தீவிரத்தை குறைக்கும் என்பதை புரிந்து நடந்த அந்த நர்சை, இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது. இவரைப் போன்றவர்களால் தான், ப்ளாரென்ஸ் நைட்டிங்கேல், மதர் தெரசா போன்று மிளிர முடியும்!— மல்லிகா குரு, சென்னை.செலவைக் குறைத்த கோடைமழை!சமீபத்தில், பழனியில் உள்ள என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். சில நாட்களுக்கு முன், அங்கு, நன்கு மழை பெய்திருந்ததாக, செய்தித்தாளின் வாயிலாக அறிந்திருந்தேன்.உறவினரிடம் பேசிக் கொண்டிருந்த போது, 'கோடைமழை, எனக்கு சில ஆயிரங்களை மிச்சப்படுத்தி விட்டது...' என்றார்.'எப்படி?' என்றதற்கு, எட்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் சேமிப்பு கீழ்மட்ட தொட்டியை, திறந்து காண்பித்தார்; அதில், நீர் நிரம்பி இருந்தது. 'மாடியில் இருந்து வெளியேறும் தண்ணீரை அப்படியே தொட்டியில் சேகரித்து, 'குளோரின் பவுடர்' கலந்து, சூரிய ஒளி படாதபடி, மூடி வைத்திருக்கிறேன். தொட்டி நிரம்பியது போக, வெளியேறிய தண்ணீர், ஆழ்துளைக்கிணறு அருகில், மழை நீர் சேமிப்பு தொட்டிக்கு (உறிஞ்சு குழி) அனுப்பப்பட்டது...' என்று உற்சாகமாக விளக்கினார்.அத்துடன், மழைநீர் சேமிப்பு, உறிஞ்சு குழிக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமா அதே அளவு, தொட்டிகளை தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்றார். தற்போதுள்ள வறட்சியின் அவலம் கருதி அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும்.பொய்க்கும் வான் மழை, நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகிறது.— வி.எஸ்.ராமு, திண்டுக்கல்முத்திரை திருவிழா!என் நண்பனின் கிராமத்தில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவிற்கு, வீட்டுக்கு இவ்வளவு என்று வரி விதிப்பர். வழக்கமாக, 500 ரூபாய் வரிக்கு பதிலாக, இந்த ஆண்டு, 1,000 ரூபாய் வரி விதித்து, வசூல் செய்வதை கேள்விப்பட்டு, 'இந்த ஆண்டு திருவிழாவுக்கு, பெரிய கச்சேரி, செண்டை மேளம் என ஏற்பாடு செய்து, திருவிழாவை, 'ஜாம் ஜாம்' என்று நடத்தப் போறீங்களா?' என்று அவனிடம் கேட்டேன்.அதற்கு அவன், 'வழக்கத்திற்கு மாறாக, இந்த ஆண்டு, திருவிழாவை மிகவும் எளிமையாக நடத்த இருக்கிறோம். வரி வசூலில் வரும் பணத்தில், பொக்லைன் இயந்திரம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, எங்கள் கிராமத்திற்குள் இருக்கிற எல்லா சீமைக் கருவேல மரங்களை, வேரோடு அகற்ற, முடிவு செய்திருக்கோம்...' என்றான்.அவனது கிராமத்தினரை நினைத்து, மனதிற்குள் ஒரு சபாஷ் போட்டேன். இதை, அனைத்து கிராமத்தினரும் பின்பற்றலாமே!— அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !